Skip to main content

ரிவால்வர், பிஸ்டல், சிங்கிள் பேரல் கன், டபுள் பேரல்... தூத்துக்குடியில் துப்பாக்கிப் புழக்கம்... பின்னணி!

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

"சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டினால் தூத்துக்குடி அபாயகரமான பகுதியாக திகழ்கிறது. கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநிலம் சார்ந்த பிரச்சனை இல்லை. அது தேசிய பிரச்சனை'' என சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், ராமதிலகம் ஆகியோர் மன வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள அதே வேளையில், கள்ளத்துப்பாக்கியின் உதவியுடன் தனது தம்பியையே சுட்டுக்கொன்ற விவகாரத்தால் கள்ளத்துப்பாக்கிகளின் சந்தை தூத்துக்குடியே என்ற பதட்டம் உருவாகியுள்ளது.

 

billa jegan



"தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கி உரிமங்கள் மொத்தம் 543. இதில் ரிவால்வர், பிஸ்டல், சிங்கிள் பேரல் கன், டபுள் பேரல் கன், சிங்கிள் ரைபிள், டபிள் பேரல் ரைபிள் மற்றும் 22 வகை ரைபிள்கள் ஆகிய வகைகளுக்கு துப்பாக்கி உரிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தவிர டெரிஞ்சர், ரிவால்வர் மற்றும் பிஸ்டல் ஆகிய வகைகளைக் கொண்ட 100-க்கும்  மேற்பட்ட கள்ளத்துப்பாக்கிகள் தூத்துக்குடி மாவட்டத்தை ஆக்ரமித்துள்ளன. போலீஸாருக்கு தெரிந்தாலும் ஏனோ அவர்கள் கண்டுகொள்வதில்லை. வழக்குப் போட்டாலும் நீர்த்துப் போக வைத்துவிடும்'' என ஆதங்கப்படுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

 

jegan brother



சொத்துப் பிரிவினைக்காக தனது தம்பியையே கள்ளத்துப்பாக்கி மூலம் சுட்டுக்கொன்று விட்டு கேரளாவிற்கு தப்பி சென்ற (தி.மு.க.) பில்லா ஜெகனை கைது செய்ததோடு மட்டுமில்லாமல்... அவனிட மிருந்த கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்த மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பாவின் ஸ்பெஷல் டீம் அவனை தனியே வைத்து ஸ்பெஷலாக கவனித்தது. "எனக்கு எதிரிகள் தொல்லை இருப்பதால் துப்பாக்கி தேவைப்பட்டது. முறைப்படி அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் எனக்கு கிடைக்குமா.? ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் என் மேல் உள்ளன. பணமிருந்தால் துப்பாக்கி கிடைக்கும் என்றார்கள். அதுதான் 9 மி.மீ பிஸ்டல் வாங்கினேன். 
 

billa jegan



நான் வாங்கும் போது இந்த துப்பாக்கியோட விலை ரூ.80 ஆயிரம். என்னுடைய தொழில் மற்றும் அரசியல் நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு லட்சக்கணக்கில் லாபம் வேறு.! முதன் முதலில் இந்த நெட் வொர்க்கை அறிமுகப்படுத்தியது தாளமுத்து நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரே.!! அவர் மூலம்தான் துப்பாக்கிகள் விற்பனை செய்யும் ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட பாண்டியனைத் தெரியும். அதன் பிறகு முக்காணி ஆற்றுப்பாலம் நாராயணன் அறிமுகமானார்'' என கள்ளத் துப்பாக்கி சந்தையின் நெட்வொர்க்கை விவரித்திருக்கின்றார் பில்லா ஜெகன். "இது மெல்ல ஓ.சி.ஐ.யூ., க்யூ பிரிவிற்கு கசிய, தாங்களும் விசாரிக்க வேண்டுமென வாய்ப்பு கேட்டுள்ளனர். எனினும், வழக்கை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்துள்ள வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அவர்கள் பக்கம் விசாரணைக்கு அனுப்பவில்லை'' என்கிறார்கள்.

தனிப்பிரிவு அதிகாரி ஒருவரோ, "கள்ளத்துப்பாக்கிகளில் டெரிஞ்சர் வகை ரூ.75 ஆயிரத்திற்கும், ரிவால்வர் வகை ரூ.1.25 லட்சத்திற்கும் மற்றும் பிஸ்டல் வகை துப்பாக்கிகள் ரூ.1.5 லட்சத்திற்கும் விற்பனை யாகின்றன. தூத்துக்குடி சந்தையில் புரளும் அத்தனை துப்பாக்கிகளும் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு, பீகார் மற்றும் கவுகாத்தி வழியாக சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு பின் துறைமுகத்திற்கு வரும் கண்டெய்னர் வழியாக தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படு கின்றன. இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கும் உள்ளது'' என்கிறார்.

மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பாவோ, "இப்பொழுது மீட்டிங்கில் இருக்கின்றேன்'' என்ற ஒற்றைச் சொல்லைக் கூறி கள்ளத் துப்பாக்கி பற்றிய பேச்சை தவிர்க்கின்றார். கள்ளத்துப்பாக்கிகளின் நிலைகுறித்து மதுரை நாகனாகுளம் கார்மேகம் என்பவர் பொது நலன் வழக்கு தாக்கல் செய்ய, அதில் ஆஜராகிய மதுரை வழக்கறிஞர் கண்ணனிடம் பேசினோம். "கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவும், அதுகுறித்து குறிப்பிட்டகால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. உள்ளூர் காவல்துறை விசாரிப்பது உசிதமல்ல'' என்கின்றார் அவர்.