இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை தனித்து வெளிப்படுத்தியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி. மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை நேரடியாகவும் கடுமையாகவும் எதிர்த்த கட்சிகளில் முழுமையான வெற்றியைப் பெற்றிருப்பது தி.மு.க மட்டுமே. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு வெற்றியைப் பெற முடியவில்லை. மேற்குவங்கத்தின் மம்தா தனது மாநிலத்தில் பா.ஜ.க. ஊடுருவுவதை தடுக்க முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் தாமரை மலராது என்ற தேர்தல் பிரச்சார முழக்கத்தை, தேர்தல் முடிவுகளிலும் நிரூபிக்கச் செய்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி.
2009க்குப் பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு தேர்தல் வெற்றி வாய்க்கவில்லை. 2011, 2014, 2016 தேர்தல் களங்களில் பெரும்பாலும் ஸ்டாலினே வியூகங்களை வகுத்தார். ஆனால், அது வெற்றியைத் தரவில்லை. கலைஞர் அளவுக்கு ஸ்டாலினால் வியூகங்களை வகுக்க முடியவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், கலைஞரின் மரணத்திற்குப் பிறகு, தி.மு.க. சந்தித்த முதல் தேர்தல் களம் இது. தி.மு.க. வின் புதிய தலைவரான மு.க.ஸ்டாலின் இந்தத் தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடம் இருந்தது.
மாநிலத்தை ஆளும் எடப்பாடி அரசு மீதும், மத்திய மோடி அரசு மீதும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் எதிர்ப்புணர்வை சரியாகக் கணக்கிட்டு, அதனை தி.மு.க.வுக்கு சாதகமாக்கும் வகையில் கூட்டணியை உருவாக்கினார். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்குகிறார் என்ற விமர்சனம் வந்ததை ஸ்டாலின் பொருட்படுத்தாமல், எல்லா தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யவேண்டும் என தி.மு.க. நிர்வாகிகளிடம் உத்தரவிட்டார். வேட்பாளர் தேர்விலும் இந்த முறை தீவிர கவனம் செலுத்தினார். நடப்பது மக்களவைத் தேர்தல், இதில் பிரதமர் மோடிக்கு எதிராக ஒருவரை முன்னிறுத்தினால்தான், மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும் என்ற கணக்குடன், காங்கிரசே முன்மொழியத் தயங்கிய ராகுல்காந்தியை தங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அதில் உறுதியாக இருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்திலும் ஸ்டாலினின் அணுகுமுறை மக்களை ஈர்த்தது. பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் தொடங்கி, வேன் பயணம், நடைப் பயணம், டீக்கடை பிரச்சாரம் வரை மக்களுடன் கலந்தார். அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க போன்ற அதன் கூட்டணிக் கட்சி தொகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகளின் கவனம் குவிக்கப்பட்டது. பாசிச மோடி அரசு-உதவாக்கரை எடப்பாடி அரசு என்கிற காட்டமான விமர்சனத்தைத் தனது பிரச்சாரம் முழுவதும் அழுத்தமாக வைத்தார். இத்தனை காலம் வரை ஜெ.வின் வியூகங்களுக்கேற்ப தி.மு.க. செயல்பட வேண்டியிருந்த காலம் மாறி, ஸ்டாலினின் வியூகங்களுக்கேற்ப அ.தி.மு.க. தலைமை மாற வேண்டிய நெருக்கடியை உருவாக்கியது ஸ்டாலினின் முதல் வெற்றி.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற ஸ்டாலினின் பிரச்சாரத்தை பொதுமக்கள் நம்புகிற வகையில் அவருடைய வியூகம் அமைந்தது. ஆளுங்கட்சிகளான பா.ஜ.க., அ.தி.மு.க. இரண்டின் அதிகார அஸ்திரங்கள் அனைத்தையும் எதிர்கொள்ளும் வகையில் தி.மு.க. தரப்பையும் தயாராக வைத்திருந்தது தான், இந்த வெற்றிக்கு அடித்தளமானது. கலைஞர் இல்லாத நிலையில், தி.மு.கவுக்குப் பலமான வெற்றியை கிடைக்கச் செய்ததன் மூலம், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக நினைத்தவர்களின் கனவைத் தகர்த்து, "வெற்றிடமின்றி அந்த இடத்தை நிரப்பியிருக்கிறேன்' எனக் காட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
தி.மு.க.வுக்கு அவசியப்பட்ட வெற்றியை ஈட்டியுள்ள ஸ்டாலின், இனி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் நிறைய உள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் செய்த பிரச்சாரம் நிறைவேறவில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. இன்னும் சற்று பலம் காட்டியிருக்க வேண்டும். லோக்கல் நிர்வாகிகளின் அலட்சியத்தாலும், ஆளுங்கட்சியின் பண பலத்தாலும் வெற்றி பெற வேண்டிய சில தொகுதிகளை தி.மு.க இழந்திருக்கிறது. எனினும், திருவாரூரைத் தவிர தி.மு.க வெற்றி பெற்ற மற்ற தொகுதிகள் அனைத்தும் அ.தி.மு.க.வின் தொகுதிகள் என்பது ஸ்டாலினுக்கு சாதகம். எடப்பாடி அரசு நீடிக்கும் காலம் வரை, ஸ்டாலினின் அரசியல் திறமை மீது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது இயல்பு. அதனைக் கருத்தில்கொண்டு கணக்குகளைப் போட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற நிலை தி.மு.க.வுக்கு வாய்த்துள்ள நிலையில், மத்தியில் நேர் எதிரான ஓர் அரசு அமைந்திருக்கும்போது தி.மு.க எம்.பிக்கள் தமிழ்நாட்டின் நலன்களை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பது சவாலானது. டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி, பழனிமாணிக்கம் என நாடாளுமன்றத்தில் அனுபவம் பெற்றவர்களும், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி போன்ற புதியவர்களும் தி.மு.கவுக்கு பலம். அத்துடன், ராஜ்யசபா எம்.பியாக வைகோ நுழையும்போது கூடுதல் பலம் கிடைக்கும். எனினும், தனி மெஜாரிட்டியுடன் உள்ள பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலுமாக எதிர்கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய போராட்டம் தி.மு.க.வை எதிர்நோக்கியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு, தி.மு.க தன் இலக்கை அடைய ஸ்டாலினிடம் என்னென்ன வியூகங்கள் இருக்கின்றன என்பது அரசியல் களத்தில் உற்று நோக்கப்படுகிறது.
-கீரன்