அரசியலுக்கு வருவேன்; ஆனால்....என்று சில நிபந்தனைகளை விதித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் இன்று சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ‘’2012ல் அரசியல் மாற்றம் இல்லை என்றால் வேறு எப்போதும் இருக்க வாய்ப்பே இல்லை. 54 ஆண்டுகளாக தமிழக அரசியலில் உள்ள திமுக, அதிமுக ஆட்சியை அகற்ற இதுதான் நல்ல சந்தர்ப்பம். மாற்று அரசியல் தேவை. கட்சி வேறு ஆட்சி வேறு. நான் அரசியலுக்கு வந்தால் முதலமைச்சர் பதவியில் அமரமாட்டேன். நான் கட்சி தலைவர் மட்டும்தான். முதல்வர் பதவிக்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளை அழைப்பேன். 50 வயதுக்கு கீழே உள்ள படித்தவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிப்பேன். தேர்தலில் பணியாற்றத்தான் கட்சியில் ஆட்கள் அதிகம் தேவை. தேர்தல் முடிந்துவிட்டால் கட்சியில் இருப்போரின் எண்ணிக்கையை குறைத்துவிடுவேன்.
இளைஞர்களுக்குத்தான் அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அசுர பலத்தோடு உள்ள இரண்டு கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற வேண்டும். நல்ல மாற்றத்திற்காக மீண்டும் ஒரு புரட்சி தேவை. அதற்கு என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டால் நான் வரத்தயார். இல்லை என்றால் நானும் அரசியலுக்கு வந்து, இத்தனை சதவிகிதம் அத்தனை சதவிகிதம் வாங்கி, ஓட்டை பிரிப்பதற்காக மட்டுமே வரமாட்டேன்.
எனக்கு 72 வயது ஆகிறது. உடலில் வேறு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. உயிர் பிழைத்தும் வந்திருக்கிறேன். இப்போது இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தும் இதையேதான் சொல்லப்போகிறேன். அப்போது மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள். மாற்று அரசியலுக்காக தமிழக மக்கள் என் வருகையை ஆதரிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் விளக்கி கூற வேண்டும்’’என்று கூறினார்.