Skip to main content

"பேச தெரியலனா அமைதியா உட்காருங்க..."  -அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி குட்டு...!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

 

தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பிரதிநித்துவமாய் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் இரண்டு அமைச்சர்கள். ஒருவர்  சீனியரான செங்கோட்டையன். மற்றொருவர் ஜூனியரான கே சி கருப்பண்ணன். செங்கோட்டையன் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உள்ளார். ஆனால் கருப்பண்ணனோ நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் பொது இடத்தில் அந்த இடமறிந்து தான் வகிக்கிற பொறுப்பை உணராமல் உளறிக் கொட்டுவதும், தாரை தப்பட்டை சவுண்ட்டு கேட்டால் குத்தாட்டம் போடுவதாகவும் உள்ளார். 

 

admk



அப்படிப்பட்ட கருப்பண்ணன் சென்ற மூன்று, நான்கு நாட்களாக ஊர் பக்கமே தென்படாமல் வீட்டுக்குள் முடங்கியிருந்துள்ளார். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் சீனியர் அமைச்சரான செங்கோட்டையன் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். கருப்பணன் கூட்டங்களுக்கு வராதது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

பின்னோக்கி பார்ப்போம். முதலில் இந்த கருப்பண்ணன் அமைச்சரானது தனி கதை. அதையும் தெரிந்து கொள்வது இச்செய்திக்கு பொறுத்தமாக இருக்கும். 2016ல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைந்தபோது, யார் யாரெல்லாம் அமைச்சர்கள் என்ற பட்டியலை தயாரித்து அதன்படி அமைச்சரவையை அமைத்தவர் தற்போது சிறையில் உள்ள சசிகலா மற்றும் சசிகலாவின் குடும்பம்தான். அந்த அதிகார மையங்களில் ஒன்றாக இருந்தவர் சசிகலாவின் சகோதரர் மன்னார்குடி திவாகரன். இந்த திவாகரன் மூலம்தான் கொடுக்க வேண்டியதை கொடுத்து தனக்கு அமைச்சர் பதவியை பெற்றவர் இந்த கருப்பண்ணன். இந்த தகவல் ஈரோடு அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும். இப்படி எந்த தகுதியும் பின்புலமும் இல்லாமல் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டவர் தான் இந்த கருப்பண்ணன். 
 

ஜெயலலிதா உயிரோடு உள்ளவரை கருப்பண்ணன் என்பவர் அமைச்சராக இருக்கிறாரா? என்பது கூட தெரியாது அதன் பிறகு சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கருப்பண்ணனுக்கு சம்மந்தி முறையாக இருந்ததால் மீண்டும் எடப்பாடி மூலம் அமைச்சராக அமர வைக்கப்பட்டார். அதன் பிறகு தன்னை யாரும் கடிவாளம் போட முடியாது என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பொதுவெளியில் பேச தொடங்கினார். 


 

திருப்பூர் பகுதியில் ஓடுகிற நொய்யல் ஆற்றில் அங்கு உள்ள சாய விஷக் கழிவுகள் நுரை போல் படர்ந்து வந்ததை பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் தானே சுற்றுச்சூழல் அமைச்சர் இப்படி சாயக்கழிவுகள் வருகிறதே?  என்று கேள்வி எழுப்பிய போது "அடபோங்கப்பா திருப்பூர் கோயம்புத்தூர்காரங்க எல்லாம் நெறையா சோப்பு போட்டு குளிக்கறாங்க அந்த நொறை தான் இது" என்று விவரம் கெட்ட முறையில் பேசினார். 
 

சென்ற ஒரு வாரத்திற்க்கு முன்பு சத்தியமங்கலத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் உள்ளாட்சி மன்றத்தில் திமுககாரங்க வெற்றி பெற்று வந்தாலும் அந்த உள்ளாட்சிக்கு நிதி கொடுப்பது நம்ம ஆட்சிதான். அப்படி இருக்கும்போது திமுக உள்ளாட்சி மன்ற உறுப்பினர் பகுதிகளுக்கு குறைவான நிதியை தானே கொடுப்போம் என உளறி கொட்டினார். ஒரு அமைச்சராக இருந்து இதுபோன்று பாரபட்சமாக பேசுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றுகூட அறியாமல் வாய்க்கு வந்ததை கொட்டினார். இந்த தகவல் அரசியல் மட்டத்தில் விவாதப் பொருளானது. 
 

திமுக பொருளாளர் துரைமுருகன் கருப்பண்ணனின் இந்த பாரபட்சமான பேச்சுக்கு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். ஆளுநர் மாளிகை இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கம் கேட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர்களை அழைத்து பொதுவெளியில் சம்பந்தமில்லாமல் பேசுவதை நிறுத்துங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். அப்போது கருப்பண்ணனுக்கு என்ன நடந்தது என்பதை கொங்குமண்டல எம்எல்ஏக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.


 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருப்பண்ணனை பார்த்து "ஆரம்பத்துல நீங்க எப்டி எப்டியோ இருந்தீங்க. எனக்கு எல்லாமே தெரியும். இப்ப கல்வி நிலையம் நடத்திக்கிட்டு இருக்கீங்க. அங்க இருக்கிற ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் அதட்டலாம், உருட்டலா பேசலாம். அது உங்க சொந்த விஷயம். ஆனால் நீங்க ஒரு அமைச்சர். அமைச்சர் பதவினா என்னென்னு முதல்லே தெரியுமா? அந்த பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? பேச தெரியலனா அமைதியா உட்கார்ந்து கோனும், ஏதேதோ பேசிவிட்டு அதனால சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடாது. இனிமேல் நீங்க எதையுமே பேச வேண்டாம். இப்படி மறுபடியும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் அப்புறம் அமைச்சர் பதவியில் இருக்க முடியாது தெரிஞ்சுக்குங்க... என்று கூறியிருக்கிறார் மிகவும்  கடுமையாக என்றனர்.
 

அதன் பிறகு சொந்த ஊர் வந்த கருப்பண்ணன் சில நாட்களாக வீட்டில் அமைதியாக படுத்து விட்டார். வெளியே வராமல் இருக்க முடியாமல் தவித்த ககருப்பண்ணன் அமைச்சர் செங்கோட்டையனை வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு "அண்னே வெளியில வராம ரொம்ப கஷ்டமா இருக்குது, நானும் நிகழ்ச்சிகளுக்கு வரேன் என கேட்க, சரி அமைதியா வந்துட்டு அமைதியா போகனும், எதுவும் பேசக்கூடாது என்ன? என்று கேட்க, மூச்சே விடமாட்டேன் என கூறியிருக்கிறார் கருப்பண்ணன். இதன் பிறகே இன்று வெள்ளிக்கிழமை முதல் செங்கோட்டையன் பங்கு பெறும் நிகழ்ச்சிகளில் வாயில் பிளாஸ்திரி போட்டது போல் கலந்து கொள்ள தொடங்கியுள்ளார் கருப்பண்ணன் என்கிறார்கள் ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினர்.