முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நேரம் தவறாமையை வெகு கவனமாக கடைப்பிடித்து வந்தவர் என்பதற்கு எத்தனையோ சம்பவங்களை கண்முன் நிறுத்தலாம்.
1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னை எம்.ஐ.டி.கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்தக் கல்லூரியின் பழைய மாணவரான கலாம் கலந்து கொள்ள வந்தார். அப்போது இந்தியப் பாதுகாப்பு துறை அமைச்சக ஆலோசகராக இருந்தார், பாரத ரத்னா அப்துல் கலாம்.
சென்னை வாசிகளுக்குத் தெரியும் குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாகத்தினுள் நுழைவதற்கு நெடுஞ்சாலையிலிருந்து இரயில்வே தண்டவாளப்பாதையை கடந்தாக வேண்டும் என்பது. அன்றைக்குப் பார்த்து வண்டி வரும் நேரம் வழியில் குறுக்காக இரும்பு கேட் மூடப்பட்டிருந்தது.
தான் வந்த கார் வழியில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தார், கலாம். ரயில் வந்து செல்லவும் கேட் திறக்கவும் எப்படியும் அரைமணி நேரமாகலாம். அதற்காக காத்திருப்பது காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் மேடையில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாம், சட்டென்று காரிலிருந்து கீழே இறங்கினார்.
உடன் வந்திருந்த கறுப்புப் படை காவலர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடைத்து கிடந்த இரும்பு கேட்டின் அடியில் குனிந்து தண்டவாளப் பாதையில் கடந்து கல்லூரிக்குள் நடந்தே போய்விட்டார். டாக்டர் அப்துல் கலாம் இதோ போகிறார் என்று மக்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு அவர் பின்னால் ஓடினார்களாம்.
ஆக, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதிலும் கலாம் எப்பொழுதும் முதல் குடிமகன் தான்.