Skip to main content

நீங்க டெஸ்ட் வைக்கிற கொஸ்டீன் தான் டி.என்.பி.எஸ்.சி. கொஸ்டீனா? சிக்கும் முக்கிய புள்ளிகள்...அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

டி.என்.பி.எஸ்.சி.யில் நடந்த மாபெரும் முறைகேட்டில் ஓநாய்களை விட்டுவிட்டு இன்னமும் ஆடுகளையே தேடிக்கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனத்திலேயே கோடிகளில் குதிரைபேரம் தொடங்கிவிடுகிறது. அப்படி குதிரை பேரத்தில் கோடிகளை கொட்டிக் கொடுத்துவிட்டு ஆளுங்கட்சியின் ஆதரவுடன் நியமிக் கப்படும் லாபநோக்க உறுப்பினர்களை விசாரித்தாலே உண்மை வெளிவந்துவிடும்.
 

tnpsc



2016-ஆம் ஆண்டு 11 உறுப்பினர்களை குதிரை பேரம் நடத்தி முறைகேடாக நியமனம் செய்தது அ.தி.மு.க. அரசு. இதனால் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 11 உறுப்பினர்களின் நியமனத்துக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம். இதனால் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றது அ.தி.மு.க. அரசு. அங்கும் அடிதான்.
 

admk



அதிலும் ஓய்வுபெற்ற நீதிபதி ராம மூர்த்தியை கண்டிப்பாக நியமிக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. காரணம், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு பவர்ஃபுல் லான நீதிபதி பதவியில் இருந்த ராம மூர்த்தி... சம்பளமில்லாத, கௌரவப் பதவியான டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் பதவியை பிடிப்பதற்காகவே விருப்ப ஓய்வுபெற்றுவிட்டு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்றால் நீதிபதிக்கான சம்பளத்தைவிட இதில் எந்தளவு சம்பாதிப்பார்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 

tnpsc



2001-2006 ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து வருடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தப்படாமல் இருந்து 2008 தி.மு.க. ஆட்சியில்தான் துணை கலெக்டர், காவல்துறை டி.எஸ்.பி. உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கப் பட்டது. அனைத்து மையங்களும் பழைய வினாத்தாள் முறைப்படி பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக்க… புதிய வடிவில் மாதிரி வினாத்தாள் தயாரித்து கொடுத்தது தி.நகரிலுள்ள பிரபல பயிற்சி மையம். என்ன ஆச்சர்யம்?! அந்த மாதிரி வினாத்தாளைப் போலவே இருந்தது டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிதாக மாற்றப்பட்ட வினாத்தாள்.
 

tnpsc



2016 குரூப் 1 மோசடி அம்பலமான போது இதையெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்ட மத்திய குற்றப் புலனாய்வுத்துறை துணைக்கமிஷனர் மல்லிகா, அந்த பயிற்சி மைய உரிமையாளரைப் பார்த்து, ‘நீங்க டெஸ்ட் வைக்கிற கொஸ்டீன் பேப்பரைத் தான் டி.என்.பி.எஸ்.சி. கொஸ்டீனா தயார்பண்ணி தேர்வு வைக்கிறாங்களா?'’ என்று கேட்டிருக்கிறார். அதே மல்லிகா ஐ.பி.எஸ். தலைமையில்தான் தற்போது குரூப் 4 முறைகேட்டை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கிறது.


அதுபோலவே, அரசுப் பணிகளை விற்பதில் குற்றச்சாட்டுக் குள்ளானவர்தான் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தற்போதைய லோக் ஆயுக்தா உறுப்பினருமான ராஜாராம். நீதிமன்றத்தில் குட்டுவாங்கிய 11 உறுப்பினர்களில் இவரும், மீண்டும் விண்ணப்பித்து உறுப்பினர் ஆனார்.

ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக இருந்த இவர், டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ஆனதும் எந்த பயிற்சி மையத்திலும் பதிவு பெறாத இந்து அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையரின் மகன் குரூப் 1 பதவியான வணிகவரித்துறை ஏ.சி. ஆனது சர்ச்சைக் குள்ளானது. கிண்டி ஏ.சி.யாக இருந்து ஓய்வுபெற்றவரின் மகன் 2017 குரூப் 1 உயர் பதவியான காவல்துறை டி.எஸ்.பி. பதவியை உறுப்பினர் ராஜாராம் மூலம் பிடித்திருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் அருள்மொழி ஐ.ஏ.எஸ். (ஓய்வு) ஒப்புதல் இல்லாமலேயே 2016 குரூப் 1 தேர்வு முடிவுகளை அவசர அவசரமாக வெளியிட்டார் ராஜாராம்.


பல்வேறு குற்றச்சாட்டுக்குள்ளான ராஜாராமுக்கு துணையாக இருந்ததே டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் செகரட்டரி விஜயகுமார் ஐ.ஏ.எஸ்தான் என்ற குற்றச் சாட்டும் எழும்புகிறது. அதாவது, விஜயகுமாரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் முதலமைச்சரின் பர்சனல் செகரட்டரியான மற்றொரு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இருவருமே தெலுங்கர்கள். ராஜாராமும் தெலுங்கர் தானாம். தற்போதுள்ள டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களான பாலுச்சாமியும் சுப்பிரமணியனும் முன்னாள் செகரட்டரி விஜயகுமாரின் ஆசியோடு நிரப்பப் பட்டவர்கள்தான். பாலுச்சாமி, கொங்கு பெல்ட் வழக்கறிஞர். சுப்பிரமணியன், எலக்ட்ரிசிட்டி போர்டிலிருந்து வந்தவர். இவர்களது துணையில்லாமல் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகள் நடக்க வாய்ப்பே இல்லை. வேறு துறைக்குச் சென்றாலும் ராஜாராமும் விஜயகுமாரும் இப்போதும் டி.என்.பி.எஸ்.சி.யில் ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். சேர்மன் அருள்மொழிக்கு இவை தெரிந்திருந்தாலும் கண்டுகொள்வதில்லை.

லஞ்ச ஊழலுக்கு எதிரான சட்டப்பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோ நம்மிடம், "டி.என்.பி.எஸ்.சி. என்பது நிர்வாக சீர்திருத்தத் துறையின் கீழ் வருகிறது. என்னதான் கவர்னர் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இத்துறையின் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பொறுப்பு உண்டு. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமனம் முதலமைச்சர் மற்றும் துறை ஜெயக்குமாரின் ஒப்புதலின்றி நடந்துவிடாது. அப்படியிருக்க... டி.என்.பி.எஸ்.சி.யில் நடக்கும் முறைகேடுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் அறிக்கைவிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும், ஒவ்வொரு உறுப்பினரும் லஞ்சம் கொடுத்து விட்டுத்தான் பதவியைப் பிடிக்கிறார்கள்.

இதுபோன்ற முறைகேடுகள் சேர்மன், செகரட்டரி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்காது. டி.என்.பி.எஸ்.சி. என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். அப்படியென்றால் இராமநாதபுர மாவட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தேர்வை மட்டும் தடை செய்துவிட்டு மற்ற மாவட்டங்களில் முறைகேடு நடக்க வில்லை என்று அமைச்சர் எப்படி முடிவுசெய்து அறிக்கை விடுகிறார்? முறைகேடுகள் குறித்து கவர்னரின் கவனத்துக்கு கொண்டுசெல்லாதது ஏன்?

டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் அருள்மொழி, செகரட்டரி நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டவர்கள் நேர்மையான அதிகாரிகள் என்றால் எளிதாக கண்டறியக்கூடிய குரூப் 4 முறைகேட்டை கண்டுபிடித்து பத்திரிகை ஊடகங்களில் பரவுவதற்கு முன்பே ஏன் இவர்கள் கண்டுபிடிக்கவில்லை? தேர்வு முடிவுகளை -பெயர், எண், சொந்த ஊர், எழுதிய மையம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால் பொதுமக்களாகிய நாமே முறைகேட்டை எளிதாக கண்டு பிடித்துவிடுவோமே? ஆனால், அதிலேயே வெளிப்படைத்தன்மை இல்லை. இவர்களுக்கு லட்சக்கணக்கில் மக்களின் ttவரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுவது ஏன்? நேர்மையானவர் என்றால் என்ன அர்த்தம். நான் லஞ்சம் வாங்கமாட்டேன் மற்றவர்கள் லஞ்சம் வாங்குவதை கண்டுகொள்ள மாட்டேன் என்பது நேர்மையா?'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இதுகுறித்து நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நாம் கேட்டபோது, "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப் படையில்தான் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களின் நியமனம் நடக்கிறதே தவிர இதில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. லஞ்ச பேரமும் இல்லை. பதினோரு உறுப்பினர்கள் நியமனத்தில் விதிகளை பின்பற்றவில்லை என்றுதான் நீதிமன்றங்கள் சொன்னதே தவிர அதில் முறைகேடு நடந்ததாக சொல்லவில்லை. டி.என்.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் ராஜாராம் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.) நீங்கள் சொல்வதுபோல் முறைகேடானவர் என்றால் லோக் ஆயுக்தாவில் உறுப்பினராக உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்குமா? ஏதோ 2 மையங்களில் நடந்த முறைகேட்டை ஒட்டுமொத்த முறைகேடாக எடுத்துக்கொள்ள முடியாது. குரூப் 1 தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து அங்கு பதில் கொடுக்கப்படும்'' என்றார் விளக்கமாக.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மெயின் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வரும் திருநங்கையுமான ஸ்வப்னா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆபீசர்கள் சிவசங்கர் மற்றும் புகழேந்தி, தேர்வில் பாஸ் பண்ண வைக்க லஞ்சம் கொடுத்த ராம்குமார், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள் உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர் ஏ.டி.சி. ஷ்யாமளா தேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு போலீஸார். நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. செக்ஷன் ஆபீசர் காசிராம்குமாரை 2018 ஏப்ரல் 26-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தது. இதற்குமேல் விட்டால் பெரிய திமிங்கலங்கள் சிக்கிவிடும் என்று விசாரணை அதிகாரிகளையே மாற்றிவிட்டது அ.தி.மு.க. அரசு. அப்படியிருக்க, குரூப் 4, குரூப் 2-ஏ உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொள்ளும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் முறைகேடே நடக்கவில்லை என்று கூறுவது மேற்கண்ட ஊழல் பெருச்சாளிகளை தப்பவைக்கவா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.