Skip to main content

"30 ஆண்டு தவம்...அமைச்சர் கனவு" வேலூரில் வெல்வாரா ஏ.சி.சண்முகம்..?

Published on 20/07/2019 | Edited on 23/07/2019

நாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். வேலூர் தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் திமுக இருக்கிறது. ஏனெனில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில்  திமுக கூட்டணி வெற்றிபெற்றது. தமிழகத்தில் ஒரே சக்தியாக மக்கள் எங்களை நினைப்பதாலேயே எங்களுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக முன்னணியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். வேலூர் தேர்தலில் வெற்றி பெற்று அது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைமை உள்ளது.

அவ்வாறு இல்லாமல், திமுக தோல்வி அடையும் பட்சத்தில், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிகூட மோடிக்கு எதிராக விழுந்த வாக்குகளால் கிடைத்ததுதான் என்று எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும். வெற்றிக்கு தான்தான் காரணம் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளார். அதற்காகவே கிட்டதட்ட 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவர் வேலூரில் களமிறக்கிவிட்டுள்ளார். அதையும் தாண்டி வேலூர் தொகுதி திமுகவுக்கு சற்று சாதகமான தொகுதியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவை சேர்ந்தவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தேர்தல் கணக்கு எல்லாம் திமுகவுக்கு சாதகமாக கூறப்பட்டாலும், நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெற்ற சூலூர், சாத்தூர் உள்ளிட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், சட்டமன்ற இடைத்தர்தலில் அதிமுகவுக்கும் வாக்களித்த சம்பவமும் நடந்துள்ளது. எனவே பழைய தேர்தல் வரலாறுகள் எல்லாம், கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் எடுபடாமல் உள்ளது.
 

 

 by election in vellore



திமுக தரப்புக்கே இத்தகைய நெருக்கடி இருந்தால், அதிமுக தரப்புக்கு இதைவிட அதிமான நெருக்கடி இருக்கும் என்று யாராவது நினைத்தால் கண்டிப்பாக அவர்கள் ஏமாந்துதான் போவார்கள். ஏனெனில், நாடாளுமன்ற தேர்தலில் ஏன் தோல்வி அடைந்தீர்கள் என்ற கேள்விக்கே, சட்டமன்ற தேர்தலி்ல் 9 தொகுதிகளில் எங்களுக்கு தானே மக்கள் வாக்களித்தார்கள் என்று கூறி கேட்பவர்களுக்கு மாரடைப்பு வரவைத்த முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், வேலூரில் தோல்வி அடைந்தால், அங்கு அதிமுக போட்டியிடவில்லையே என்று கூறி நடையை கட்டுவார்கள் என்பதே உண்மை நிலவரம். அந்த வகையில், வேலூரில் ஏசிஎஸ் வெற்றி என்பது அவரின் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்தால்தான் உண்டு. அதையும் தாண்டி ஏசிஎஸ் வெற்றி பெற்றால் அவரின் மேலிட செல்வாக்கு காரணமாக அவர் அமைச்சர் ஆகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் அமைச்சரானால் அது தங்களுக்கு அவமானம் ஆகிவிடுமே என்று கூட அதிமுக பெருந்தலைகள் யோசிப்பதாகவும் ஒரு டாக் ஓடுகிறது. ஆனாலும், 'அமைச்சர்' கனவில் ஏசிஎஸ் தொடர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏசிஎஸ்க்கு அமைச்சர் பதவி கொடுப்பது மத்திய அரசுக்கும் பெரிய தலைவலியாக இருக்க வாய்ப்பில்லை. 'வெள்ளை காக்கை' கதையை போன்றுதான் நடக்கும். தலையை ஆட்டுவதை தாண்டி அவர் ஒன்றும் செய்துவிட வாய்ப்பில்லை.

அதுவே, பன்னீர் மகனுக்கோ, அன்புமணிக்கோ அமைச்சர் வாய்ப்பை தந்தால் சில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக கையை முறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு கையை முறித்துவிடும் என்பது தனிக்கதை என்றாலும், நாடாளுமன்றத்தில் அரசை எதிர்த்தாவது சில நிமிடங்கள் பேசுவார்கள். ஆனால், ஏசிஎஸ் விஷயத்தில் அந்த பேச்சுக்கே இடமில்லை. அந்த வகையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவும் சான்ஸ் இருக்கிறது. அதையும் தாண்டி அவர் வேலூர் தொகுதியின் முன்னாள் உறுப்பினராக இருந்துள்ளார். 1984ம் ஆண்டு தேர்தலி்ல் அதிமுக சார்பாக வேலூரில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். ஆரணி தொகுதியில் இருந்து ஒரு முறை சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, சண்முகத்தின் அரசியல் அனுபவம் என்பது தமிழக முதல்வர் எடப்பாடியின் அனுபவத்தை விட அதிகம்.கூவத்தூர் அனுபவத்தை தவிர. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றம் செல்லாத அவர் இந்த முறை கண்டிப்பாக சென்றே ஆகவேண்டும் என்று தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் ஏசிஎஸ், முதல்முறை வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்ற செய்தி கேட்டதும் வீட்டின் கேட்டில் முட்டிக்கொண்டு அழுதார் என்றால், அவர் தேர்தல் வெற்றியை எந்த அளவுக்கு விரும்பினார் என்பதற்கு அதுவே போதுமான சாட்சி ஆகும். அத்தகைய தேர்தல் வெற்றிக்காக அவர் பிரச்சாரத்தின் போது புதிய பந்தை வீச உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் என்னை வெற்றிபெற வைத்தால் நிச்சயம் நான் மத்திய அமைச்சர் ஆவேன், தொகுதிக்கு நலத்திட்டங்களை கொண்டுவருவேன் என்று கூற உள்ளாராம். வேலூர் வெயிலுக்கு 'ஏ.சி.எஸ்' ஓகே என்று மக்கள் நினைப்பார்களா அல்லது வெப்பம் எங்களுக்கு புதிதல்ல என்று 'கதிர்' ஆனந்துக்கு கைகொடுப்பார்களா என்று இன்னும் 20 நாட்களில் தெரியவரும்.