சென்னை பரங்கி மலை கண்டோன்மெண்ட் தேர்தல் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கண்டோன்மெண்ட் போர்டுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். மொத்தமுள்ள 15 கவுன்சிலர் பதவிகளில் பாதுகாப்புத் துறையினருக்கு 8 இடங்களும் பொதுமக்களுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்படும்.
இதில், 8 இடங்களைக் கொண்ட பாதுகாப்புத்துறையினருக்கு தலைவர் பதவியும், 7 இடங்களில் போட்டியிடும் பொது மக்களுக்கு துணைத் தலைவர் பதவியும் கொடுக்கப்படுகிறது. இந்த 8 பேரி லிருந்து தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால், பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 7 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவிக் காலம் 2020 பிப்ரவரியில் முடிவுக்கு வந்தது. அந்த வகையில் கடந்த மாதம் கண்டோன்மெண்ட் போர்டுக்கு தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேசமயம், தள்ளிவைக்கப் பட்ட 6 மாதங்களுக்கும் தற்போதைய கவுன்சிலர்களே தொடர்வார்கள் என்றும், ஆனால் துணைத்தலைவரை மட்டும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப் பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள்தான் எதிர்பாராத அதிர்ச்சியை அ.தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் தந்திருக்கிறது. காரணம், முதல்வர் எடப்பாடியை வீழ்த்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தி.மு.க. உதவியிருப்பதுதான்.

இதுகுறித்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரித்த போது, "கண்டோன்மெண்ட் போர்டுக்கான கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 7 இடங்களில் 6 இடங்களை அ.தி.மு.க.வும், 1 இடத்தை தி.மு.க.வும் கைப்பற்றியது. இதில் எடப்பாடியின் ஆதரவாளரான அ.தி.மு.க.வின் தேன்ராஜா துணைத்தலைவராக ஜெயித்திருந்தார். தற்போது தேர்தல் நடக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், துணைத்தலைவருக்கான தேர்தல் மட்டும் கடந்த வாரம் நடந்தது. மீண்டும் தேன்ராஜா போட்டியிட் டார். ஆனால், அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் ஆனந்த குமார் களத்தில் குதித்தார். இவர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர். இதனால் எடப்பாடியா? ஓ.பி.எஸ்.சா? என்கிற டென்ஷன் இருந்தது. அ.தி.மு.க.வில் உள்ள 6 கவுன்சிலர்களில் தேன்ராஜாவும் ஆனந்தகுமா ரும் போட்டியிடுவதால் இருவரும் தலா 3 வாக்கு களை பெறக்கூடிய சூழல்.
அதனால் தி.மு.க.விடமுள்ள ஒரே கவுன்சிலரான விஜயசங்கரின் ஓட்டுதான் துணைத்தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஆனந்தகுமாரை, தி.மு.க. கவுன்சிலர் விஜயசங்கர் ஆதரித்து வாக்களிக்க, 4 வாக்குகளைப் பெற்று துணைத்தலைவர் பதவியை கைப்பற்றினார் ஆனந்த குமார். ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், தி.மு.க.வில் பேச வேண்டியவர்களிடம் பேசியதால் இதனை சாதிக்க முடிந்தது. எடப்பாடியின் ஆதரவாளரை தி.மு.க.வின் உதவியால் தோற்கடித்துள்ளார் ஓ.பி.எஸ். ஆதரவாளர்''‘என்கிறார்கள்.
இதற்கிடையே, அ.தி. மு.க.வை ஆதரித்து வாக்களித்த விஜயசங்கரை துரோகி என திட்டித்தீர்த்து வருகிறார்கள் கண்டோன்மெண்ட் நகர தி.மு.க.வினர்.