கர்நாடகத்துக்குச் சென்ற அண்ணாமலை அங்கேயும் தனது கலெக்சனை ஆரம்பித்துவிட்டார். அதுவும் ஆருத்ரா பாணியிலான கலெக்சன் என அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள் பா.ஜ.க.வினர். கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக அண்ணாமலை இருந்தபோதே அங்கு நடந்த தேர்தல்களில் கர்நாடக பா.ஜ.க.வுக்காக போலீஸ் வாகனங்களில் பணம் கொண்டு சென்றார் என்கிற குற்றச்சாட்டு அவர் பதவியில் இருக்கும்போதே எழுந்தது. அதேபோல் கர்நாடகத்தைச் சேர்ந்த எட்டு அமைச்சர்களை ‘ஹனி ட்ராப்’ என்கிற பெண்களை வைத்து எடுக்கும் ஆபாச வீடியோக்களால் வீழ்த்தினார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையெல்லாம் அவர் செய்தது, அவரது அரசியல் குருவான பி.எல்.சந்தோஷ் என்கிற பா.ஜ.க.வின் தேசியச் செயலாளருக்காக என செய்திகள் வெளியாகின.
பி.எல்.சந்தோஷ், மாநில முதல்வராக இருந்த எடியூரப்பாவை வீழ்த்துவதற்காக அண்ணாமலையை வைத்து இந்த வேலைகளைச் செய்தார் என்கிற பேச்சும் பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் நிதி மோசடியில் ஈடுபடும் பழக்கமுள்ளவர்கள் என்கிற தகவலும் வெளியாகி கர்நாடகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைமை கொடுத்த பணத்தில் நூத்தி ஐம்பது கோடி ரூபாயை அண்ணாமலை அமுக்கிவிட்டார், பா.ஜ.க. நின்ற இடங்களில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி பணம் பார்த்தார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.
அதே பாணியில் பி.எல்.சந்தோஷும், அண்ணாமலையும், சி.எல்.நாகராஜ் என்கிற வேட்பாளரை, தும்குரு பகுதியில் உள்ள மதுகிரி என்கிற தொகுதியில் தற்பொழுது வேட்பாளராக அறிவித்துள்ளனர். இந்த நாகராஜ், தமிழகத்தைக் கலக்கிய ஆருத்ரா ஐ.எப்.எஸ்., ஜிகாவ் ஆகிய மோசடி நிதி நிறுவனங்கள் போலவே I.M.A. SCHEME என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தியவர்களின் பங்குதாரராக இருந்தவர். மொத்தம் நாற்பத்தோராயிரம் முதலீட்டாளர்களிடம் ஒரு இலட்சம் ரூபாய் கட்டினால் முப்பதாயிரம் ரூபாய் வட்டி தருகிறேன் என ஏமாற்றி I.M.A. நிறுவனம் கொள்ளை அடித்ததற்கு துணை போனவர் நாகராஜ்.
பெங்களூரு வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த இந்த நாகராஜ்தான் I.M.A. நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்தவர். தற்பொழுது தமிழகத்தில் ஐ.எப்.எஸ். என்கிற நிதி நிறுவன வழக்கை விசாரித்த கபிலன் என்கிற போலீஸ் அதிகாரி, ஐ.எப்.எஸ்.சிடமிருந்து ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல சி.எல்.நாகராஜ், I.M.A. SCHEME என்கிற நிறுவனம் நாலாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததை மறைக்க 4.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டவர். அதன்பிறகு இந்த வழக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் சி.பி.ஐ. வசம் சென்றது. அவரை பி.எல். சந்தோஷ் காப்பாற்றினார். ஆனாலும் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த வழக்கில் சி.எல்.நாகராஜ் 4.5 கோடி லஞ்சம் பெற்ற விபரம் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றது. ஐம்பத்தி ஐந்து வயதான நாகராஜ் போலீஸ் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவரை பெரிய அளவில் பணம் வாங்கிக்கொண்டு பி.எல்.சந்தோஷும் அண்ணாமலையும் பா.ஜ.க. வேட்பாளர் ஆக்கியுள்ளனர்.
அண்ணாமலை பெங்களூருவில் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது இந்த நாகராஜுடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் மாலை வேளைகளில் ஒன்றாக இருப்பது வழக்கம். நாகராஜைக் காப்பாற்றுவதற்கு போலீஸ் அதிகாரியாக இருந்தபோதே அண்ணாமலை கடும் முயற்சி எடுத்தார். அரசியல்வாதியான பிறகு தனது குரு பி.எல்.சந்தோஷுக்கும் நாகராஜூக்கும் பாலமாக செயல்பட்டதுடன், நாகராஜிடமிருந்து I.M.A. நிறுவனம் ஏமாற்றிய நாலாயிரம் கோடியில் இருந்து ஒரு பெரிய தொகையை வசூலித்துக் கொடுத்தார் அண்ணாமலை.
2019-ல் போடப்பட்ட இந்த மோசடி வழக்கு பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல 2023 ஆகியும் வெறும் குற்றப் பத்திரிகை மட்டும் தாக்கல் செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரிக்கும் வழக்காக நிலுவையில் நிற்கின்றது. இந்த மோசடியில் நாகராஜ் தண்டிக்கப்படவில்லை. அதனால் அவரை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள் பி.எல்.சந்தோஷும், அண்ணாமலையும் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட மிகப்பெரிய கலெக்சன் நடந்துள்ளது. முதல்வராக இருந்த நான் அண்ணாமலை முன்பு கூனிக்குறுகி நிற்க வைக்கப்பட்டேன். முதல்வராக எனக்கு சல்யூட் அடித்த அண்ணாமலை என்னைப் பார்த்து கிண்டலும் கேலியும் செய்தார். நான் அவர்களுக்கு எந்தப் பணமும் கொடுக்கவில்லை. அதனால் எனக்கு சீட் மறுக்கப்பட்டது என கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டி காங்கிரசில் இணைந்தார்.
ஜெகதீஷ் ஷெட்டர் போலவே பா.ஜ.க.வில் எடியூரப்பாவின் ஆதரவாளர்களாக இருந்த துணை முதல்வர்கள் இருவருக்கு சீட் கொடுக்க பி.எல்.சந்தோஷ் மறுத்துள்ளார். அவர்களும் காங்கிரசில் இணைந்து சீட் பெற்றுள்ளனர். மொத்தத்தில் கர்நாடகத்தில் எடியூரப்பா அணி பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இம்முறை நாங்கள் பா.ஜ.க.வைத் தோற்கடிப்போம் என களம் கண்டு வருகிறார்கள் என்று கர்நாடக நிலைமையை விளக்குகிறார்கள் பா.ஜ.க.வினர்.
இதற்கிடையே அண்ணாமலையின் “கலெக்சன் மேளா” பற்றிய புகார்கள் பா.ஜ.க.வின் தேசியத் தலைமைக்கு செல்ல, கர்நாடக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்பவர்கள் பட்டியலில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஒரு பட்டியலை டெல்லி பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.