Skip to main content

வழிகாட்டு குழு! அதிமுக மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி!!!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020
admk

 

 

ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை இன்று காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதேபோல் அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

 

வழிகாட்டு குழுவில் மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. பெண்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஏற்கனவே எம்எல்ஏ, அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளவர்களே இந்த வழிகாட்டுக்குழுவில் உள்ளார்கள், அமைச்சர்கள் மட்டுமேதான் கட்சியா? நிர்வாகிகள் கட்சியில் தீவிரமாக பணியாற்றவில்லையா? இந்தக்குழு அமைத்துள்ளதை பார்த்தால் கட்சிக்கு முக்கியத்தும் கொடுக்கவில்லை, ஆட்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அவசர கோலத்தில் இந்த குழுவில் உறுப்பினர்களை தேர்வு செய்து போட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு அதிமுகவில் நிலவுகிறது.

 

vaigai-selvan

 

இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், ''அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும், அதற்காகத்தான் 2017ல் பொதுக்குழு நடந்தபோது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழு அமைத்திருக்கிறார்கள். அதன்பிறகு அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். 

 

இது நல்ல தொடக்கமாக நாங்கள் பார்க்கிறோம். அனைவரும் இணைந்துதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். எல்லோரும் இணைந்துதான் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். முதலமைச்சர் வேட்பாளரை கட்சி தலைமை அறிவித்துவிட்டதால் தொண்டர்கள், நிர்வாகிகள் மேலும் உற்சாகத்துடன் தேர்தலை சந்திப்பார்கள். அதிமுகவில் சண்டை நடக்கும் என எதிர்க்கட்சிகள் நினைத்ததை ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகிய இருவரும் முறியடித்துள்ளனர். 

 

சட்டமன்ற உறுப்பினர் என்றால் ஒருத்தருக்குத்தான் வாய்ப்பு தர முடியும். அமைச்சர்கள் என்றால் 30 பேருக்குத்தான் வாய்ப்பு தரமுடியும். அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் வெவ்வேறு குழுக்கள் அமைக்கும்போது பலருக்கு அந்த குழுக்களில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும். இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம் ஆட்சிமன்ற குழுவில் இருக்கிறது. பெண்களுக்கான பிரதிநிதித்துவம் ஆட்சிமன்ற குழுவில் இருக்கிறது. ஒவ்வொரு குழுவாக அமைக்கப்படும்போது எல்லா குழுக்களுக்கும் தகுதி வாய்ந்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.