Skip to main content

“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”

Published on 19/01/2018 | Edited on 19/01/2018
“இருக்கு; ஆனா இல்ல..
இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
-ஆன்மிகம் ஒரு அலசல்!

“பேய் இருக்கா? இல்லியா? பார்த்திருக்காங்களா? பார்க்கலியா? நம்பலாமா? நம்பக்கூடாதா?”
-சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினியிடம் இப்படி கேட்பார் வடிவேலு.

நம்மில் பலருக்கும், இதே ரீதியில்தான் கடவுள் குறித்த கேள்விகள் உள்ளன. வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’கட்டுரை சர்ச்சை வெடித்ததும், ஆத்திகம், நாத்திகம் குறித்த விவாதங்கள் பல இடங்களிலும் நடக்கின்றன. கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கைகள், விஞ்ஞானம், பகுத்தறிவு போன்ற வார்த்தைகள் பலரது பேச்சிலும் தாராளமாக அடிபடுகின்றன.

புண்ணை ஆற்ற வேண்டாமா?

இங்கு எண்ணிக்கை கணக்கில் வைத்துப் பார்த்தால், கடவுள் நம்பிக்கையாளர்களும், மறுப்பாளர்களும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தில் உள்ளனர். இந்த மறுப்பாளர்கள், இறை நம்பிக்கை கொண்ட பெரும்பான்மையான மக்களிடையேதான் வாழ்கிறார்கள். ஆனாலும், பகுத்தறிவுக் கருத்துக்களை அதிரடியாகச் சொல்லி, கடவுள் நம்பிக்கையாளர்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். ஏனென்றால், கோவிலுக்குச் செல்பவர்கள், அவர்களின் குடும்பத்தினராகவோ, நண்பர்களாகவோ இருப்பார்கள். இறைவன் மீதான பற்றுதலைத் துணையாகக்கொண்டு, எளிய வாழ்க்கை வாழ்கின்ற மக்களின் நம்பிக்கையை நாம் ஏன் பறிக்க வேண்டும்? என்ற சிந்தனையே, இறை மறுப்பாளர்கள் பலரையும் ’உண்மை’ பேசவிடாமல் தடுத்துவிடுகிறது.

‘பக்தியும் உண்டு; பகுத்தறிவும் உண்டு’ என்ற நிலையிலும் பலர் உள்ளனர். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும், பெரிய அளவில் மூடநம்பிக்கைக்கு ஆளாகாமல், தங்களைக் காத்துக்கொள்கிறார்கள்.   



’கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.’என்று அதிரடியாகச் சொன்ன தந்தை பெரியாரின் வழியில் பயணிப்பவர்களோ, ‘மூட நம்பிக்கைகளைக் குலைக்காவிட்டால் அறிவியல் எப்படி வளரும்? புண்படுவார்கள் என்பதற்காக புண்ணைக் கலையாமல் இருக்க முடியுமா? சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் புண்ணை ஆற்ற வேண்டாமா?’என்று கேள்வி எழுப்புகின்றனர்.

வைரமுத்துவுக்கு எதிரான போராட்டச் சூழலில், தங்களது கருத்துக்களில் மிகத் தெளிவாகவும், மெல்லிய குழப்பத்தோடும் இருப்பவர்களைக் காண முடிகிறது. அவர்களில் சிலரைப் பார்ப்போம்!

அம்மாவின் நம்பிக்கை! அது ஒரு மேஜிக்கல் பவர்!

நார்வேயில் பணிபுரியும் ஸ்ரீவில்லிபுத்தூர்காரரான லோகேஷ் கோபால்சாமி மனம் திறந்து சொல்கிறார் – “When you discover rationality, concept of god does not impress you anymore எனச் சொல்வார்கள். இன்றைக்கு அறிவியல், வரலாறு, அரசியல் முதலிய தளங்களில் நான் பெற்ற தெளிவினைக் கொண்டு நோக்குகையில்,  கடவுள் என்கிற கான்செப்ட் எனக்கு உவப்பாக இருப்பதில்லை. ஆயினும் ஒருகாலத்தில் ஆன்மீகத்தில், (மூட?!) நம்பிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கிறேன். எனது பள்ளி நாட்கள் முழுதும் பரிட்சைகளால் நிரம்பி இருந்தவை. வீட்டை விட்டு கிளம்பும் முன், வாசல் முற்றத்தில் நின்று மேற்கே பார்த்தால் ஆண்டாள் வீற்றிருக்கும் கர்ப்பகிரகம் கண்ணுக்குத் தெரியும். மிதிவண்டியை இடுப்பில் சாய்த்துக் கொண்டு மனதார ஆண்டாளை வேண்டிக் கொள்வேன். அதுவும் போதவில்லை எனக்கு. பெரியோர்கள் ஆசி வேண்டும், ஆனால் என் வீட்டிலோ முதியோர்கள் எவரும் இல்லை. அதற்கொரு சொலுசன் கண்டுபிடித்தேன்.

திருவில்லிபுத்தூர் என்றால், ஆண்டாளுக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்திருப்பது பால்கோவா. அந்த பால்கோவா சாம்ராஜ்யத்தை நிறுவிய புளியமரத்து லாலா கடைக்காரர் வீடு எனக்கு எதிர்த்த வீடு. அக்கடையை நிறுவிய கிருஷ்ணன் சிங் தாத்தாவின் தாயார் 95 வயது நிரம்பிய மூதாட்டி. அவர் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து, மிச்சருக்கு வெள்ளைபூண்டோ அல்லது அல்வாவிற்கு முந்திரியோ நறுக்கிக் கொண்டிருப்பார். அவரிடம் சென்று, '' பாட்டி, நான் பரிட்சைக்குப் போறேன்.. ஆசீர்வாதம் பண்ணுங்க'' எனக் கேட்பேன். சில நேரம் அவருக்கு காது கேட்காது, கண்பார்வையும் குறைவு, எனவே பக்கத்தில் இருப்பவர்கள் உரக்கச் சொல்வார்கள் ''நாணி பாட்டி.. நம்ம நைனாம்மா மகன்.. பரிட்சைக்குப் போறாராம்'' என்பார்கள்.

உடனே, உலர்ந்து போன சருகாக இருக்கும் அவரது முகம் மலரும், உப்பு நீர் பூக்கள் விழுந்த அவரது கண்களில் 60 வாட்ஸ் பல்ப் பிரகாசம் தெரியும். தனது தளர்ந்த குரலில் ஒருவித உற்சாகத்துடன் ''போயிட்டுவாப்பா.. நல்லா பரிட்சை எழுதுவ.. அந்த ஆண்டாள் தாயீ உனக்குத் துணையிருப்பா. நல்லா வருவப்பா'' என வாயார வாழ்த்தி வழியனுப்புவார். இன்றைக்கு நான் அறிவியல் எனக்கூறி என்னென்னவோ பகுத்தறிவு வியாக்கியானங்கள் பேசலாம், ஆனால் அன்றைக்கு அந்த 95 வயது மூதாட்டியின் வாழ்த்து எனக்கு மிகப்பெரும் பலமாக உத்வேகமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும். நம்ம லெவல் எல்லாம் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கணும் அவ்வளவுதான். அதற்கு அந்த பாட்டியின் ஆசீர்வாதம் எனக்கு ஒரு துணைப்படையாக, உற்ற உறுதுணையாக இருப்பதாக எனக்குள் ஒரு நம்பிக்கை. அதில் ஒரு மேஜிக்கல் பவர் இருந்ததாக இன்றும் நான் உணர்கிறேன்.

அந்த ஊரை விட்டு வந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றைக்கும் எனது தாயாரை அலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் ஆடித்திருவிழாவுக்கு அன்னதானம் வழங்கினோம், அந்த நிகழ்ச்சியை இந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று செய்தோம், இருப்பா.. ஆண்டாள் கோலாட்டம் நடக்குது கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடுறியா எனவும் தான் எனது தாயாருடனான எனது உரையாடல் இருக்கிறது. என்னால் உறுதியாகச் சொல்ல இயலும், எனது தாயார் ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் இதர சாமிகளுக்கு செய்கிற அபிஷேகம் அர்ச்சனைகளில் மனமகிழ்ந்து அந்த ஆண்டாள், எங்கோ இருக்கிற தன் பிள்ளையாகிய என்னை இன்றைக்கும் காத்து வருகிறாள் என்கிற நம்பிக்கையில் அவர் வாழ்கிறார் என்று.

உங்கள் மகன் நான், நீட்சேவின் நெருப்பு வாதம் வாசித்தேன், டார்வினிசம் படித்தேன், நியூட்டனையும் ஐன்ஸ்ட்டினையும் ஆராதித்தேன் என்று கூறி விஞ்ஞானம், பவுதீகம், மேலை நாட்டு நாகரீகம், பகுத்தறிவு என்கிற பெயரில், நான் அறிந்ததையெல்லாம் பேசி, அந்தத் தாயின் நம்பிக்கையை நான் நிந்திக்கலாமா? அல்லது சவாலுக்கு உள்ளாக்கலாமா?? அது தகுமா? என நான் எண்ணிப் பார்ப்பதுண்டு.” என்று  பாச உணர்வுகளைப் படர விடுகிறார்.

நாளை நாம் எப்படி மாறுவோமோ?

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜெகன்னாதனோ “இந்த வாழ்க்கை, அதில் நடப்பவை எல்லாம் ஒரு சைக்கிள் சுழற்சிக்கு உட்பட்டது. அறிஞர்கள் சொல்லுவார்கள். டீன் ஏஜ் வரை ஒரு மகனுக்கு அவன் தந்தை தான் ஹீரோ. அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பான். பிறகு அவர் ஒரு பத்தாம் பசலி, ஒன்றும் தெரியாது, நான் மெத்தப் படித்தவன் என்று நினைப்பான் பிறகு இவன் தந்தையாகி வாழ்வின் கஷ்டங்களை எதிர் கொள்ளும் பொழுது, திரும்பவும் அவரின் பெருமையை உணர்வான். நான் சென்ற வாரம் என் மகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்கப் போனேன். அவள் பெரிய ப்ரேம் தேர்வு செய்தாள்.. கேட்டதற்கு அதுதான் ஃபேஷனாம். கடைக்காரரும் ஆமோதித்தார். அது ஆரம்ப 80 களில் நான் அணிந்த ஃப்ரேம். திரும்ப வந்து விட்டது. நம் உடலும் அப்படித்தான் படிப்படியாக வளர்ந்து பிறகு குறுக ஆரம்பித்துவிடுகிறது. அது போல் தான் இறை நம்பிக்கையும். சிறு வயதில் ஸ்ரீரங்கத்தில் ஆன்மீகச் சூழலில் வளர்ந்தவன் நான். பிறகு பல புத்தகங்கள் படித்து இறை நம்பிக்கை மீதான ஈடுபாடு மிகக் குறைந்து போனது. இன்று திரும்பவும் பழைய நிலை. பாசுரங்கள் என்னை நெகிழச் செய்கிறது. பகுத்தறிவு பேசிய முன்னாள் தலைவர்கள் பலர், தங்களது இறுதி நாட்களில் திசை திரும்பினர். MR ராதா கண்ணதாஸன் ஒரு சிறந்த உதாரணம். ஆக  கடவுள் நம்பிக்கை என்பது தனி நபர் நம்பிக்கை. நாளை நாமே எப்படி மாறுவோமோ தெரியாது.” என, காலத்தின் கைகளில்தான் அனைத்தும் இருப்பதாகக் கருதுகிறார்.  

கேள்வியில்தான் மாற்றங்கள் உருவானது!

அபுதாபியில் வசிக்கும் ராஜ் மாரியப்பன் “அன்று இருந்த நம்பிக்கையில்.. கேட்ட கேள்வியில் தான் பல மாற்றங்கள் உருவாயின. நம் மக்கள் நம்பிக்கையில் கேள்வி கேட்பதை ஏற்பார்கள் அந்தக் கேள்வியானது,  அடுத்தவருக்கோ தனக்கோ பலனளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருந்ததால்தான்,  பெரியார் என்ற ஒருவர் உயிருடன் இறுதிவரை இருக்க முடிந்தது. அனைத்து நம்பிக்கையிலும் ஆதாரபூர்வமான கேள்விகளை அவர் எழுப்பினார். ஆனால், இன்று கேள்வி கேட்பவர்கள் அரைகுறை அறிவாளிகள். அதனால்,  அவர்களால் அவர்களது கேள்விக்கு சரியான பதிலைக் கூற இயலாது. ஒரு நம்பிக்கை குறித்து கேள்வி கேட்பதற்கு முன்பாக, அந்த நம்பிக்கை உடையவரை விட, பல மடங்கு விஷயம் தெரிந்தவரகாக கேள்வி கேட்பவர் இருக்கவேண்டும்.

அனைவரும் நம்பிக்கைகளை மட்டுமே கொண்டிருந்தால்,  இன்று எங்கும் கலவரங்களாகாவே இருக்கும். ஆகையால்தான்,  சில மதங்களில் எழுதப்பட்ட  வார்த்தைகளை அப்படியே நம்புவதால்,  எதையும் சிந்திக்காமல்,  பயங்கரவாத செயல்களுக்கு அவர்களைத் திருப்ப முடிகிறது. சிறுவயது நம்பிக்கைக்கும் படித்து அறிவு பெற்றதால் வரும் நம்பிக்கைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது, அடுத்தவரை மறைமுகமாகக் கட்டுபடுத்த உருவாக்கப்பட்டதுதான்.
 
உண்மையில் கடவுள் நம்பிக்கை என்பது இல்லாத ஒரு விசயத்தை நம்ப வைத்து அதன் மூலம் பலனடைவது ஆகும். ஆனால், ஆன்மீகம் என்பது கடவுள் என ஒன்று அல்லது ஒருவர் இருக்கிறாரா என்று அறிய முற்படுவது ஆகும்..முன்னது நாம் அறிவு பெறும் போது, அதைவிட்டு விலகுகிறோம். பின்னதை நாம் தேடிக் கண்டறிய முயல்கிறோம்.” என்று தனது சிந்தனையை விவரிக்கிறார்.

தவறான கொதித்தெழல் நடந்தே தீரும்!

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் வேதகிரி என்பவர்  “கருத்தில் யாவரும் வேறுபடலாம்; மாறுபடலாம். மாற்றுக் கருத்தே இருக்கக் கூடாது என்பது சரியா?” என்று கேட்க, கவிஞர் தாமரை  “என்னுடைய கருத்து – எந்த மதமாக இருந்தாலும் – எல்லாவற்றிலும் குறைகள், கறைகள் உண்டு. அவற்றின் தீமைகளை உரக்க எடுத்துச் சொல்லிக் களைய முற்பட வேண்டும். சட்ட ரீதியாக சில, சமூகரீதியாக சில, பரப்புரைகள் வாயிலாக. ஒரு மதத்தை மட்டும் தொடர்ந்து தாக்கும்போது மற்ற மதங்களின் மீது எந்த சிறு விமர்சனமும் வைக்கமுடியாது எனும்போது, கவிஞர் வைரமுத்து விஷயத்தில் நடப்பது போல, தவறான கொதித்தெழல் நடந்தே தீரும்.” என்று பதிலளிக்கிறார்.

சந்தேகம் இல்லாத நம்பிக்கை இருந்தால்!


சென்னைவாசியான ராம்சுந்தர் “பெரும்பாலோரின் புனிதத்துவம் நிறைந்த ஒரு நம்பிக்கை, ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது, அதன் மீதான நம்பிக்கை குறைந்துவிடுமா?” என்று கேட்டுவிட்டு, ”மகர ஜோதியைப் பற்றிய கதைகளை நினைத்துப் பாருங்கள். தானாக ஜோதி தோன்றி மறையும். அது கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் நீ இருந்த விரதத்தில் குற்றம். இப்படிச் சொல்வதாலேயே, மகரஜோதியைப் பார்க்காமலேயே பார்த்தேன் என்று சொல்லி கன்னத்தில் போட்டவர்களும் உண்டு. அய்யப்பா.. நான் என்ன தவறு செய்தேன்? மகரஜோதி என் கண்ணுக்குத் தெரியவில்லையே? என்று கண்ணீர் விட்டுக் கதறியவர்களும் உண்டு. கேமராவில் மகரஜோதியைப் படம் பிடித்தால், அது பதிவாகாது. இப்படி எத்தனையெத்தனை கதைகள்.

இன்றைக்கு . மாலை போடாமல், விரதம் இருக்காமல், பதினெட்டுப் படி. ஏறாமல் இன்னும் சொல்லப் போனால்,  சபரிமலை செல்ல அனுமதிக்கப்படாத பெண்கள் உட்பட அனைவரும் வீட்டின் அறையிலிருந்தே வழிபட முடிகிறது.

காந்தமலையில் அந்த ஜோதி வடிவிலான தீப்பிழம்பு எப்படி ஏற்றப்படுகிறது? என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்த பின்பும், இன்றும் என்றும் மகரஜோதி புனிதமானதே. இந்த நம்பிக்கையும் உணர்வும் எள்ளளவும் குறையாது. உங்களின் நம்பிக்கை மீது உங்களுக்கு, சந்தேகம் இல்லாத நம்பிக்கையிருந்தால் எதுவும் எதையும் மாற்றிவிட முடியாது.” என்கிறார் அழுத்தமாக.

இவர்களின் பக்தி இப்படியானதுதான்!



ஆண்டாளுக்காக, தற்போது களத்தில் இறங்கிப் போராடி வரும் வைணவர்கள் குறித்து,  ராஜகோபால் மீனாட்சி சுந்தரம் என்பவர் இப்படிச் சொல்கிறார் –

வைணவர்களின் பக்தி எப்படிப்பட்டது தெரியுமா? என்னோட கொள்கைதான் ஒசத்தி. என்னோட பக்திதான் ஒசத்தி. யாரும் வேற கருத்து சொன்னா ஏத்துக்க மாட்டோம். அவங்கள எதிர்த்து நிற்போம் என்பதுதான். இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள் பிராமணர்களில் அய்யர்களும் அய்யங்கார்களும். வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உண்டு. இவர்களுக்கு அடையாளம் ஒய் நாமமும் யூ நாமமும்தான். காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் யாருக்குச் சொந்தமானது என்று இவர்களிடையே பெரும் சண்டையே நடந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் யானைக்கு நாமம் போடுவதில் பிரச்சனை எழுந்தது. இவர்கள் போடும் நாமத்தை அவர்கள் அழித்தார்கள். அவர்கள் போடும் நாமத்தை இவர்கள் அழித்தார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. வெள்ளைக்கார மேஜிஸ்ட்ரேட்டுக்கு எதுவும் புரியவில்லை. வைணவர்கள் தரப்பில் விளக்கிச் சொன்னார்கள். பிறகுதான், அந்த மேஜிஸ்ட்ரேட் சுதாரித்தார். அடச்சே.. ஒய்.. யூ என்ற இரண்டு எழுத்துக்களுக்காகவா இப்படி அடித்துக்கொள்கிறார்கள் என்று வெறுத்துப் போய் தீர்ப்பு சொன்னார் - ஒரு வாரம் ஒய்! ஒரு வாரம் யூ! வைணவர்களின் பக்தி இப்படியானதுதான்.” என்கிறார்.

அறியாமையின் உச்சம்!


சுப்பிரமணியன் முத்துக்குமார் சாமி ”பகுத்தறிவோடு நாத்திகர்களாக வாழ்ந்த அம்பேத்கர், பெரியார், நேரு, காமராஜர், அண்ணா போன்ற நல்ல தலைவர்கள் மக்கள் பணியாற்றிய மனிதப்புனிதர்கள் என்பதை ஆத்திகர்கள் உணர வேண்டும். பகுத்தறிவாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், தலைக்கு விலை பேசும் கொடிய செயலைக் கைவிட வேண்டும். பக்தி பாடல்களையும் இலக்கியங்களையும் புரியாமல் படித்துவிட்டு மெய்மறப்பதற்குப் பெயர் பக்தி அல்ல. ஓலைச்சுவடியில் எழுதியதெல்லாம் உன்னதமான இலக்கியங்கள் என்றெண்ணுவதும், தாடி வைத்துக் காவி கட்டியவர்களெல்லாம் சாமியார்கள் என்று மெய் சிலிர்ப்பதும் கூடாது. வக்கிரமான இலக்கியங்களின் நாயகன் இறைவனென்றால், உடனே பக்தியில் ஆழ்ந்துவிடுவேன் என்பது அறியாமையின் உச்சம்.” என்கிறார்.

கடவுளோடு கண்ணாமூச்சி ஆட்டம்!


ஆறுமுகச்சாமி என்பவர் “இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு! என்று கடவுள் குறித்து சிம்பிளாகச் சொல்லிவிடலாம். அருணகிரி நாதர் பேசா அநுபூதி பிறந்ததுவே என்றும் சும்மா இரு சொல் அற என்றும் பாடியிருக்கிறார். இதனையே ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பார்கள். இதன் பொருள் - கடவுளைப் பார்த்தவன் அதை வெளியே சொல்லுவதில்லை. கடவுளைப் பார்த்துவிட்டேன் என்பவன் கடவுளைக் கண்டிருக்கவே முடியாது என்பதுதான்..  ‘நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்று கேட்கிறார் சிவவாக்கியர். பூஜை, புனஸ்காரம், மந்திர, வழிபாட்டு முறைகளெல்லாம்  தேவையே இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் சிவவாக்கியர்,    இறைவன் உன்னுள்ளேயே இருக்கிறான் என்பதை உணர வேண்டும் என்கிறார். பகுத்தறிவாளரான அண்ணாவோ,    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் எனச் சொல்லியிருக்கிறார்.  பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் என்று சினிமாவில் பாடியும் இருக்கிறார்கள்.  மூட நம்பிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இறை உணர்வுடன் வாழ்பவர்கள்,  யாருக்கும் எந்த தொந்தரவும் தரப்போவதில்லை. இதை அறியாத அரைகுறைகள்தான், ஆன்மிகம் என்ற பெயரில், கடவுளோடு கண்ணாமூச்சி ஆட்டம் நடத்தி,   நாட்டில் புதிது புதிதாக பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்.” என்று யதார்த்தத்தை முன்வைக்கிறார்.
 
நாத்திகத்தை ஒழித்துவிட முடியும்!


தொழிலதிபரான சந்திரசேகர் “ஆன்மிகம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். மற்றவர்கள் மீது உங்களின் வழிபாட்டைத் திணிக்காமல், உங்களுக்குள்ளே, உங்கள் வீட்டிலே, உங்கள் வழிபாட்டு தலத்திற்குள்ளே, பொது இடங்களுக்கு கொண்டுவராமல் முடித்துக்கொண்டால் நாத்திகம் செத்துப்போகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். அது அவரவர் மனதோடு இருக்கும் வரையிலும் யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. நான்தான் உலகிலேயே சிறந்தவன் என நான் நம்புவது வரை நல்லது. அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று மற்றவர்கள் மீது திணிக்கும்போதுதான் பிரச்சனை எழுகிறது. ஆன்மிகம் என்ற பெயரில் பலரும் இதைத்தான் செய்கிறார்கள். மற்ற மனிதர்கள் மீது அத்துமீறி ஆதிக்கம் செலுத்துவதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். எப்போதுமே வழிபாட்டுத் தலங்களை இடிப்பவர்கள் ஆத்திகர்களே; நாத்திகர்கள் அல்ல. அவரவர் வழி அவரவர்க்கு என்னும் முடிவுக்கு ஆத்திகர்கள் வந்துவிட்டால், நாத்திகர்களுக்கு வேலை இல்லை. ஆத்திகம் மனிதர்களை இழிவுபடுத்தாவிட்டால், நாத்திகம் ஒழிந்து போகும்.  மனிதர்கள் அனைவரையும் ஆத்திகர்கள் சமமாக நடத்தினால், நாத்திகர்களை ஒழித்துவிடலாம்.” என்று தீர்வு சொல்கிறார்.

அட, கடவுளே! நம்பிக்கை என்பது உளவியல் ரீதியாக பலருக்கும் பலன் அளிக்கவே செய்கிறது. ஆனாலும், உன் விஷயத்தில் குழப்பமானவர்களும், தெளிவானவர்களும்,  தெளிந்த பிறகும் குழப்பத்தில் ஆழ்பவர்களுமாக மக்கள் இருக்கிறார்களே!

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்