அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்துள்ள சாத்தூர் தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “உழைத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பதுதான் என்னுடைய ஆதங்கம். கே.டி.ராஜேந்திரபாலாஜியுடைய அதிகாரத்தினால்தான், எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதியில் மீண்டும் நின்று ராஜேந்திர பாலாஜி வெற்றிபெற்றால், நான் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன். மாற்று கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் ராஜேந்திரபாலாஜி.
சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் டிடிவி தினகரன் ஆட்சியில் அமர்வார். ராஜேந்திரபாலாஜி ஏன் சிவகாசி தொகுதியில் இருந்து மாறி ராஜபாளையத்தில் நிற்கிறார் என்று அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும். மக்களின் ஏகோபித்த ஆதரவோடு, கழக நிர்வாகிகள் ஆதரவுடன்தான் அமமுகவில் இணைந்திருக்கிறேன். இதுதான் ஆரம்பம், நான்தான் முதலில் வந்திருக்கிறேன். இன்னும் நிறைய பேர் வருவார்கள். சின்னம்மாவிற்கு செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ராஜேந்திரபாலாஜி, எந்தச் சமுதாய மக்களுக்கும் ஆதரவாக இருந்தது இல்லை. துணை முதல்வருக்கும், முதல்வருக்கும் எங்கள் மாவட்டத்தில் நடக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தெரியும். இனி அதிமுக கட்சியைக் காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாது. கட்சியை அடகு வைத்து விளையாடி வருகின்றனர். ஜெயலலிதா உற்சவர்; மூலவர் சசிகலாதான். அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்லது செய்தவர் சசிகலா. நிறைய பேருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தவர். எப்படி சசிகலாவிடம், பொதுச்செயலாளராக வேண்டும் என்று கெஞ்சினார்களோ, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அது நடக்கும்.
சாத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளேன். பொதுச்செயலாளர் உத்தரவு அளித்தால் போட்டியிடுவேன். கூடவே வைத்திருந்து கழுத்தறுத்தார்கள், தலைமை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் மந்திரிகளும் இருக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” என்று அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார்.