"கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை, மழை பெய்தால் மட்டுமே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படும்," என்றார் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், கர்நாடக மாநில பொதுப் பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தேவகவுடாவும் அவரது மகனும் பொதுப்பணித்துறை அமைச்சருமான ரேவண்ணா குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்தனர். இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் பூர்வ மரியாதை செய்யப்பட்டது.
ரேவண்ணா சுவாமி தரிசனம் முடிந்த கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, காவிரியில் தண்ணீர் திறக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். பின்னர் மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் அதே கேள்வியை கேட்க வேறுவழியின்றி, "கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை கர்நாடகாவில் தற்போது மழை பெய்தால் மட்டுமே காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும்," எனதெரிவித்தார்.
அடுத்து அருகில் இருந்த தேவகவுடாவிடம் கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. பெரும்பான்மை பெரும் என்று தகவல் வெளிகியுள்ளதே என கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோயில்களுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு விட்டனர்.