Skip to main content

பாஜகவின் திடீர் திட்டங்கள்!!! இந்தியா நாடா???

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்ததிலிருந்தே இந்த மாதிரியான ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் திட்டங்களை மிக தீர்க்கமாக செயல்படுத்தி வருகின்றது. ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் திட்டங்களின் நோக்கம் என்ன?
 

bjp


ஒரே நாடு, ஒரே வரி...

அதன்படி, ஜூலை 1, 2017 அன்று ஒரே நாடு, ஒரே வரி என்பதை குறிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது. சி.ஜி.எஸ்.டி.(மத்திய வரி), எஸ்.ஜி.எஸ்.டி.(மாநில வரி), ஐ.ஜி.எஸ்.டி. (ஒருங்கிணைக்கப்பட்ட வரி), யூ.டி.ஜி.எஸ்.டி.(யூனியன் பிரதேசங்களுக்கான வரி) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இதனால் மாநில வருவாயான மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி, கொள்முதல் வரி, நுழைவு வரி, விளம்பரங்களின் மேலான வரி, லாட்டரிகள் - சூதாட்டங்கள் மேலான வரிகள் மற்றும் மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் போன்றவை கிடைக்காமல் போனது. மாநிலங்களால் வரிகளை மாற்றியமைக்க முடியும் என்ற உரிமையும் பறிபோனது. 

 

bjp


ஒரே நாடு, ஒரே தேர்தல்...

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து பேசப்பட்டது. அந்த திட்டம் குறித்து பேச ஜூன் 19, 2019 அன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இதன் மூலம் தேர்தல் செலவைக்குறைக்கலாம் எனக் கூறினர். ஆனால் அதுவும் சரியாக விளக்கப்படவில்லை. மத்தியில் ஆட்சி கலைந்தால், அனைத்து மாநிலங்களிலும் கலைக்கப்படுமா, மாநிலத்தில் ஆட்சி கலைந்தால் மத்தியிலும் கலைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இதனால் மாநிலங்களின் தேர்தல் உரிமை பறிபோகும் என்பது மட்டும் ஐயமின்றி வெளிப்பட்டது.



ஒரே நாடு, ஒரே ரேசன்...

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம் குறித்து ஜூன் மாதம் 28ம் தேதி டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறை கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தை பொறுத்தவரை மாநில உரிமையின் அடிநாதத்தை அசைத்து பார்க்கும் வேலை. பொதுவிநியோகத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும், மாநிலங்களின் உணவு பழக்கத்தையும் சிதைக்கவே இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு பொருளுக்கான கொள்ளளவு வெவ்வேறாக உள்ளது. இந்த திட்டத்தின்மூலம் அவை ஒழிக்கப்படும். 
 

one nation one ration


உதாரணமாக... தமிழ்நாட்டில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, வேறு சில மாநிலங்களில் அரிசி மாநில விலையில் வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் அரிசி முக்கிய உணவாக இருப்பதில்லை. தற்போது ஒரே பொதுவிநியோகம் என திட்டம் வகுத்தால், ஒன்று தமிழ்நாட்டிலுள்ள இலவச அரிசி திட்டத்தை ஒழிக்கவேண்டும் அல்லது நாடு முழுவதும் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.
 

வட மாநிலங்களில் அரிசியைவிட, கோதுமையே முக்கிய உணவாக இருக்கிறது, இதனால் அங்கு அரிசியைவிட கோதுமைதான் அதிக கொள்ளளவில் வழங்கப்படும். ஒரே ரேசன் திட்டம் வந்தால் நாடுமுழுவதும் கோதுமை முக்கிய உணவாக நிறுத்தப்படுமா, அரிசி முக்கிய உணவாக நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அதேபோல் பொங்கல் பரிசு, இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் இந்தியா முழுமைக்கும் அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படியாக இதுவும் மாநிலத்தின் உரிமையையும், அந்த மக்களின் உணவு மற்றும் அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாகவே உள்ளது. 


ஒரே நாடு, ஒரே மின்சாரம்...

நேற்று (06.07.2019) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாடு, ஒரே மின்சாரம் திட்டமும் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியே மின்சார வாரியம் உள்ளது. இந்த ஒரே மின்சாரம் திட்டத்தால் மாநில அரசின்கீழ் உள்ள பகிர்மான கழகங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, மத்திய அரசின்கீழ் ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும். மின்சாரத்தை பொறுத்தவரை சில மாநிலங்கள் தன்னிறைவு அடைந்துள்ளது. இதன்மூலம் உபரி மின்சாரம் அருகிலிலுள்ள மாநிலங்களுக்கு விற்கப்படுகின்றன. அதன்மூலம் மாநில அரசிற்கு வருவாய் வருகிறது.
 

 

one nation one ration


தற்போது இந்த ஒரே நாடு, ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கு இடையேயான இந்த வணிகம் கலைக்கப்படும். மேலும், நாடு முழுவதும் ஒரே கட்டணம் அமல்படுத்தப்படுவதால் மின்கட்டணம் குறைந்துள்ள மாநிலங்களில் மின்சார கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம், மின்தறி வைத்துள்ள நெசவாளிகளுக்கான 500 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கான மின் மானியம் இப்படியான பல திட்டங்கள் கலைக்கப்படும். இவையனைத்திற்கும் மேலாக இதிலும் மாநில உரிமை பறிக்கப்படுகிறது. 

ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம்:

நேற்று (10.07.2019) ஒரே நாடு, ஒரே தீர்ப்பாயம் குறித்த விவாதம் மக்களவையில் நடைபெற்றது. அப்போது இந்த தீர்ப்பாயத்தை கொண்டுவரும் நோக்கிலான சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் இருக்கும் நதிநீர் பிரச்சனைகளை விசாரிக்க ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்படும். மேலும், இப்போது நடைமுறையிலுள்ள காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, கிருஷ்ணா 2, ரவி மற்றும் பியாஸ், வன்சாத்ரா, மகதாயி ஆகிய தீர்ப்பாயங்கள் கலைக்கப்படும். ஒருவேளை அனைத்தையும் இவர்கள் புதிதாக தொடங்க நினைத்தால், மீண்டும் முதலிலிருந்து விசாரணை தொடங்கும்.
 

cauvery


எடுத்துக்காட்டாக, காவிரி ஆணையம் இவ்வளவு ஆண்டுகள் விசாரித்ததை அப்படியே நிறுத்திவிட்டு, மீண்டும் முதலிலிருந்து தொடங்கப்படும். மேலும் இந்த தீர்ப்பாயத்தின் முடிவும் இறுதியானதல்ல, இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் தெரிவிக்கின்றனர். இதனால் மாநிலங்கள் தீர்ப்பை மதிக்காத போக்குதான் தொடரும். மேலும் இப்படி புதிதாக ஒன்றை தொடங்கி அது செயல்பாட்டிற்கு வந்து, மீண்டும் முதலிலிருந்து விசாரித்து தீர்ப்பு வழங்கி அதை நடைமுறைப்படுத்துவதற்கு பதிலாக, இப்போது இருக்கும் தீர்ப்பாயங்களின் தீர்ப்பை மதித்து செயல்படுங்கள் என மாநிலங்களுக்கு உத்தரவிட்டாலே போதும். இந்த ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம் என்பதே நதிநீர் இணைப்பை அமல்படுத்துவதற்குதான் என்றும் கூறுகின்றனர். 


ஒரே நாடு, ஒரே மொழி...

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, மாநிலங்கள் அனைத்தும் மொழிகளின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை மொழிகளின் அடிப்படையில்தான் கலாச்சாரம், பண்பாடு என அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. இவையனைத்திற்கும் ஒரே அளவு அதிகாரங்கள்தான் உள்ளன. இந்தியாவின் தேசியமொழி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதிருந்தே இருக்கும் இந்தி திணிப்பு முதல் அண்மையில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கை வரை அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டு. 
 

one nation one ration


இப்படியாக இந்த அரசின் ஒவ்வொரு திட்டமும் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் மாநில சுயாட்சி, இந்த திட்டங்கள் அனைத்தும் அதை சீர்குலைப்பதாகவே உள்ளது. மேலும்,  இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும் குலைப்பதாகவே உள்ளது. இந்தியா ஒரு துணைக்கண்டம், இந்தியா என்பது நாடு அல்ல அது மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற பாரம்பரியத்தை குலைப்பதாகவே உள்ளது. இந்தியா ஒரு நாடு என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவம், அதை செயல்படுத்தவே இந்த பாஜக அரசு முயற்சி செய்கிறது. அதன் காரணமாகத்தான் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறது. மீண்டும் அதிகாரத்தை மத்தியில் குவிக்க முயற்சி செய்கிறது.
 

அதைதடுத்து மாநில சுயாட்சியை காக்கவேண்டிய அரசுகளும் அதற்கு தக்க எதிர்வினையாற்றவில்லை. மாநில சுயாட்சியை உயிர் மூச்சாகக்கொண்ட அண்ணாவின் பெயரைக் கொண்டுள்ள கட்சி தமிழ்நாடு அரசாக இருந்தும் போதிய எதிர்வினைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாநில சுயாட்சியின் மூலம்தான் இந்தியா என்ற துணைகண்டத்தை வலுப்படுத்தமுடியும். இந்தியாவின் பெருமையும் அதில்தான் அடங்கியிருக்கிறது.