விளை நிலங்கள் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். அனைவரும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். உணவு தேவையில் நாம் தன்னிறைவை பெற வேண்டும் என்பதற்காக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 250 ஏக்கரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார் சேது குமணன்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றனர். மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம்.
ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தோம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரை தாங்கி நிற்கும் அந்த வளாகம் முழுமையும் குளு குளு தென்றல் காற்று வீசியது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருவேல காடாக இருந்த அந்த பகுதி, இப்போது வேம்பு, பூவரசு, அத்தி, வாகை என வகை வகையான மரங்களால் நிறைந்து நிற்கிறது.
ஆடு, கோழி, புறா, பன்றி, மீன் என அனைத்திற்கும் கல்லூரி வளாகத்தில் தனித்தனி பண்ணைகள் உள்ளன. இதுதவிர பூச்சியியல் துறை ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகங்களும் இடம்பிடித்திருக்கிறது. மண் புழு உரம் தயாரிப்பது, பஞ்ச காவியம் தயாரிப்பது எப்படி, அதனால் ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விரிவாக விளக்குகின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் கடலை, எள், கத்தரி செடிகள் தலையாட்டி நிற்கின்றன. வெண்டைக்காய் பறிப்பது, பாகற்காய், புடலங்காய் செடிகளுக்கு கவாத்து செய்வது என மாணவர்கள் பரபரப்பாக இயங்குகின்றனர். இன்னொரு பக்கம் நெல் நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. காக்கி சீருடையில் இருக்கும் மாணவிகள் வரிசை மாறாமல் நடவு நட வேண்டும் என்பதற்காக இருபுறமும் கயிறு கட்டி ஒரே சேர நடவு நட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் பேச்சு கொடுத்தோம், “நாளைக்கு நாம் சாப்பிட நல்ல சாப்பாடு வேண்டும். அதற்கு இயற்கை முறையில் அரிசி, காய்கறியை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கான வழிமுறைகள் இங்கே கற்றுத்தரப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆடு, மாடு, பன்றி போன்ற கால்நடை வளர்ப்பின் மூலமும் லாபம் ஈட்டுவது, மூங்கில் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, தேனீ வளர்ப்பு மூலம் தேன் சேகரிப்பு போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல.. எங்களுக்கான உணவை நாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது கல்லூரி எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம்” என்றனர்.
யார் இந்த சேது குமணன்?
பல கோடி ரூபாய் முதலீடு செய்து வேளாண்துறைக்கு என்று கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தும் சேதுகுமணன். சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் மெட்ரிக்குலேசன் பள்ளி, மகளிர் கலை அறிவியல் கல்லூரியையும், சொந்த ஊரான கண்டரமாணிக்கம் கிராமத்தில் தொழில் பயிற்சி கல்லூரியும் நடத்தி வருகிறார். அவரிடமும் பேசினோம்.
“அப்பா தமிழ் வாத்தியார். சின்ன வயசில் சினிமா மேல் அதிக ஆர்வம். படம் எடுக்கும் எண்ணத்தில் சென்னைக்கு சென்றேன். ஆனால் சினிமாவில் நிலைப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டது. பின்னர் ஒரு பேக்டரியில் வேலை பார்த்தேன், பெட்டிக்கடை நடத்தினேன், கல் உடைத்தேன் அவ்வளவு ஏன் ஒயின்ஷாப்பிலும் வேலை பார்த்தேன்” என்று சின்ன இடைவெளி விட்டு தொடர்ந்தார். 1988-ல் ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்த பள்ளியின் தாளாளர் உதவியுடன் தனியே ஒரு பள்ளி ஆரம்பித்தேன். முதல் ஆண்டில் 8 பிள்ளைகள் சேர்ந்தனர். அந்த 8 பேருக்கும் ஆயா, ஆசிரியர், வேன் டிரைவர் எல்லாமே நான்தான். அதன் பிறகு படிப்படியாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. இப்போது பல்கி பெருகி 10 ஆயிரம் மாணவர்களாக உயர்ந்திருக்கிறது“ என்றவர் தொடர்ந்து,
“மார்க் மட்டுமே மாணவர்களுக்கு முக்கியம் அல்ல என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித் திறமை இருக்கும். அதை ஊக்குவித்தால் அவன் சிறந்த மாணவனாக மாறலாம். அதை விடுத்து இன்ஜினியராகனும், டாக்டராகனும்னு உங்கள் விருப்பத்தை நீங்கள் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். நல்ல நிலம் பார்த்து நல்ல விதை விதைத்தால் நல்ல பலனை பெற முடியும்” என்கிறார்.
ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஆத்மார்த்தமான வார்த்தை இது!