தமிழகத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய உணவுத் தேவைக்காக அல்லல்படும் மக்களுக்காக அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்தது தமிழக அரசு.
மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, சென்னை மாநகராட்சி மூலமாக கிருமிநாசினி தெளித்தல், தங்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்குதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஒருவேளை உணவிற்கே வழியில்லாத ஆதரவற்றோர், வெளிமாநிலத்தில் இருந்து வேலைதேடி வந்து திரும்பிச் செல்ல வழியில்லாமல் தவிப்போர் என அனைவருக்கும் அம்மா உணவகமே கதி என்ற நிலையில், பல இடங்களில் அம்மா உணவங்கள் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே 407 உணவகங்கள் இருக்கின்றன. அரசு பொது மருத்துவமனைகளிலும், மற்ற பிரதான இடங்களிலும் இயங்கிவரும் இந்த உணவகங் களுக்கு ஆகும் செலவும் 2013 முதல் 2019 வரை நூறு கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால், வரவோ 60 கோடி ரூபாய்தான். இருப்பினும், ஏழை மக்களின் துயர் தீர்க்கும் திட்டம் என்பதால், நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 2019-20 ஆண்டிற்காக 12.7 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.
இதில் காலை 7 மணிமுதல் 10 மணிவரை இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை விதவிதமான சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் கிடைக்கிறது. இரவில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் கிடைப்பதால், பலரும் பயனடைகின்றனர். ஆனால், இந்தப் பயன் எல்லா அம்மா உணவகங்களிலும் கிடைப்பதில்லை.
சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் செய்யும் பெண்களுக்கு, இந்த கொரோனா காலத்திலும் கையுறைகளோ, முகக் கவசமோ கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் அதையெல்லாம் தருவதில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் தெரிவித்தனர். அதேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு ஒன்பது மணிவரை கொடுக்கவேண்டிய உணவு, மாலை 6.30 மணிக்கே முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டார்கள். பசியோடு அங்கு வந்த சிறுவர்கள், இதைக்கேட்டு வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபற்றி அங்கு பணிபுரிகிறவர்களிடம் கேட்டபோது, நூறு சப்பாத்தி தான் போட்டோம். அதுவும் சீக்கிரமே காலியாகிவிட்டது என்றனர்.
முதன்முதலில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சாந்தோம் பகுதியில், தற்போதுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு முன்பாக இருக்கும் அம்மா உணவகம், மாலை 7 மணிக்கே மூடப்பட்டு இருந்தது. அங்குவந்த சுபாஷ் என்பவர், எப்போ திறப்பாங்க, மூடிட்டுப் போவாங்கன்னு யாருக்குமே தெரியாது சார். கேட்டா காலியிகிடுச்சு அவ்வளவுதான்னு அசால்டா சொல்லிடுவாங்க. நாங்க என்ன செய்ய முடியும் என்றார் பரிதாபமாக.
சுபாஷிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென காரில் வந்த ஒருவர் உள்ளே சென்று விசாரித்தார். நாமும் பேச்சை நிறுத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர்களை லெஃப்ட், ரைட் வாங்கிக் கொண்டிருந்தார். எவ்வளவு சமைத்தீர்கள். எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள் என கேள்விகளை அவர் அடுக்கிக்கொண்டே போனபோது, பேச முடியாமல் திகைத்து நின்றனர் பணியாளர்கள் கண்ணியம்மாளும், தனஜா குமாரியும். பிறகுதான், காரில் வந்தவர் இந்தப் பகுதியின் ஆர்.ஐ. அமுதா என்பதும், இந்த உணவகத்தில் இது தொடர்கதையாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுவதால் விசாரிக்க வந்ததும் தெரியவந்தது.
மனிதாபிமான அடிப்படையில் எளியோரின் பசியாற்றும் இந்தத் திட்டத்தில் இத்தனை மோசடிகள் மண்டிக் கிடப்பதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர் பூவுலகின் சுந்தரராஜனிடம் முன்வைத்தோம்& நகர்ப்புறத்தில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய உணவு ஆதாரம் அம்மா உணவகம். கொரோனா போன்ற பேரிடர் சமயத்தில்தான், அம்மா உணவகங்களின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவருகிறது. இந்தமாதிரி சமயத்தில் கூட, சரிசவர செயல்படாமல் இருந்தால் அது தவறு. சென்னை செண்ட்ரலில் தவித்திருந்த வெளிமாநிலத்தவர்களுக்கு சிந்தாதிரிப் பேட்டை சமுதாயக்கூடத்தில் தஞ்சம் கொடுத்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேபோல், அம்மா உணவகத்தையும் உரிய பாதுகாப்புடன் முன்னெடுப்பது அரசின் கடமை என்று வலியுறுத்துகிறார்.