சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 வருடம் சிறை தண்டனை விதித்தது, கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரின் தண்டனை காலத்தை தற்போது நிறைவு செய்துள்ளார். கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா தற்போது மருத்துவமனையில் இருந்து பெங்களூரு புறநகரில் இருக்கும் தனியார் விடுதிக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். வரும் 7ம் தேதி சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில் ஜெயலலிதா சமாதி திடீரென மூடப்பட்டுள்ளது. இதில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணனிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் கடந்த 27ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதே நாளில் திருமதி சசிகலாவும் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் சென்னை வந்ததும் ஜெயலலிதா சமாதி சென்று மரியாதை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு பாராமரிப்பு பணிக்காக ஜெயலலிதா சமாதியை மூடியுள்ளது. சிசிகலா அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ள நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?
சசிகலா அவர்கள் 27ம் தேதி வருகிறார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் அவசர அவசரமாக அம்மா நினைவு மண்டபத்தை திறந்துள்ளார்கள். இதற்காகப் பொதுமக்களை அனைத்து மாவடங்களிலும் இருந்து திரட்டி வந்துள்ளார்கள். பொதுமக்கள் அம்மா நினைவிடத்தைப் பார்க்க விரும்புவார்கள். அந்த வகையில் அன்று நிறைய கூட்டம் கூடியது. பொதுமக்கள் தினமும் அங்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஏழு நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்த விடப்பட்ட அம்மா நினைவு மண்டபம், தற்போது பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுகின்றது என்று திடீர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். உங்களுக்கு என்ன அவ்வளவு பயம், பதற்றம். அப்படி என்றால் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம். இந்த மாதிரியான விஷயங்களை இவர்கள் தொடர்ந்து செய்துகொண்டு மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரைப் பெற்று வருகிறார்கள். இவர்களின் தொடர் நடவடிக்கையால் அதிமுக தொண்டர்கள் வேதனையின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
திருமதி சசிகலா அதிமுகவில் வர முடியாது என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் தொடர்ந்து கூறிக்கொண்டு வருகிறார்களே?
அதிமுகவின் பொதுச்செயலாளரே அவர்கள்தான், அவர்களை யார் எதிர்ப்பது? அந்த அதிகாரம் அவர்களுக்கு யார் கொடுத்தது. இந்த ஆட்சி அதிகாரம் இருக்கின்ற வரையில்தான், இந்த நிர்வாகிகள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு கூவிக்கொண்டு இருப்பார்கள். ஆட்சி அதிகாரம் முடிந்தால் தானாக அவர்கள் அனைவரும் வெளியேறி விடுவார்கள். கட்சி தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளர். அந்த வகையில் தொண்டர்கள் அனைவரும் சசிகலாவின் பக்கம் இருக்கிறார்கள். எனவே அவர்தான் கழகத்தின் பொதுச் செயலாளர். அதை யாராலும் மாற்ற முடியாது. அவர் தமிழகம் வரும்போது மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்படும். தற்போது அம்மா சமாதியை மூடிய மாதிரி மாநில, மாவட்ட எல்லைகளை எடப்பாடி மூடட்டும். நாங்களா அவரா என்று வரும் 7ம் தேதி பார்க்கத்தானே போகிறோம். பிறகு சின்னம்மா தேர்தலில் போட்டியிட முடியாது என்று கேட்கிறீர்கள், பரவாயில்லை. ஒரு கடைக்கோடி தொண்டனை முதல்வராக நாங்கள் நியமித்துக்கொள்கிறோம். எடப்பாடியை நாங்கள் முதல்வராக்க முடியும்போது, மற்றவர்களை எங்களால் அந்த பதவிக்கு கொண்டுவர முடியாதா என்ன? எங்களால் தமிழகத்துக்கு சிறப்பான ஆட்சியைக் கொடுக்க முடியும்.
அதிமுகவில் சசிகலா இருக்கக் கூடாது என்று முதல்வர், அமைச்சர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டு வருவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அவர்கள் யார் வரக்கூடாது என்று நினைப்பதற்கு? அவர்களுக்குப் பதவி கொடுத்ததே எங்கள் சின்னம்மாதான். இந்த ஆட்சியை அமைத்துக் கொடுத்துவிட்டு, சிறை சென்று தவ வாழக்கை வாழ்ந்தவர் சின்னம்மா. இவர்கள் எல்லாம் மனசாட்சி சிறிதும் இல்லாதவர்கள். இவர்களால் அவரை எதுவும் செய்ய முடியாது. எங்கள் பின்னால் தொண்டர்கள் இருக்கிறார்கள். ‘நான் சட்டமன்ற உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்’ என்று தற்போது எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கூவத்தூரில் இவர் எப்படி தவழ்ந்து பதவி வாங்கினார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். எம்.எல்.ஏக்கள்தான் என்னைத் தேர்தெடுத்தார்கள் என்று கூற எடப்பாடி பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? பொதுமக்கள் என்ன கண் தெரியாமல் இருக்கிறார்கள். மக்கள் எல்லோருக்கும் இவர்கள் நாடகம் தெரியும். அவர்கள் அனைவரும் வீதியில் நிறுத்தப்படுவது உறுதி.