கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
இந்தியாவில் "மேக் இன் இந்தியா " திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் நீர் மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரி நீர் மூழ்கி கப்பலை நேற்று(14 டிசம்பர் 17) மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படைக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மும்பையில் உள்ள மசகான் டாக் கட்டுமான நிறுவனத்தில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய கடற்படைக்காக இத்துடன் சேர்த்து ஆறு மூழ்கி கப்பல்கள் 350 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. அதில் முதலில் செயல்பாட்டிற்கு வருவது ஐ.என்.எஸ் கல்வாரி தான். இதன் கட்டுமான பணியானது 2009ல் தொடங்கப்பட்டு 2015ல் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 12 இலட்ச ஊழியர்களின் உழைப்பு இதன் பின்னணியில் உள்ளது. அதுமட்டுமில்லாது இதன் 30சதவீத பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். 120 நாட்கள் பலகட்ட சோதனைகளை வென்று தற்போது செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது .

ஐ.என்.எஸ் கல்வாரி சிறப்பம்சங்கள்
1. இந்தியாவின் முதல் ஸ்கார்பீன் (டீசல் மற்றும் மின்சாரம் மூலம், காற்றல்லாத உந்து சக்தி உடைய) வகை நீர் மூழ்கி கப்பல் இதுதான்.
2.இதில் 18 நீர் மூழ்கி குண்டுகளை எடுத்துக்கொண்டு 1,020 கி.மீ தொலைவுவரை நீருக்கடியில் செல்லக்கூடியது
3. 67.5 மீ நீளமும், 12.2மீ உயரமும், 6.2மீ விட்டமும் உடையது.
4.டீசல் இன்ஜின்(1250kw) மற்றும் மின் மோட்டார் இரண்டிலும், அதிக சத்தம் இன்றி இயங்கக்கூடியது .
5.நீருக்கு மேல்பரப்பில் 22கி.மீ வேகத்திலும், நீருக்கடியில் 37கி.மீ வேகத்திலும் செல்லக்கூடியது.
6. அதிகபட்சமாக கடலுக்கடியில் 350 மீ ஆழம்வரை செல்லக்கூடியதான இதன் எடை 1,565 டன்கள்.
7.SM-39 வகை ஏவுகணைகள் உள்ளதால் கடலுக்கடியிலிருந்தும் மிக துல்லியமாக இலக்கை தாக்க முடியும்.
8.இதில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தால் கப்பல் இருக்கும் இடத்தை ரேடாரால் கண்டுபிடிக்க முடியாது.
9.இதன் தாக்கும் மற்றும் தேடும் கருவிகளில் இன்ஃபிராரெட் (infrared) மற்றும் குறைந்த ஒளியிலும் பார்க்கக்கூடிய கேமிராக்கள், லேசர்கள் ஆகியன உள்ளன.
10. இதில் 360 பேட்டரி செல்கள் உள்ளன, இதன் ஒவ்வொன்றின் எடையும் 750 கிலோ ஆகும்.
இந்தியப்பெருங்கடலில் உள்ள மிக ஆபத்தான சுறாவின் பெயர்தான் கல்வாரி (tiger shark). மிகவும் ஆபத்தானது என்பதை குறிக்கும் வகையில் இப்பெயரை பெற்றுள்ளது இந்த நீர்மூழ்கிக்கப்பல். மேலும் ஐந்து நீர் மூழ்கி கப்பல்களை 2020 க்குள் இந்திய கடற்படைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-ஹரிஹரசுதன்