பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
இரவில் சுதந்திரத்தை பெற்றாலும், பெற்றோம் இரவில்தான் அனைத்து அறிவிப்புகளும் வருகின்றன. கேட்டால் "இந்தியா வேற லெவலுக்கு சென்றுகொண்டிருக்கிறது" என்கிறார்கள். ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியா எப்படி எதிர்கொண்டதோ அதேபோல தமிழ்நாடு தற்போது பேருந்து கட்டணத்தை ஏற்றியதன் மூலம் பெரும்பாடுபடுகிறது . போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தினால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஏழாயிரம் கோடியை தருகிறோம் என்று வாக்களித்துவிட்டு, அந்த சுமையை தமிழ்நாட்டில் உள்ள ஏழுகோடி மக்களின் முதுகில் தூக்கி வைத்துவிட்டது இந்த அரசாங்கம். இதனை பற்றி மக்களின் கருத்தை நக்கீரன் பதிவு செய்தது மக்களின் பதில்கள்.

நான் நாகப்பட்டினத்திலிருந்து வருகிறேன் இங்கு பயணம் செய்வதற்கு குறிப்பிட்ட அளவு பணம்தான் எடுத்து வந்தேன். ஆனால் நேற்று இரவே
பேருந்து கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை.

"உப்பு மூட்டை கனமாக உள்ளது என்று தண்ணீரில் போட்ட கதை"ப்போல் உள்ளது. தினமும் கூலி வேலை செய்பவர்கள் என்ன செய்வார்கள், சம்பாதிக்கும் ஐம்பது, நூறு,கூட பேருந்து கட்டணத்திற்கே போய்விடும் இங்கு ஆட்சியாளர்களும் சரியில்லை, அவர்களின் நிர்வாகமும் சரியில்லை.
நாம்தானே தேர்ந்தெடுத்தோம். மிக்சி ,கிரைண்டர் என்று இலவசமாக கொடுத்ததால்தானே ஓட்டுபோட்டோம். அந்தக் காசை இப்படிதான் வசூலிப்பார்கள். இனிமேல் இரட்டை இலை, உதயசூரியன் இந்த இரண்டுக்கட்சிக்கும் ஓட்டு போடக்கூடாது போட்டா இப்படித்தான்.

பேருந்து ஊழியர்களின் போராட்டத்தின் விளைவுதான் இது அவர்களுக்கு தரவேண்டியதை நம்மிடமிருந்து வசூலித்து தருகிறார்கள். அவர்களுக்கு சம்பளத்தை கூட்டினாலும் பரவாயில்லை ஆனால் அதையும் செய்யமாட்டார்கள். ஏன்டா இந்தியாவில் பிறந்தோம் என்பதுபோல் உள்ளது. அவுங்க போராட்டம் பண்ண மாறி நாமும் பண்ண வேண்டும்.
நாங்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். இப்போ கிட்டத்தட்ட 75 சதவீதம் பேருந்து கட்டணம் ஏறியுள்ளது. அமைச்சர்கள் எல்லாம் கார்களில் சென்று விடுவார்கள். நாங்கள் பஸ்சில்தானே போகவேண்டும். வேறு என்ன செய்ய முடியும். ஒட்டு போட்டோம் இப்போது அனுபவிக்கிறோம்.

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இரண்டுபேரும் கொள்ளையடிச்சு வீட்ல வச்சிருக்காங்க. எங்க தலையெழுத்து நூறு ரூபாய்க்கு, இருநூறு ரூபாய் கொடுத்து தான் போக வேண்டும். அம்மா ஆட்சினு சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது போதாதுன்னு பி.ஜே.பி தமிழகத்தை சுரண்ட பார்க்கிறது தமிழகத்தில் என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டார்கள். அவர்களுக்கு மீனவன் இறந்தாலும் கவலையில்லை, மாணவன் இறந்தாலும் கவலையில்லை.

திருமங்கலத்திலிருந்து கோயம்பேட்டிற்கு பதினேழு ரூபாய். உண்மையை சொல்லனும்னா வயித்தெரிச்சலா இருக்கு.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு இது சாதாரணம்தான் என்கிறார்கள் ஆட்சியாளர்கள். அந்தந்த மாநிலங்களின் போக்குவரத்து வசதிகளை சென்று பாருங்கள் எடுத்துக்காட்டாக கர்நாடகா பேருந்துகளை சென்று பாருங்கள். காரிலேயே சென்று வருவதால்தான் சுத்தி நடப்பது அவர்களுக்கு தெரியவில்லை. முதல்நாள் ரூ.300க்கு அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் சென்ற நான், இன்று அதே இடத்திலிருந்து சாதாரண பேருந்தில் ரூ.400 கொடுத்து வந்திருக்கிறேன். இங்கு அரசும், சட்டமும் அஃறிணையாக இருப்பதால்தான், ஆள்பவர்கள் அதை மதியாமல் செல்கின்றனர்.
-ஹரிஹரசுதன்