அவுரங்கசீப் மோடியைவிட கெட்டவர் இல்லை!
ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கியது மோடிக்கும் பாஜகவின் தலைவர்களுக்கும் கடுப்பாக்கி இருக்கிறது போல.

காங்கிரஸின் அவுரங்கசீப் ஆட்சியை ஏற்க முடியாது என்று குஜராத்தில் மோடி புலம்பியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியே ராகுலை ஏற்றுக் கொண்டிருக்கும்போது மோடிக்கு என்ன கவலை வந்ததோ தெரியவில்லை.
காங்கிரஸில் ராகுலுக்கு எதிராக மூத்த தலைவர்கள் யாரேனும் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்று மோடியும் பாஜகவும் எதிர்பார்த்திருக்கலாம். சுமுகமாக ஒருமித்த கருத்தோடு ராகுலை தலைவராக தேர்வு செய்தவுடன் அவர்களுக்கு வயிற்றெரிச்சல் தாங்கமுடியவில்லை போல.
யோசித்துப் பார்த்தால், அவுரங்கசீப் ரொம்ப நல்லவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.
தனது தந்தை ஷாஜஹானின் ஆடம்பர நிர்வாகம் அவுரங்கசீப்பிற்கு பிடிக்கவில்லை. அதனால்தான் தந்தையை சிறை வைத்து ஆட்சியை கைப்பற்றினார் என்பது வரலாறு.
ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அவுரங்கசீப் அவருடைய வாழ்க்கைக்கு அவரே சம்பாதித்தார். ஆடம்பரத்தை வெறுத்து எளிமையாக வாழ்க்கை நடத்தினார் என்பதெல்லாம் வரலாற்று உண்மைதானே.
ஆனால், மோடியைப் போன்ற ஆடம்பரமான பிரதமரை சுதந்திர இந்தியா பார்த்தே இல்லை என்பது கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை என்கிறார்கள் காங்கிரஸ்கார்ரகள்.
ஒருமுறை அணிந்த ட்ரெஸ்ஸை மறுமுறை அணிவதில்லை. பத்து லட்சம் ரூபாய்க்கு கோட் அணிந்து உலகையே அதிர வைத்த பிரதமராகவும் மோடி இருந்தார். தனக்கென உடை வடிவமைக்க தனியாக வடிவமைப்பாளரையே நியமித்திருக்கும் பிரதமர் இவர்தான் என்கிறார்கள்.

அவுரங்கசீப் காலத்தில் நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பாக வைத்திருந்தார். தனது வருவாய்க்காக குல்லா தைத்து விற்பார் அவுரங்கசீப் என்கிறது வரலாறு. ஆனால், மதப்பற்று மட்டுமே ரொம்ப அதிகம் என்கிறார்கள்.
மோடியின் ஆட்சியில் பொருளாதாரமும் சீர்குலைந்து, ஆடம்பரமும் அதிகரித்து, கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தில் நாட்டை ஒப்படைக்கும் கயமைத்தனமும் அதிகரித்து, மதவெறியும் தலைவிரித்தாடும் நிலைமை உருவாகியிருக்கிறது.
எனவே, மதசார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கும் காங்கிரஸை மோடி விமர்சிக்க தகுதியில்லை என்றே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.
-ஆதனூர் சோழன்