Skip to main content

பட்ஜெட்டில் பிரச்சனைகளை கூறாத போது நாம் எப்படி தீர்வை கூற முடியும்..? - ஜெயரஞ்சன் பேச்சு!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020


இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் சில தினங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனிடம் பலேவறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

sd



பட்ஜெட் 2020-ல் கல்வித்துறை, சுகாதாரத்துறை, நீர் மேலாண்மை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார நிலை மந்தநிலையில் இருக்கும் போதும், 10 சதவீத வளர்ச்சியை இந்த வருடத்தின் இலக்காக வைத்திருப்பதாக மத்திய அரசு  பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. இதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

நீங்கள்தான் பொருளாதார மந்த நிலை என்று கூறுகிறீர்கள், இரண்டே முக்கால் மணி நேர பேச்சில் அவர்கள் ஒரு இடத்தில் கூட இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பதாக அவர்கள் கூறவில்லை. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது என்றோ, திட்டங்களை எல்லாம் அதை மனதில் வைத்தே கொண்டு வந்திருக்கிறோம் என்றோ அவர்கள் எதுவுமே பேசவில்லை.  இந்திய பொருளாதாரம் சரியில்லை என்று பட்ஜெட்டில் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நான் பட்ஜெட் தாக்கலை நேரடியாக பார்த்தேன். அப்படி எதுவும் கூறியதாக தெரியவில்லை. பொருளாதார ஆய்வறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறார்கள். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது. இதற்கு ஒருபகுதி காரணம் உலக அளவில் இருக்கின்ற பொருளாதார வீழ்ச்சி நிலை என்று தெரிவித்திருக்கிறார்கள். அதை கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை. என்ன பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால்தானே அதற்கான தீர்வை நாம் சொல்ல முடியும். அவர்கள் அதையே சொல்ல தயங்கின்ற போது நாம் என்ன தீர்வை முன்வைக்க முடியும். 

இந்தியாவின் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்றால் அதைபற்றி விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும் அல்லாவா? வருவாய், செலவுகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

அதெல்லாம் படிபடியாக வரும், விவசாய துறையில் அடுத்த இரண்டாண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காக 16 திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதுபடி நடந்தால் 2022ல் இந்த விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகிவிடும். நீர்பாசனத்துக்கு விவசாயிகளுக்கு சோலார் மூலம் மின் உற்பத்தி பெறுவதற்கு சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அரசு சுகாதார நிலையங்களில் உள்ள இடங்களில் வசதி குறைவான இடங்களில் தனியார் உதவியுடன் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நான் உங்களிடம் கூறினால் தான் நீங்கள் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள், அந்த மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீர்கள். அந்த மருத்தை எடுக்கொண்டால் உடல்நிலை சீராகும். ஆனால், உடம்புக்கு என்ன பிரச்சனை என்றே நான் கூறவில்லை என்றால் எந்த மருந்தை எடுத்துக்கொள்ள நீங்கள் பரிந்துரை செய்யமுடியும்.

இந்த பட்ஜெட்டில் எந்த பிரச்சனையும் இல்லையா? 

பிரச்சனை இருக்கு என்று நீங்கள் தானே தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். இருக்கு என்று அவர்கள் ஒத்துக்கொண்டால்தான் அதை பற்றி தெளிவாக நம்மால் பேச முடியும். பிரச்சனைகளுக்குரிய தீர்வாக எதையாவது அவர்கள் சொல்லியிருப்பார்களே என்றால் அதுகுறித்து நாம் விரிவாக பேசலாம். அந்த பிரச்சனைகளுக்கு இந்த தீர்வு சரியாக இருக்கும், இல்லை தவறாக இருக்கும் என்று அந்தெந்த பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு நாம் பேசலாம். அதுவே பேசாமல் பட்ஜெட்டில் ஒரு சில அறிவிப்புகளை அறிவித்துவிட்டு அவர்கள் போகிறார்கள் என்றால் அதை பற்றி நாம் பேச முடியும். அதில் என்ன பேச இருக்கின்றது.