விஸ்கி, பிராந்தி போன்ற மதுவகைகள், பிரவுன் சுகர், அபின், ஹெராயின் கேட்டமைன் என்று போதை தரும் பல்வேறு வஸ்துகளில் இவைகள் டாப் 10 ரகம். விலை கூடியது. வசதிபடைத்தவர்களால் மட்டுமே இவைகள் கையாளப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் பழக்கம் சமூகத்தில் பல்வேறு மட்டத்திலும் பரவி மக்களைப் அடிமைப்படுத்தியதையும் மறுப்பதற்கில்லை.
அங்கே இங்கே பரவித் தொலைத்த இந்த போதை, தற்போது இளைஞர்கள் சிறுவர்கள் மத்தியில் பரவியதோடு போதைக்காக அவர்களை தரை டிக்கெட் வஸ்துகளையும் நாட வைத்திருப்பது தான் அதிரவைக்கும் தகவல். அவைகளை உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே புலப்படுமே தவிர, சாதாரணமாக வெளித் தோன்றுவதில்லை. காரணம், ஒரு குறிப்பிட்ட வஸ்துக்கள் அன்றாடப் புழக்கத்திற்குப் பயன்படுபவைகளே என்று?. இயல்பான சிந்தனைக்கு வருமே தவிர, அதன் மறைமுகப் பயன்பாடுகளின் செயல் என்ன?. என்பதை அறிகிற நிலைக்கு நம்மைக் கொண்டு வருவதில்லை அது தான் விழிகளை விரியவைக்கிற சங்கதி. இதன் பயன்பாடு போதைக்காக இளைஞர்களை வசப்படுத்தியுள்ளது. இது போன்ற பழக்கங்கள் நெல்லையின் பள்ளி கல்லூரிகளின் மாணவர்கள், இளைஞர்கள், அன்றாடம் வேலை செய்து அலுத்துப் போகிறவர்களின் உடல் அசதிக்கான நிவாரணியாகவும் அதே சமயம் போதைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற வேதனையைப் பகிர்கின்றனர் நெல்லையின் சமூக ஆர்வலர்கள் சிலர். ஆனால் அவைகளின் பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் அவர்கள் உணர்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.
போதையின் உச்சமாக மாணவர்களும் சிறுவர்களும், சீப் ரேட் பொருட்களையே நாடிக் செல்கின்றனர். சாதாரணமாக உள்ளூர் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கிற நைட்ரா வெட், வேலியம் 5 மில்லிகிராம், அட்டிவன் ஒன்று மற்றும் 2 மில்லி கிராம் என்று மாத்திரை ஒன்று நான்கே ரூபாய்க்குக் கிடைக்கிற மாத்திரைகள். காயம், ஆபரேஷன், பிரசவலி போன்றவைகளால் அவதிப்படுகிற நோயளிகளுக்கு டாக்டர்கள் மட்டுமே தருகிற அல்லது அவர்களால் பிரிஸ்க்ரைப் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே தரப்பட வேண்டும். அந்த மாத்திரைகளைச் சொல்லப்படுகிற அளவு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நோயால் அவதிப்படுபவர்களின் வலியை குறைப்பதற்காக அவர்களை ஒரு விதமான உறக்கத்தில் வைக்கிற தன்மையைக் கொண்டது அந்த மாத்திரைகள்.
ஆனால் அது போன்ற மாத்திரைகள் மெடிக்கல் ஷாப்களில் தாராளமாகக் கிடைப்பதால் இளைஞர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளைப் போதைக்காக உட்கொள்கிறார்கள். அதிக டோஸ் உடலில் ஏறும் போது உறக்கத்தையும், கிறக்கத்தன்மையை பல மணி நேரம் கொடுப்பதால் பலர் அந்த சுகத்திற்காகவே பயன்படுத்தி அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். மட்டுமல்ல, பஜாரில் சொற்ப விலைக்குக் கிடைக்கிற பேப்பரில் எழுதியவைகளை அழிக்கப் பயன்படுகிற, ’ஒயிட்னர்’ ஒரு விதமான வார்னிஷ் கலந்த மணம் கிளப்பும், பஞ்சர் ஒட்டப்பயன்படுகிற சொல்யூசன் போன்றவைகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு தண்ணீர் சேர்த்துக், கசக்கியும், மூக்கில் மற்றும் வாயில் வைத்து வட நாட்டினர் பயன்படுத்துகிற ஹூக்கா போன்று இழுத்துச் சுவாசிப்பதால் ஒரு வகையான போதை ஏற்பட்டு பறப்பதைப் போன்று உணர்வு உண்டாகும் இப்படி போதைக்காக பலர் இது போன்ற சீப்ரேட் வஸ்துக்களைப் பயன்படுத்துவது வெளியே தெரியாமல் நெல்லைப் பகுதியில் அதிகரித்து வருகிறது.
மதுவை விடக் கஞ்சாவில் போதை அதிகம் என்பதால் அது புரோக்கர்கள் மூலமாகப் பொட்டலம் ஒன்று இருபது, முப்பது ரூபாய்க்கும் விற்கப்படுவது தொழிலாகவே மாறிவிட்டது. இந்த போதைக்கு வயது வித்தியாசமில்லாமல் பலர் அடிமையாகியுள்ளனர். தேனி மாவட்டத்தின் மேகமலை, வெள்ளிமலை கோரையூத்துப் பகுதிகளில் விளைகிற இவைகள் தென் மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
இது போன்ற போதைக்கு அடிமையானவர்கள் திசைமாறி குற்றச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பாளையில் போதைக் கும்பல் ஒன்று இது போன்ற சீப் ரேட் போதைக்கு இளைஞர்களை அடிமையாக்கித் தங்களின் வலைக்குள் கொண்டு வந்தததையறிந்த பாளை உதவி கமிசனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை அந்தப் போதைக் கும்பலின் சில இளைஞர்களைப் பிடித்து சிறையிலும் அடைத்திருக்கிறார். இதனால் சிலர் தலைமறைவாகி விட்டனர். பெருமாள்புரம் பகுதியில் சில பெண்களே இது போன்றவைகளை ஊக்கப்படுத்துவதாகக் கிடைத்த தகவலால் போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றன.
நாங்களும் முடிந்தவரை போதை இளைஞர்களைப் பிடித்தும், அவர்களுக்கு அறிவுரை சொல்லி எச்சரித்தும் வருகிறோம் ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் அது வேர் விடுகிறது என்கிறார்கள் போதைத் தடுப்புப் போலீசார்.
வலி நிவாரணி, மாத்திரைகளையும் சொல்யூசன், ஒயிட்னர் போன்ற கெமிக்கல்களையும் பயன்படுத்தினால் போதையுடன் கூடிய கிறக்கத் தன்மை வரும் அவைகளை அதற்காகப் பயன்படுத்தக் கூடாது தொடர்ந்து பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு நரம்புத் தளர்ச்சி போன்ற கொடிய நோயும் உண்டாகும் என்று எச்சரிக்கிறார்கள். மருத்துவர்கள். ஆனால் விளைவை உணராமல் போதைக்காக தென் மாவட்டத்தில் தலைதூக்கியிருக்கும் இந்தச் சீப் ரேட் பழக்கம் ஆபத்தனாது. ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். வளர்ந்தால், வரலாறு மன்னிக்காது.