70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். 2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே நடத்திய போராட்டத்தின் மூலம் கவனம் பெற்ற கெஜ்ரிவால், 2012 ல் ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பிக்கிறார். கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் டெல்லி தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் 28 இடங்களையும் கைப்பற்றுகிறார்.
நன்கு படித்தவர், ஊழலுக்கு எதிரானவர், இளைஞர்கள் பலம் கொண்ட கட்சி என பல காரணிகள் மக்களை கெஜ்ரிவாலின் பக்கம் இழுத்தன. இதனால் ஏற்பட்ட வெற்றி இன்று வரை அவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது எனலாம். இப்படி 2011 ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் மத்தியில் பிரபலமான கெஜ்ரிவால், ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்தே பல சமூக வளர்ச்சி சார்ந்த செயல்களில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 16, 1968 ல் ஹரியானாவின் ஹிசாரில் பிறந்த கெஜ்ரிவால் ஐ.ஐ.டி கரக்பூரில் பட்டப்படிப்பை முடித்தார்.
பொறியாளரான அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல்ஸ் ஆலையில் பணியில் சேர்ந்தார். ஆனால் தன்னுடைய 24வது வயதில் சமூக சேவை மீது நாட்டம் கொண்ட கெஜ்ரிவால், டாடா நிறுவனத்தின் அறக்கட்டளைக்கு பணி மாற்றம் விரும்பினார். ஆனால் டாடா அதனை மறுத்த காரணத்தால், அதிலிருந்து விலகி, சமூக சேவை செய்வதற்காக கொல்கத்தா நோக்கி நகர்ந்தார்.
கொல்கத்தாவில் காலை உணவுக்காக அன்னை தெரசாவின் ஆசிரம வாசலில் வரிசையில் காத்திருந்த கெஜ்ரிவால், அங்கு வந்த அன்னை தெரசாவிடம், அவரின் ஆசிரமத்தில் சேர்ந்து சமூக சேவை செய்ய விரும்புவதாக கூறுகிறார். கேள்விகள் எதுவும் கேட்காத தெரசா, "காலிகட் சென்று பணியாற்று" என்று ஒற்றை வரியில் பதிலளிக்கிறார்.
அன்னை தெரசாவின் அறிவுரைப்படி அங்கு சென்ற கெஜ்ரிவால், முதியவர்கள், நோய்வாய் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் என பலதரப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வந்தார். அதேநேரம் ராமகிருஷ்ணா மிஷனில் சேர்ந்து ஏழை கிராம மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்தார். இந்த நிலையில், மக்கள் சேவையில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் பங்கை உணர்ந்த கெஜ்ரிவால், அதற்காக தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் ஆரம்பித்தார்.
சுமார் மூன்று ஆண்டுகள் அன்னை தெரசா மற்றும் ராமகிருஷ்ணா மிஷனில் சேவையாற்றிய கெஜ்ரிவால், 1995 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறையில் அதிகாரியாக பொறுப்பேற்கிறார்.
அரசு பணியில் இருந்தபடியே 1999 ஆம் ஆண்டு தனது நண்பரான மனிஷ் சிசோடியா (ஆம் ஆத்மீ மூத்த தலைவர்) உடன் இணைந்து பரிவர்த்தன் என்ற அமைப்பை தொடங்கி, அதன்மூலம் மக்களுக்கான பொது சேவைகளை செய்து வந்தார். 2006 ஆம் ஆண்டு தனது அரசாங்க பணியை ராஜினாமா செய்து இந்த அமைப்பின் செயல்பாடுகள் மீது தனது முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இந்த அமைப்பு மூலம் பல ஊழல் விவகாரங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அரசாங்கத்தின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை தேவை எனவும், அரசாங்க செயல்பாடுகள் குறித்து மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசாங்கம் முறையான பதில் தர வேண்டும் எனவும் இந்த அமைப்பு மூலம் தொடர் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அதன்படி டெல்லியில் ஆர்.டி.ஐ சட்டம் கொண்டு வரப்பட்டதில் பரிவர்த்தன் அமைப்பின் பங்கும் அளப்பரியது.
தொடந்து லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடிவந்த கெஜ்ரிவால், 2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய நபராக விளங்கினார். அதன்பின் தேர்தல் அரசியலில் அடியெடுத்துவைத்த கெஜ்ரிவால், கட்சி ஆரம்பித்த ஒரே ஆண்டில் டெல்லியின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கிடைத்த இந்த முதல்வர் பதவி வெறும் 49 நாட்களில் கெஜ்ரிவாலை விட்டு சென்றது. கூட்டணி கட்சிகளின் ஒத்துழையாமையால், தனது திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளதாக கூறிய கெஜ்ரிவால் 49 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் தனித்து போட்டியிட்டு 70 ல் 67 இடங்களை பிடித்து அசைக்கமுடியாத அரசாங்கத்தை நிறுவினார் கெஜ்ரிவால். அந்த தேர்தலில் பாஜக மூன்று இடங்களை பிடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்ற அவர், அரசு பள்ளிகளை தரம் உயர்த்தியது, பெண்களுக்கான முன்னேற்ற திட்டங்கள், முறைப்படுத்தப்பட்ட தண்ணீர் வசதி, காற்றுமாசினை குறைக்க பல்வேறு திட்டங்கள் என மக்களுக்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டார். இப்படி பல திட்டங்களை செயல்படுத்தினாலும், மத்திய அரசுக்கும் இவருக்குமான உறவு மிக மோசமானதாகவே இவ்வளவு காலம் வரை இருந்துள்ளது.
துணை நிலை ஆளுநர் விவகாரம், பரஸ்பர குற்றச்சாட்டுகள், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக்கொள்ளும்படி பாஜக கொடுத்த நெருக்கடிகள் என இருதரப்பு உறவுகளும் இத்தனை காலமும் ஒரு மோசமான நிலையிலேயே இருந்து வந்துள்ளது. இருப்பினும் இந்த தேர்தல் வெற்றிக்கு பின்பு இவை மாற்றம் காண்பதற்கான கூறுகளும் சற்றே தென்பட ஆரம்பித்துள்ளன எனலாம். மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மோடி மற்றும் பாஜக வெறுப்பு பிரச்சாரம் ஏற்படுத்திய தோல்வியால் பாடம் கற்ற கெஜ்ரிவால், சட்டசபை தேர்தலில் அந்த தவறை மீண்டும் செய்யாமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.
மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு என்பதை பெரும்பாலும் தவிர்த்த கெஜ்ரிவால், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசாங்கம் செய்த வளர்ச்சி திட்டங்களை மட்டுமே பிரச்சார களத்தில் முதன்மைப்படுத்தினார். அதேநேரம் பாஜக தனது வழக்கமான பிரச்சார உடைமைகளான, பாகிஸ்தான், தீவிரவாதம், ஆம் ஆத்மி மீதான குற்றசாட்டுகள், ஷாஹீன் பாக் போராட்டம் போன்றவற்றை கொண்டு வழக்கமான அரசியல் ஃபார்முலாவை கையாண்டது. அதேநேரம், மும்முனை போட்டி என கூறப்பட்ட டெல்லி அரசியல் களத்தில் மூன்றாவது முனையான காங்கிரஸ் எந்த ஃபார்முலாவை பின்பற்றி பிரச்சாரம் செய்தது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
வெறுப்பு அரசியல் நீண்ட காலம் செல்லுபடி ஆகாது என்பதையும், மக்களின் வளர்ச்சி என்பதே, கட்சியின் வளர்ச்சியாகவும், தேசத்தின் வளர்ச்சியாகவும் இருக்கும் என்பதையும் உரக்கச்சொல்லியிருக்கிறது இத்தேர்தல் முடிவுகள். தேர்தல் முடிவுக்கு பிந்தைய மோடியின் வாழ்த்து, அதற்கு கெஜ்ரிவாலின் நன்றி ஆகியவை வழக்கமான சம்பிரதாய வார்த்தை பரிமாற்றம்தான் என்பதையும் கடந்து, வெறுப்பு அரசியலுக்கு எதிரான புதிய அரசியல் பார்வையை இந்த தேர்தல் முடிவுகள் தலைவர்கள் மத்தியிலும் விதைத்திருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது.