ஜப்பானில் இன்ஃபுளுவென்ஸா அல்லது ஃப்ளூ வைரஸை குணப்படுத்த ஃபேவிபிரவிர் அல்லது ஏவிகன் (Favipiravir or Avigan) என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை சீனாவின் வூஹான் மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தினார்கள்.
இந்த மருந்து 340 பேருக்கு கொடுக்கப்பட்டது. அதன் பயன்கள் திருப்தி அளிப்பதாக இருந்தது என்று சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஸேங் ஸின்மின் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கான சிகிச்சையில் இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று தி கார்டியன் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
ஜப்பானின் ஃப்யூஜிஃபில்ம் டோயமா கெமிகல் நிறுவனம் உருவாக்கிய இந்த மருந்தை ஷெஜியாங் ஹிஷுன் பார்மாசூட்டிகல் நிறுவனம் உற்பத்தி செய்தது. இன்ஃப்ளுயென்ஸா வைரஸுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இது உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த மாதம் கரோனா வைரஸ் சிகிச்சைக்குச் சோதனை முறையில் சிகிச்சையளிக்க இந்த மருந்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
இந்த மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகள் 4 நாட்களில் குணமடைந்ததாகவும், வேறு மருந்துகள் கொடுக்கப்பட்டவர்கள் 11 நாட்களில் குணமடைந்ததாகவும் தெரியவந்தது. நுரையீரல் நிலைமை இந்த மருந்தைப் பயன்படுத்தியவர்களுக்கு 91 சதவீதமும், மற்றவர்களுக்கு 62 சதவீதமும் சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வூஹான் மாநிலத்தில் நோயாளிகளுக்குப் பயன்படுத்தியதில், கரோனா வைரஸ் காய்ச்சல் 4.2 நாட்கள் முதல் 2.5 நாட்களில் குணமடைந்ததாக பார்மாசூட்டிகல் டெக்னாலஜி தெரிவித்துள்ளது.
இந்த மருந்து, ஆர்என்ஏ வைரஸ்கள், அதாவது சார்ஸ்- கோவ்-2 (SARS-CoV-2) வைரஸ்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இது உற்பத்தி செய்யப்பட்டது.