நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், உலகின் முதல் இனம் தமிழினம் என நாம் கூறுவது எதனடிப்படையில் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தற்போது நாம் இருக்கும் இடம் தமிழ்நாடு; கொஞ்சம் பின்நோக்கி வந்தால் இந்தியா; அதற்கு மேல் ஆசியா; அதற்கு மேல் சென்றால் உலகம்; அதற்கு மேல் சென்றால் பூமி; அதற்கு மேல் சென்றால் சூரியக்குடும்பம்; அதற்கு மேல் சென்றால் இது மாதிரியான நிறைய சூரியக்குடும்பங்கள்; அதற்கு மேல் சென்றால் பிரபஞ்சம்; அதற்கு மேல் சென்றால் பால்வீதி; அதற்கும் மேல் சென்றால் கருந்துளை. கருந்துளையில் தூசு மாதிரியான அமைப்புகள் ஒன்று சேர்ந்து, அவை ஒரு கட்டத்தில் திடப்பொருளாகி, பின் மிகப்பெரிய அளவிலான வெப்பத்திற்கு உள்ளாகி, அதிலிருந்து நெபுலா என்ற நெருப்புக்கோளம் உருவாகி சுழல ஆரம்பித்தது. அதில் ஏற்பட்ட பெருவெடிப்பால் மேற்கூறிய அமைப்பு உருவாகியது என்று அறிவியல் கூறுகிறது. அந்த நெபுலாவில் இருந்து வெளிவந்த ஒரு பகுதி சில டிகிரி சாய்வாக சுழன்று கொண்டிருந்தது. அதைத்தான் பூமி என்று அறிவியல் கூறுகிறது.
அந்த சுழற்சியின்போது அங்கிருந்த பொருட்களுக்குள் மாற்றங்கள் உருவாக ஆரம்பித்தன. நெபுலா சுழற்சி வேகம் அதிகமாக இருந்ததால் அதன் மையப்புள்ளியில் இருந்து சற்று அருகில் இருந்த பகுதிகள் விரைவில் குளிர்ச்சியடைய ஆரம்பித்தன. இன்று பூமியின் மையப்பகுதியான கடகரேகை பகுதி வெப்பமண்டலப் பகுதியாக உள்ளது. பூமியின் வெளிஓரப்பகுதியான அண்டார்டிகா பனிப்பிரதேசமாக குளிர்ந்த நிலையில் உள்ளது. ஆனால், தொடக்க காலத்தில் கடகரேகைப் பகுதி குளிர்ச்சியாகவும் அண்டார்டிகா பகுதி வெப்பமண்டலப் பகுதியாகவும் இருந்துள்ளது. பூமியின் மையப்பகுதியிலிருந்து தூரத்திலிருந்தப் பகுதிகளில் இருந்த மூலக்கூறுகள் மையப்பகுதியை நோக்கி நெருங்கி வரவர கடினமான பாறைகள் உருவாக ஆரம்பித்தன. அந்தப்பகுதியில்தான் முதன்முதலில் உயிரிகள் உருவாக ஆரம்பித்தன. ஒரு செல் உயிரியில் தொடங்கி மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சி இங்குதான் ஏற்பட ஆரம்பித்தது.
இன்றைய உலக வரைபடத்தை எடுத்துப்பார்த்தால் இந்தியா, தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, கிழக்குப்பகுதியில் சிறுசிறு நாடுகள் உள்ளிட்ட இடங்கள்தான் உயிரிகள் தோன்றிய திடப்பகுதியாக அறியப்படுகிறது. இந்த இடத்தில்தான் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும். இங்கிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் உருவாகியிருக்க வேண்டும் என்று எந்த இடத்தை அறிவியல் உலகம் சந்தேகிக்கிறதோ அந்த இடமே உலகத்தினரால் லெமூரியா என்றும் நம்மால் குமரிக்கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் கால் பங்கு நிலம், முக்கால் பங்கு நீரால் ஆனது என இன்று நாம் செல்வது அன்று வேறாக இருந்துள்ளது. நான் மேலே கூறிய இடங்களில் உள்ள பாறைகளில் ஒத்த தன்மை இருப்பதாக ஆரய்ச்சியாளர்களே கூறியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குமரிக்கண்டம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு. இந்தக் குமரிக்கண்டத்தில் குமரி ஆறு, பஃறுளி ஆறு என இரு மிகப்பெரிய ஆறுகள் இருந்துள்ளன. உலகத்தின் மிகப்பெரிய நதிகளாகச் சொல்லப்படுகிற நைல்நதி, அமேசான் நதிகளைவிட மிகப்பெரிய நதிகளாக குமரிக்கண்டத்தில் இருந்த நதிகள் இருந்திருக்கக்கூடும்.
'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து...' என்று ஒருவரி சங்க இலக்கியத்தில் உள்ளது. இந்த பஃறுளி ஆற்றுக்கும் குமரி ஆற்றுக்கும் இடையில் 49 நாடுகள் இருந்துள்ளன. இந்த 49 நாடுகள், அதனிடையே அமைந்துள்ள இரு ஆறுகள் மற்றும் அதனை ஒட்டியமைந்துள்ள அடுக்கடுக்கான மலைகள் என மிகப்பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கியதே குமரிக்கண்டம். அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்லது தமிழி. குமரி கண்டத்தில் பேசப்பட்ட மொழியில் இருந்து உருவானதுதான் இன்று நாம் பேசும் தமிழ் மொழி. குமரிக்கண்டத்தை ஆண்ட அரசனாக நிலந்தரு திருவிற் பாண்டியன் அறியப்படுகிறான். பாண்டியன் என்ற சொல் சேர, சோழ, பாண்டிய வரலாற்று காலத்தில்தான் தோன்றியது என நம்மில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கலாம். பாண்டியன் என்ற சொல்லிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. பண்டைய என்ற சொல்லே பாண்டிய என்ற சொல்லில் இருந்துதான் உருவானதாகச் சிலர் கூறுகின்றனர்.
குமரி கண்டத்தில் இருந்த மக்களிடம் பல வித்தியாசமான பழக்கங்கள் இருந்துள்ளன. இன்று நாம் மேடைபோட்டு பேசுகிறோமே அதுமாதிரியான பழக்கம் அன்றைய காலத்திலும் இருந்துள்ளது. தான் கூறவேண்டிய விஷயம் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்றால் மரத்தின் மீது ஏறி நின்று பேசியுள்ளனர். அங்கு வாழ்ந்த மக்கள் கணிதத்தில் மேம்பட்டு இருந்திருக்கின்றனர். கணிதத்தில் சிறந்து விளங்குபவனை கணிதன் என்று அழைத்துள்ளனர். பின்னாட்களில் அவரை கணிதபதி என அழைத்துள்ளனர். பின்பு அது மருவி கணபதி என்றானது. இன்று நாம் வழிபாடும் பிள்ளையார் வழிபாடு இந்த மரபில் வந்ததுதான். குமரிக்கண்டம் என்ற நிலப்பகுதியை நிலந்தரு திருவிற் பாண்டியன் எனும் பெயர்கொண்ட தமிழ் அரசன் ஆண்டால் அங்கிருந்த மக்கள் என்ன மொழியைப் பேசியிருப்பார்கள்? ஆகவே, குமரிக்கண்டத்தில் பேசப்பட்ட மொழி தமிழ். எனவேதான் உலகத்தின் முதல் இனம் தமிழினம் எனக் கூறுகிறோம்.