
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் இன்றும் (26.04.2025), நாளையும் (27.04.2025) என இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள குரும்பப்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த 2 நாள் கருத்தரங்கில் முதல் நாளில் சேலம், நாமக்கல் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் நிர்வாக ரீதியான 10 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், 2ஆம் நாளில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்ட த.வெ.க. தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இதனையொட்டி விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் விதமாகக் கோவை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். விஜய் கோவை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி ஓய்வு எடுக்கச் சென்ற தனியார் விடுதி வரையில் திறந்தவெளி வாகனத்தில் பயணம் மேற்கொண்டு ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே விஜய் நடத்திய ரோடு ஷோவின் போது அவரது வாகனத்தில் இரு இளைஞர்கள் ஏறினார். அதில் ஒரு இளைஞர் “நாளைய முதல்வரே” என தொடர்ந்து உரகமாகக் குரல் எழுப்பினார். அதன் பின்னர் பாதுகாவலர் மூலம் அங்கிருந்து இருவரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கி விடப்பட்டனர். அதே போன்று மரத்திலிருந்து விஜய் வாகனத்தின் மீது தொண்டர் ஒருவர் குதித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மதியம் 03.30 மணியளவில் பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு விஜய் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அச்சமயத்தில் தனியார் விடுதியில் இருந்து பூத் கமிட்டி நடைபெற இருக்கும் இடம் வரை விஜய்க்கு மீண்டும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.