Skip to main content

நந்தினிக்கு எதற்கு வீரதீர செயல் விருது!

Published on 26/01/2018 | Edited on 26/01/2018
நந்தினிக்கு எதற்கு வீரதீர செயல் விருது!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடக்குமேடு கிராமத்தை சேர்ந்த நாகராஜ் – அலமேலுவின் மகளா பிறந்த எனக்கு முன்னாடி ஒரு அக்கா இருக்காங்க. நாங்க இரண்டு பேரு தான். எங்கம்மா கூலி வேலை செய்தாங்க, எங்கப்பா தையல் கலைஞர். அளவான குடும்பம்மா தான் இருந்தது. எங்கம்மா சாப்பிடறதுக்கு என்ன கேட்டாலும் கடையிலயிருந்து வாங்கித்தரும். நான் 5வது படிக்கும் போது ஒரு நாள் திடீர்ன்னு எங்கம்மா இறந்துப்போச்சி. எங்கப்பா எங்களை காப்பாத்துவாருன்னு நினைச்சோம். ஆனா அவரும் எங்களை கண்டுக்கல. எங்க குப்பு பெரியம்மா தான் எங்களை வளர்த்துச்சி.



எங்க பெரியப்பா பெரியம்மாவுக்கு 3 பசங்க. மூன்று அண்ணன்களும் எங்க மேல பாசமா இருந்தாங்க. நானும் எங்கக்காவும் ஆரணியில உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிச்சிக்கிட்டு இருந்தோம். எங்கக்கா 11வது படிச்சிக்கிட்டு இருக்கும்போது, திடீர்ன்னு எங்கக்காவுக்கு எல்லா சீரும் செய்து கல்யாணம் செய்துவச்சாங்க. அவ அப்ப வேணாம்ன்னு தான் அடம்பிடிச்சா ஆனா, உனக்கு அடுத்து இன்னொருத்தி இருக்காம்மான்னு சொல்லி கல்யாணம் செய்து வச்சாங்க.

போன வருசம் நான் 9வது படிச்சிக்கிட்டு இருந்தேன். 2017 ஜீலை 20ந்தேதி திருமணம்ன்னு ஏற்பாடு செய்தாங்க. எனக்கு கல்யாணம் செய்துக்க விருப்பம்மில்லன்னு சொன்னன். யாரும் கண்டுக்கல. அதுக்கப்பறம் நான் படிச்ச மகளிர் மேல்நிலைப்பள்ளியில கிடைச்ச ஒரு நோட்டீஸ்சில் குழந்தை திருமணம் தடுப்பு பற்றிய விஷயம் இருந்துச்சி. அதை வச்சி அதிலயிருந்த போன் நம்பர்க்கு போன் செய்து பேசனதுக்கப்புறம் அதிகாரிகள் வந்து என் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி, என்னை கொண்டு வந்து விடுதியில சேர்த்துட்டாங்க. இப்ப நான் திருவண்ணாமலை சீனுவாசா பள்ளியில் 10வது படிக்கறன். நல்லா படிக்கனும், படிச்சி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா மாறி என்னைப்போன்று சிறுவயதில் திருமணம் செய்து தருவதை தடுக்கனும் என்றார் நந்தினி.



மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி கிருஸ்டினா டத்தி நம்மிடம், படிக்கும் வயதில் திருமணம் எதற்கு என்கிற விழிப்புணர்வு நோட்டீஸ்சில் இருந்த செல்போன் நம்பர்க்கு நந்தினி தொடர்பு கொண்டு அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் வடநேரேவிடம் பேச அவர் எனக்கு தகவல் சொன்னார். அவரின் ஆலோசனைப்படி போய் பார்த்தபோது, கல்யாண ஏற்பாடுகள் அனைத்தும் நடந்துயிருந்தன, விடிந்தால் திருமணம். சின்ன வயது பிள்ளைக்கு திருமணம் செய்யறிங்களேன்னு எச்சரிச்சிட்டு, இந்த பெண்ணுக்கிட்ட தகவல் வாங்கி ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்து, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரை கைது செய்ய வச்சிட்டு கொண்டு வந்து விடுதியில் விட்டோம். எத்தனையோ சிறு வயது திருமணங்கள் நிறுத்தப்பட்டுயிருந்தாலும் இதில் தான் ஆதாரமாக அனைவரும் சிக்கினார்கள் என்றார்.

படிக்க வேண்டும் என்பதற்காக தைரியமாக தன் திருமணத்தை நிறுத்த விழிப்புணர்வுடன் செயல்பட்ட நந்தினிக்கு, பெண்களுக்கான வீரதீர செயலுக்கான விருதை  தர தமிழக அரசு முடிவு செய்தது. பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24ந் தேதி அந்த விருதையும், அதற்கான தொகையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். விருது வாங்கிய நந்தினி அவர் தங்கியுள்ள விடுதிக்கே திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வந்து பாராட்டினார். 



நாம் அவரிடம் பேசியபோது,  குழந்தை பருவத்தில் திருமணம் செய்து வைப்பதை தடுக்க முடியாமல் தவிக்கும் இளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நந்தினி ஒரு ரோல்மாடல். தான் படிக்க வேண்டும், திருமணம் வேண்டாம் என முடிவு செய்து அதிகாரிகளுக்கு தகவல் தந்து தன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, இன்று நன்றாக படித்துக்கொண்டுள்ளார். அவரை பாராட்டி ஊக்குவிக்கவே நேரில் வந்தேன்.



குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமை. அதை செய்கிறோம். அதனால் தான் குழந்தை திருமணத்தை தடுப்பதில் தமிழகத்தில் மூன்றாவது மாவட்டமாக இந்த மாவட்டம் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 110 குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்ககூடாது என்கிற எண்ணம் பெற்றோர்களுக்கு வரவேண்டும். பிள்ளைகள் மீது பெற்றவர்களை விட அதிக அக்கறை அரசாங்கம்மோ, அதிகாரிகளோ செலுத்திவிட முடியாது. இதை சில பெற்றோர்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள். பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், அதுவே தங்களது பெரிய கடமை என நினைக்கிறார்கள். அது முடிந்துவிட்டால் எல்லாம் முடிந்ததாக நினைக்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும், அதற்காக அனைவரும் இந்த சமுதாயத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார்.



பெண்கள் தங்கள் உரிமைக்காக, தங்கள் மீது அழுத்தப்படும் அடக்குமுறைகளை எதிர்த்து அந்த பெண் தான் போராடனும், நான் போராடனன், என் மீது திணிக்கப்பட்ட திருமணத்தை தடுத்து நிறுத்தி படிச்சிக்கிட்டு இருக்கன். இதுதான் உலகம். பெண்கள் போராடினால் மட்டும்மே இந்த உலகத்தில் வெற்றி பெற முடியும் என உலகத்தை புரிந்தவராக தீர்க்கமாக பேசுகிறார் 15 வயது நந்தினி.

-ராஜ்ப்ரியன்.

படங்கள் - எம் . ஆர் . விவேகானந்தன்.

சார்ந்த செய்திகள்