நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார்.
அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேலூர் இடைத்தேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவின் ஒரே எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தது தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் முத்தலாக் மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது வேலூரில் இருக்கும் முஸ்லீம் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேலூர் தொகுதியில் அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைப்பது சந்தேகம் என்றும் வெற்றி வாய்ப்பும் குறைவாக உள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.