அனைவருக்கும் வணக்கம். முதன் முதலில் கரோனா வரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியான உடனே தமிழக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் மாஸ்க் முதலிய பாதுகாப்பு உபகரணங்களையாவது கொடுக்கலாமே என்று கேட்டது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 70 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்குத்தான் கரோனா வரும், அதனால் நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறினார். அப்படி என்றால் மாஸ்க் மட்டுமாவது கொடுங்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கிறார்கள். இல்லை அதெல்லாம் தேவையில்லை என்று முதல்வர் மீண்டும் கூறினார். கொஞ்ச நாள் கழித்து கரோனா குறித்து ஒரு கேள்வி வந்தபோது முதல்வர் கரோனா காரணமாக தமிழ்நாட்டில் ஒரு உயிர் கூட போகாது. கொஞ்ச நாட்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். தனித்திருக்க வேண்டும், விழித்திருக்க வேணைடும், விலகி இருக்க வேண்டும் என்றார்.
மாஸ்க் போட வேண்டாம் என்று கூறிய அதே முதல்வர் மாஸ்க் போட்டுக்கொண்டு தனித்திருக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார். கொஞ்சநாள் கழித்து, மூன்று நாட்களில் கரோனாவை தமிழ்நாட்டை விட்டுத் துடைத்து எறிந்துவிடுவோம் என்று கூறினார். ஊரடங்கு அறிவித்த பிறகு முதல்வர் சொன்ன வார்த்தைகள் இவை. பிறகு இந்த கரோனா அப்படியே பரவ ஆரம்பிக்கின்றது. 500, 600 என்று ஆரம்பித்து தற்போது 3,000, 4,000 என்று அதிகரித்து வருகிறது. ஆனால் அது 5,000ஐ தாண்டாது. 4,852, 4,522, 4,999 என்று தான் இருக்கும். அதைத் தாண்டவே தாண்டாது. இது அரசாங்கம் சொல்கிற கணக்கு. உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது. அடுத்து முதல்வர் சொல்கிறார், தமிழகத்தில் சமூகப் பரவல் என்பதே இல்லை என்று, அதையும் சிரித்துக் கொண்டே சொல்வார். ஆனால் முதல்வரின் நிகழ்ச்சிக்குக் கூடவே சென்று புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளார்.
தற்போது நான்கு, ஐந்து மந்திரிகளுக்கு கரோனா வந்துள்ளது. இரண்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா விவகாரத்தில் அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்று தொடர்ந்து முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி வருகிறார்கள். ஆனால் பாதிப்புக்குள்ளான அமைச்சரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ அரசு மருத்துவமனைக்குச் செல்லவில்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அப்படி என்றால் எந்த மாதிரியான தரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு வருகின்றது என்ற கேள்வி எழுகிறது. இதைப் பற்றி ஒருநாள் முழுமையாகப் பேச வேண்டும். ஏனென்றால் அமைச்சர்களே அரசு மருத்துவமனையின் தரத்தை நமக்குச் சொல்லித்தருகிறார்கள். மக்களைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் அலட்சியத்தின் உச்சமாக அரசாங்கம் இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் அலட்சியத்தால் தற்போது ஒரு உயிர் பறிபோய் உள்ளது. உலகம் முழுவதும் கரோனா மரணங்கள் நடந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் கரோனா கொலைகள் நடக்கிறது. அதை ஜீரணிக்கவே முடியவில்லை. சுந்தர வடிவேல் என்கிற தம்பியை இழந்துள்ளோம். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சிங்கப்பூரில் இருந்து வந்த அவர் கடந்த 26ஆம் தேதி தமிழகம் வந்துள்ளார். அவர் சிங்கப்பூரில் இருந்து கிளம்பும்போதே சென்னையில் நட்சத்திர விடுதியில் குவாரண்டைன் இருப்பதற்குச் சேர்த்தே டிக்கெட் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை கிளம்பிய அவர் தன்னுடைய மனைவி சந்திராவுக்கு போன் செய்து தான் டிக்கெட் போட்டுவிட்டேன், சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் குவாரண்டைனில் இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். அதன்பிறகு வீட்டுக்கு வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்னைக்கு விமானம் ஏறியுள்ளார்.
சென்னைக்கு வந்த அவர் தேனாம்பேட்டையில் உள்ள ஹாயாட் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போன் இல்லை. அங்கு வந்த பிறகு தன்னுடைய மனைவியிடம் அவர் பேசவில்லை. அவர் அங்குவந்த அடுத்த நாள் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியதாகவும், அதனால் ஹோட்டலில் இருந்த மருத்துவர் அவருக்கு மருந்துகளைக் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். அவர் தனக்குக் கரோனா டெஸ்ட் செய்து தொற்று இல்லை என்ற பிறகே அந்தத் தம்பி விமானம் ஏறியுள்ளார். மருத்துவர் பார்த்துச் சென்ற பிறகு அந்த அறைக்கதவுக்கு வெளியே அந்த ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு உணவு வைத்துச் சென்றுள்ளனர். ஆறு வேளை உணவு அவரின் அறைக்கு வெளியே இருந்துள்ளது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் எடுத்துச் சென்றார்களா அல்லது எடுத்துச் சென்றும் அவர்கள் அதை அலட்சியம் செய்தார்களா என்று தெரியவில்லை. அந்தத் தம்பியின் மனைவி எப்படியோ அந்த ஹோட்டலின் போன் நம்பரை வாங்கி தன் கணவரைப் பற்றி விசாரித்துள்ளார்.
ஆனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் உங்கள் கணவர் ஹோட்டலில் இருந்து ஓடிவிட்டார் என்று பொறுப்பில்லாமல் பதில் கூறியுள்ளனர். மீண்டும் அவர் முயற்சி செய்து கேட்டாலும் அவர்கள் அதே பதிலேயே கூறியுள்ளனர். அடுத்த சில நாட்கள் கழித்து ஊங்கள் கணவர் அறையில் இறந்து கிடக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். முன்னுக்குப்பின் முரணான தகவல்களை ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். அவர் இறந்ததாகச் சொல்லப்பட்ட அறையில் சென்று பார்த்தால் அந்த அறையில் தங்கநகைகள் வாங்கிய இரண்டு டேக் மட்டும் கிடக்கிறது. நகைகள் இல்லை, வெளிநாட்டில் இருந்து வெறும் டேக்கை மட்டுமா அவர் எடுத்துவருவார். அடுத்து அந்த உடலை உடற்கூறாய்வு செய்ய லஞ்சம், கரோனா இல்லை என்று தெரிந்த பிறகு அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல லஞ்சம் என இந்த விவகாரத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடியுள்ளது. நமக்குள்ள கேள்வி எல்லாம் இரண்டு நாட்களாக அவர் சாப்பிடாமல் இருக்கும்போது, அதை எப்படி ஹோட்டல் நிர்வாகம் கவனக்குறைவாக எடுத்துக் கொண்டது என்பதுதான்?
அடுத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர் எதையும் எடுத்து வராமல் வெறுங்கையை வீசிக்கொண்டுதான் வந்திருப்பாரா? அறை வாடகை எடுத்ததில் மீதி தரவேண்டிய பணம் இருக்கிறது என்று ஹோட்டல் நிர்வாகம் கேட்டதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் டிக்கெட் எடுக்கும்போதே தங்குவதற்கும் சேர்த்தே பணம் கொடுக்கப்பட்டது என்ன ஆயிற்று. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர் வந்து பார்த்ததாகக் கூறுகிறார்களே, அவருக்கு என்ன மருந்து மருத்துவர் கொடுத்தார், என்ன செய்ததற்காக கொடுத்தார் என்ற கேள்வி எழுகிறது. இதற்கெல்லாம் தமிழக அரசும், ஹோட்டல் நிர்வாகத்தினரும் உரிய விளக்கம் தர வேண்டும். என்ன காரணத்திற்காக என் கணவர் இறந்தார் என்று அவரின் மனைவி நம்மைப் பார்த்துக் கேட்பதெல்லாம் நெஞ்சைப் பிழிவது போன்று இருக்கிறது. இது அனைத்திற்கும் நியாயம் வேண்டும்.