Skip to main content

‘முன்னாள் எம்.எல்.ஏ.களுக்கு ஓய்வூதியம் உயர்வு’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Published on 26/04/2025 | Edited on 26/04/2025

 

CM MK Stalin announces Pension increase for former MLAs

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி, சட்டமன்றப் பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.04.2025) உரையாற்றினார். அதில், “துணை சபாநாயகர்  கு. பிச்சாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்மூர்த்தியும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள். எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக கடந்த 01ஆம் தேதி (01.04.2025) முதல் உயர்த்தி வழங்கப்படும். தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்