‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் மூத்த வழக்கறிஞர் பாலு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றியால் இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்து குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
நான் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது நூலகத்தில் ஒரு பாடம் எடுத்தேன், அதில் சமூக ஊடகங்களின் பங்களிப்பைப் பற்றிப் பேசினேன். தேர்தல் முடிவுகள், நீதிமன்றங்கள், ஆட்சி ஆகியவற்றை சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தும். அதில் மார்க், எலான் மஸ்க், சுந்தர் பிச்சை ஆகியோர்களுக்கு பெரிய அளவில் பங்களிப்பு இருக்கும். இவர்கள் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தீர்மானிக்க ஆசைப்படுவார்கள். இது ஒரு விதமான ஊடக சர்வாதிகாரம் என்று பேசியிருந்தேன். இந்தியாவில் பல்வேறு ஊடகங்கள் மோடிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அது தமிழ்நாட்டிலும் இருக்கிறது. இந்த மீடியாக்களால்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுக்கு விசிடிங் கார்டு கிடைத்தது.
உலகத்தின் ஜனநாயகம் 2,3 நபர்களிடம் போவதற்கான ஆபத்தை எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் சமீபத்தில் உணர்த்துகிறது. டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கி எக்ஸ் என்று பெயர் மாற்றியதிலிருந்து அவரின் நடவடிக்கைகளைக் கவனித்தால் எல்லா இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் அவரின் தலையீடு இருக்கும். அமெரிக்கா தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஒரு சார்பு நிலையை எடுத்ததில் பிரச்சனை இல்லை. ஆனால் அதிபர் டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்திற்காக எலான் மஸ்க்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் ஒரு பதவியையும் கொடுக்கப் போகிறார். எலான் மஸ்க் அரசாங்க நிர்வாகத்திற்கு வரும்போது இந்தியாவுக்குப் பிரச்சனை இருக்கிறது. ஏனென்றால் எலான் மஸ்க்கை இந்தியாவுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டார்கள்.
இந்தியாவில் 5ஜி தொலைத் தொடர்பு பகிர்வு ஏலம் முறையில்தான் நடைபெறும். ஆனால் இந்த முறை அதை ஏலத்தில் விடாமல் அலுவலக முறைப்படி அதை 19 பில்லியின் டாலருக்கு எலான் மஸ்க்-க்கு கொடுக்க தீர்மானித்து விட்டார்கள். ஜோதிராதித்ய சிந்தியா அதை உறுதிப்படுத்திவிட்டார். அதனால் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோர் இதை ஏலம் முறைக்குக் கொண்டு வாருங்கள் என்றும் தனி நபருக்கு அதைக் கொடுக்க வேண்டாம் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்தியாவின் தகவல் தொடர்பை அமெரிக்கத் தேர்தலை நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கக்கூடிய எலான் மஸ்க்கிடம் விற்றுவிட்டார்கள்.
5ஜி தொலைத் தொடர்பை எலான் மக்ஸ் கையில் எடுத்தால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியாவில் அரசியல் முடிவுகளை எடுப்பார். ஏற்கனவே மார்க், தன்னிடம் ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது என்று அவரிடமுள்ள சமூக ஊடகத்தை வைத்துச் சொல்கிறார். இவரைப் போன்றவர்கள் எந்த நாட்டின் தலையெழுத்தைக்கூடத் தீர்மானிப்பார்கள். இந்தியா மிகப்பெரிய ஆபத்தில் இருக்கிறது. தொலைத் தொடர்பு என்பது இந்தியாவின் சொத்து அதை அமெரிக்க நிறுவத்திடம் கொடுப்பது ஆபத்து. 2ஜி ஊழல் விவகாரத்தில் ஏலம் எடுத்தவர்கள் அனைவரும் வெளிநாட்டு நிறுவனத்திடம் விற்றதாகத்தான் அன்றைக்குக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இன்றைக்கு வெளிப்படையாக எலான் மஸ்க்-க்கு விற்றிருக்கிறார்கள். எலான் குறுக்கு மூளை கொண்ட நபர். அமெரிக்கத் தேர்தல் முடிவு ஆபத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.