Skip to main content

மோடியின் பிரச்சனைகளை தீர்க்க வந்த கரோனா வைரஸ்?

Published on 14/03/2020 | Edited on 20/03/2020



கரோனா வைரஸுக்கு கோவிட் – 19 என்று பெயரிட்டதற்கு காரணம், CO என்றால் கரோனாவின் முதல் இரண்டு எழுத்துகளாம். VI என்றால் வைரஸ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாம். D என்றால் டிசீஸ் என்ற வார்த்தையை குறிக்குமாம். 19 என்றால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 2019 டிசம்பர் 31 ஆம் தேதியை குறிக்குமாம். 

 

Corona virus to solve Modi's problems?

 



சரி, இந்த வைரஸ் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகமே பெரிய அளவில் பதறியது. ஆனால், சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் மாநிலத்தையே வெளியுலகத்தின் பார்வையில் படாமல் தடைசெய்துவிட்டது. அதன்பிறகு போர்க்கால அடிப்படையில் அந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி உடனடியாக சிகிச்சை அளிக்க மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரம் என்று கூறப்படுகிறது. சீனாவின் அவசர கால நடவடிக்கையை மீறி இந்த வைரஸ் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. அவற்றைத் தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் பரவிய கரோனா, சமீபத்தில் இந்தியாவுக்கும் வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

முதலில் டெல்லியிலும், கேரளாவிலும் அச்சுறுத்திய கரோனா, இப்போது மேலும் பல மாநிலங்களிலும் காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, மொத்தத்தில் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 85 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

Corona virus to solve Modi's problems?

 



அதற்குள் இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் மூடப்படுகின்றன. திருப்பதி உள்ளிட்ட பிரபலமான ஆலயங்களுக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். வழக்கமாக 2 ரூபாய்க்கு கிடைக்கிற முகமூடிகள் இப்போது 15 ரூபாய் என்று விலை உயர்ந்திருக்கிறது. மீன்கள், கோழிகள் சாப்பிட தடை விதிக்கப்பட்டு அந்த வியாபாரம் படுத்துவிட்டது. அதைக்காட்டிலும் கொடுமை என்னவென்றால், பழங்களைக்கூட சாப்பிடக்கூடாது என்று வதந்தியை பரப்பி, பழ வியாபாரமும் படுத்துவிட்டது.

இதற்கிடையே, வழக்கமாக நாற்றமெடுத்த குப்பைகளை சுத்தம்படுத்துவோர்,  எந்த முகமூடியும் அணியாமல், தங்கள் வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். குப்பைகளைக் கிளறி கிடைக்கிற உணவைத் தேடுகிறவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், கரோனா பாதிப்பை கண்டுபிடித்த தென்கொரியா அரசு, இதுவரை எந்த பதற்றத்தையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. ஆம். இதுவரை தென்கொரியாவில் எந்த ஒரு நிறுவனத்தையும் அரசு மூடவில்லை என்கிறார்கள். முகமூடி அணிந்து தங்களுடைய அன்றாட வேலைகளை இயல்பாக செய்ய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

Corona virus to solve Modi's problems?

 



புதிதாக ஒருவர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டால், அவரை உடனடியாக அதிகாரிகள் தனிமைப்படுத்துகிறார்கள். அவருக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. மார்ச் 13 ஆம் தேதி நிலவரப்படி தென்கொரியாவில் கரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 979 என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 என்றும் அரசு அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரில் நோய்த் தொற்று நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 177 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியா அரசின் ஆக்கப்பூர்வமான இந்த நடவடிக்கைகள் உலகிற்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த நாட்டில் இந்த நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியும் கிட்டத்தட்ட வெற்றிபெறும் நிலையை தொட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மாடுகளுக்கு முகமூடி அணிவிக்கிறார். காசி விஷ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கக் கல்லுக்கு முகமூடி அணிவிக்கிறார்கள்.  

 

Corona virus to solve Modi's problems?

 



உலகம் முழுவதும் 114 நாடுகளில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. உயிர்ப்பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 200 ஆகிவிட்டது. இந்தியாவில் 85 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறார்கள். அதாவது, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை சரிவு, வங்கிகள் திவால் போன்ற பிரச்சனைகளில் இருந்து மோடியை மீட்கவந்த மீட்பராக கரோனா வைரஸ் கிடைத்திருக்கிறது.