Skip to main content

"10 பேர் செல்பி எடுப்பாங்கன்னு நம்பித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்"

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

ஒரே டயலாக்கில் உலக ஃபேமஸ் ஆனவர் நடிகர் டேனியல். பிக் பாஸ் இரண்டில் இவர்கலந்து கொண்டு அடித்த லூட்டிகள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்த அவர், பிக் பாஸ் 3 பற்றி நம்மோடு மனம் திறந்து பேசினார். நம்முடைய கேள்விகளுக்கு  அவருக்கே  உரிய காமெடியுடன் அவர் பதிலளித்தார்.

பிக் பாஸ் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி யாருக்காவது பலன் தந்துள்ளதா? பலன் தருகின்ற மாதிரிதான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள், இதனால் நீங்கள் ஏதாவது பலன் அடைந்தீர்களா?

இந்த நிகழ்ச்சிக்கு யாரும் சும்மா போறதில்லை. ஏன்னா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற அனைவரும் ஏதாவது ஒரு வேலையில் இருக்காங்க. அதிகமா மீடியா ரிலேட்டடா வேலை செய்கிறார்கள். மீடியாவில் வேலை செய்யும் எங்களுக்கு தினக்கூலினு ஒன்னு இருக்கு. எல்லா மீடியா ஆட்களுக்கும் அது இருக்கும். முக்கியமா நடிகர், நடிகைகளுக்கு இருக்கும். எங்களையும் தினக்கூலி அடிப்படையில் தான் கூப்பிடுவாங்க. நீங்க பிக்பாஸ் ஷோவில் நடிங்கன்னு கூப்பிடமாட்டாங்க. அங்கவந்து இருங்கன்னு கூப்பிடுவாங்க. நீங்க வெளியில் இருந்தா எவ்வளவு சம்பாதிப்பீங்களோ அதை நாங்க கொடுக்குறோம், எங்க கண்டிஷன் படி இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இருக்கனும்னு சொல்லித்தான் கூப்பிடுவாங்க. வெளியில நாம என்ன சம்பாதிக்கிறமோ அதைதான் சம்பளமா கொடுப்பாங்க, மக்கள் நினைக்கிற மாதிரி கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து யாரையும் கோடீஸ்வர் ஆக்க மாட்டாங்க. 

அங்க போனா பிரபலம் அடையலாம் என்கிற வாய்ப்பை நீங்கள் பெரிதா நினைக்க வில்லையா?

ரொம்ப முக்கியமான விஷயங்களை கூட ஊடகங்கள், இரண்டு மூன்று நாட்களுக்கு மேல பேசறது இல்லை. நீங்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கிட்டதட்ட 100 நாட்கள் தொலைக்காட்சியில் தெரிய போறீங்க. உங்களை பிடிக்குதோ இல்லையோ, நூறு நாட்கள் உங்களை பார்த்து பழகிடுறாங்க. இதுதான் உண்மை. இதனால் தான் நல்ல ரீச் கிடைக்கும் என்கிற காரணத்தால் எங்களை மாதிரியான போட்டியாளர்கள் அதில் கலந்து கொள்கிறார்கள்.
 

  Actor Daniel speaks about bigg boss 3


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வையாபுரி, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றால் நிறைய வாய்ப்பு வரும்னு சொன்னாங்க, ஆனா நான் சும்மாதான் இருக்கேன்னு சொல்லியிருக்காரே?

எனக்கும் அந்த நிலைமை இருந்தது, இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கிற பிரபலத்தன்மை, பாக்கெட்டை நிரப்புமானா அது தெரியாது. வெளியில் போனா, பி்க் பாஸ் டேனியல் போறாருனு நாலு பேரு கிட்ட வந்து பேசுவாங்க, பத்து பேரு செல்பி எடுத்துப்பாங்க, அவ்வளவுதான். பொருளாதார தேவையை எல்லாம் இது ஒன்னும் பெரிய அளவில் தீர்க்காது.
 

 

பணம் வரலை, ஆனா மன ரீதியா ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு?

பிரதர், நான் உலகத்துக்கு வந்து முப்பது வருஷம் ஆகுது, இத்தனை வருடத்தில் எங்க அப்பா, அம்மா சொல்லாத விஷயமா, என் காதலி சொல்லாத விஷயமா, என்னுடைய மனைவி சொல்லாத விஷயமா, நண்பர்கள் சொல்லாத விஷயத்தையா இந்த நூறு நாட்களில் புதுசா சொல்லித் தர போறாங்க. அது ஒரு கேம் ஷோ. நாளைக்கு வெளியில் வந்தா ஒரு நூறு பேரு செல்பி எடுப்பாங்களேன்னு ஒரு ஆர்வத்துல தான் உள்ளே போறோம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி தன்னுடைய மகளை பார்த்து அழுத காட்சிகள் வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எல்லாரும் அழுதுகிட்டு தான் அதிகம் இருப்பாங்களா?

நீங்க அந்த தொலைக்காட்சியோட எல்லா நிகழ்ச்சியையும் வைத்து சொல்றீங்கன்னு நினைக்கிறேன். ரியாலிட்டி ஷோ அப்படிதான் நடக்கும். நான் அந்த நிகழ்ச்சிக்காக சில சேஞ்ச் பண்ணிக்கிட்டேன், நான் நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன். அதை எல்லாம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் குறைத்துக்கொண்டேன். 10 கோடி பேர் அதை பாக்குறாங்க, அவங்களிடம் நான் ஏன் கெட்டவன்னு காட்டனும். இப்ப திரும்பவும் என் நண்பர்களிடம் கெட்ட வார்த்தை பேசிக்கிட்டு ஜாலியா இருக்கேன்.

இந்த நிகழ்ச்சியில் ஒருவரை மட்டும் டார்கெட் செய்து பேசுவது எதை காட்டுகிறது?

 

நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்கள் எல்லாம் போட்டியாளர்கள். சும்மா சொல்லுவாங்க, நீங்க என் அப்பா மாதிரி இருக்கீங்க, அம்மா மாதிரி இருக்கீங்கன்னு, எல்லாம் பொய். 15 பேரையும் எலிமினேட் செய்யத்தான் போறாங்க, ஒருத்தர்தான் ஜெயிக்க போறாங்க. அதனால், இதெல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் நிறைய பிரச்சனை இருக்கு, இளைஞர்களுக்கு வேலை இல்லை. சென்னையில் யாருக்கும் தண்ணீர் சரியா கிடைக்கவில்லை, இந்த மாதிரி சூழ்நிலையில் பிக் பாஸ் தேவையானு கேட்பவர்களுக்கு உங்களுடைய பதில் என்ன? 

இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களே ஒன்பது மணி ஆனா முதல் ஆளா பிக் பாஸ் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதை நானே நேரா பார்த்திருக்கேன். 10 கோடி ஓட்டு எப்படி வருது, ஒன்று ஓட்டு பொய்யா இருக்கனும், இல்ல எப்படி பாக்குறீங்கன்னு கேக்கறவங்க எல்லாம் முதல் ஆளா அந்த நிகழ்ச்சியை பார்க்கனும், எது உண்மை என்று இதுவரைக்கும் தெரியல.