Skip to main content

"ஸ்டாலின் மயங்குவார் என்று எதிர்பார்க்கிறார்;ஆனால் அவர் மயங்க மாட்டார்" - நாஞ்சில் சம்பத்

Published on 03/09/2021 | Edited on 08/09/2021

 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வியப்பான அரசியல்  கருத்துக்களைப் போகிற போக்கில் அதிமுக முக்கிய தலைவர்கள் பேசிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தன்னுடைய தந்தை கலைஞரின் தீவிர ஆதரவாளர் என்று கூறி அவையை ஆச்சரியப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களில் அவையில் பேசிய மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், தற்போது அவை நடைபெறும் முறை என்பது நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் பார்க்காத ஒன்று, மிக நேர்த்தியாகச் சபை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தற்போது பேசுபொருளாக உள்ள நிலையில் நாம் இதுதொடர்பாக திராவிட இயக்க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


தமிழக அரசியலை நீண்ட நெடும் காலமாகப் பார்த்து வருபவர் நீங்கள் என்ற அடிப்படையில் தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?


தமிழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் முடியாத அளவிற்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நொண்டிக் கிடக்கின்றது. அப்படியான ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் வந்துள்ளது. காமராஜர் கூட ஆறு மாதம் காலம் அவகாசம் கொடுப்போம் என்று அண்ணா ஆட்சிக்கு வந்த போது கூறினார். ஆறு மாதத்திற்கு பிறகு கடுமையான விமர்சனங்களை அண்ணா மீது காமராஜர் வைத்தார். இன்றைக்கு யாரும் எந்த விமர்சனமும் வைக்க முடியாத அளவிற்கு ஒரு அற்புதமான ஆட்சியை அருமை அண்ணன் ஸ்டாலின் செய்து வருகிறார். துறை தோறும் ஆய்வு செய்து தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார். அனைவரும் மலைத்து போகிற அளவுக்கு தலைவர் ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி இருந்து வருகிறது. ஜனநாயகம் தங்க சிம்மாசனம் போட்டு தமிழகத்தில் தற்போது அமர்ந்துள்ளது. அடுத்தவர்களின் கருத்தை மதிக்கிறார். அலை பேசிகளுக்கு பதில் அளிக்கிறார். விளிம்பு நிலை மக்களின் நம்பிக்கையாக தளபதி இருக்கிறார்.  இந்தியாவில் இருக்கின்ற முதல்வர்களுக்கெல்லாம் மூலவராக ஸ்டாலின் முன்னேறி கொண்டு இருக்கிறார். அதிமுக அஸ்தமனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 


வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கலந்துகொண்ட ஓபிஎஸ் ஒரு பாடலை பதிவு செய்திருந்தார். நதியினிலே வெள்ளம், கரையினிலே நெருப்பு, இடையில் இறைவனின் சிரிப்பு என்று தெரிவித்துள்ளார். இதனை எப்படி புரிந்துகொள்வது? 


கரையினில் நெருப்பு என்றால் மோடி, நதியினில் வெள்ளம் என்றால் சசிகலா, இறைவன் சிரித்துக்கொண்டு இருக்கிறான். இதுதான் தன்னுடைய சூழ்நிலை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முதல்வராக இருந்தவர் துணை முதல்வர் பதவிக்கு ஒத்துக்கொள்கிறார், எதிர்க்கட்சி தலைவராகக் கூட ஆகாமல் அதிலும் துணைத் தலைவர் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். தர்ம யுத்தம் செய்து எதிர்த்த சசிகலாவை, ஏதாவது ஒருவழியில் அவரை தற்போது நியாயப்படுத்த முடியுமா என்று யோசிக்கிறார். கட்சி ரீதியாக அதிமுகவில் 70 மாவட்டங்கள் இருக்கிறது. அதில் 20 மாவட்டங்களில் மட்டும் தான் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் போட்டுள்ளார்கள். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள பன்னீர் செல்வத்தின் மாவட்டத்தில் இன்னும் சசிகலாவை எதிர்த்து தீர்மானம் போடவில்லை. பல தென் மாவட்டங்களில் இன்னும் போடவில்லை. அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற மாவட்டங்களில் யாரும் தீர்மானம் போடக்கூடாது என்று கூறியிருக்கிறார், அதனால் பல மாவட்டங்களில் இதுவரை சசிகலாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை. சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது சசிகலாவின் கண் ஜாடைக்காக காத்திருக்கிறார். எனக்கு தெரிந்து அரசியல் வரலாற்றில் ஒரு ஹூரோ, ஜூரோ ஆன கதை ஓபிஎஸ்ஸின் கதை!


சட்டப்பேரவையில் பேசும் போது கலைஞருடைய தீவிர ரசிகர் என்னுடைய தந்தை.  அவரின் படங்களின் வசனங்களை என்னுடைய தந்தை எப்போதுமே கைகளில் வைத்திருப்பார் என்று தெரிவித்திருந்தார். கலைஞர் இறந்த போது இடம் தர மறுத்த நிலையில் இந்த மாதிரியான கருத்தை எப்படி புரிந்துகொள்வது? 


இவர் இப்படி சொல்வதை கேட்டு கல்லறையில் ஜெயலலிதா புரண்டு படுத்திருப்பார். இது அத்தனையும் பொய், இட்டுக்கட்டிய பொய். திமுக உறுப்பினர் பரந்தாமன், பன்னீர்செல்வம் வீட்டு வசதி அமைச்சராக இருந்த போது கட்டப்பட்ட கட்டிடங்கள் தொட்டால் சிணுக்கியை போல் தொட்டாலே விழுகிறது. எனவே இவர் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அது மட்டுமில்லாமல் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிவிட்டார். வீட்டுவசதி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தனக்கென்று ஒதுக்கிக்கொண்ட ஒரு பொருளாதாரக் குற்றவாளி பன்னீர் செல்வம். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியவுடன் பன்னீர்செல்வத்தின் அப்பா பராசக்தி படிக்கிறார். இதற்கெல்லாம் அண்ணன் ஸ்டாலின் மயங்குவார் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் மயங்க மாட்டார். அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அதுபோல தப்பு செய்த அவர் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.