திரைத்துறையில் கோலிவுட் ஜங்ஷன் அடுத்த ஆண்டை வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், 2022 இல் இந்த ஜங்ஷனிற்கு வந்த இரயில்களின் வைரல் நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
ஆண்டுதோறும் வைரல் என்கிற இரயிலை ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் ஓட்டிய நிலையில், இந்த ஆண்டும் அந்த எக்ஸ்பிரெஸை முன்னணி திரைப் பிரபலங்கள் ஓட்டியுள்ளனர். அந்த வகையில், ஜனவரி எனும் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த வைரல் எக்ஸ்பிரஸ் தற்போது டிசம்பர் எனும் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறது.
எல்லா ஜங்ஷனிலும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் எனப் பல்வேறு ரயில்கள் இருப்பது போல கோலிவுட் ஜங்ஷனிலும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா என பல்வேறு ரயில்கள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு ரயிலாக பயணிப்போம்.
ரஜினிகாந்த் ரயில்
இந்த ஆண்டு ரஜினிகாந்த்தின் ரயில் சத்தமில்லாமல் மவுனம் காத்திருந்தாலும், எப்போதும் கவனிக்கப்படும் சிறப்பு ரயிலாகவே இருந்து வந்துள்ளது. 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்' என அவர் கூறிய வசனத்தைப் போல இந்த ஆண்டு லேட் என்ட்ரி கொடுத்து லேட்டஸ்ட்டாக வைரலானவர் ரஜினிகாந்த். 2022 ஆம் ஆண்டு புதிய ரயில் எதையுமே அவர் இயக்கவில்லை. 2002 ஆம் ஆண்டு ஓட்டிய பழைய ரயிலையே பட்டி, டிங்கரிங் செய்து தண்டவாளத்திற்குக் கொண்டு வந்தார். அந்த ரயில் தான் 'பாபா' என்னும் பழைய எக்ஸ்பிரஸ். வேகமாக புக் ஆகுற சிறப்பு ரயிலைப் போல ஆரம்பித்து, பிரேக் டவுன் ஆன ரயிலைப் போல நின்று போனது. 20 ஆண்டுகள் கழித்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த ரயில், 'வந்தே பாரத்' ரயிலைப் போல மாஸ் ஓப்பனிங் இருந்தது. பின்பு மாடு மோதி நிற்பதைப் போல நின்றுவிட்டது. வசூல் சாதனை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.
அடுத்தடுத்து இங்கே பல பெட்டிகள் அவரை நம்பிக் காத்திருக்கிறது. இழுத்துச் செல்லும் இஞ்ஜினாக இருப்பாரா? மாடு மோதியதுமே நின்று போகிற ரயிலாக இருப்பாரா? என்பதை 2023 தான் நமக்குச் சொல்ல வேண்டும்.
கமல்ஹாசன் ரயில்
தண்டவாளத்திலும் தரையிலும் ஓடுகிற இந்த கமல் எக்ஸ்பிரஸ், சினிமாவையும் அரசியலையும் அப்பப்ப தொலைக்காட்சியிலும் ஓடியது. இந்த ரயில்தான் உள்ளூரைத் தாண்டி உலகமெங்கும் பேசப்பட்டது. அதாவது டோலிவுட், பாலிவுட் என்று பல ஜங்சன்களை கடந்தது. இந்த உலக இரயில், 'விக்ரம்' என்னும் கொண்டாட்டப் பெட்டியைக் கொண்டு அகில இந்தியாவையும் கொண்டாட வைத்தது. ஓட்டம்னா ஓட்டம் அவ்ளோ வேகவோட்டம்.
பல வருடங்களாக இந்த இரயிலை இயக்க ஏங்கிய அந்த ‘பைலட்’ லோகேஷ் கனகராஜ். மூன்றாண்டுகளாகப் பார்த்துப் பார்த்துப் பக்குவமாக வேலை செய்து இந்த விக்ரம் இரயிலை கமலின் பயணிகளைத் தாண்டி மற்ற பயணிகளையும் கொண்டாட வைத்தார். விக்ரம் என்னும் ரயில் ஓடிய ஓட்டத்தில் பயணிகள் என்னும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வசூலைக் குவித்தது. கமல் என்னும் ரயிலை ஓட்டியவரோ குஷியில் பரிசு மழை பொழிந்தார். ரோலக்ஸ் வாட்ச், கார், பைக் என்று அள்ளிக் கொடுத்தார். கமல் தன் வாழ்நாளில் ஓட்டிய 229 ரயில்களில் பெரு ஓட்டம் ஓடிய இந்த ரயில் பெட்டிக்காக அவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்தார் என்றால் மிகையாகாது. தொடர்ச்சியாக இன்னும் இந்த ரயில் 2023 இல் எப்படி ஓடப்போகிறது என்று பார்ப்போம்.
அடுத்த ரயில் அஜித்
அஜித் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்து சிவப்புக் கொடி காட்டியிருந்தாலும் அவரது ரசிகர்கள் பச்சைக் கொடியையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் என்னும் பயணிகளை நேரடியாகச் சந்திக்காமல் போக்குக் காட்டி ஓடுகிற இந்த ரயிலை பார்க்க காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார்கள் பயணி என்னும் ரசிகர்கள்.
அஜித்தை எங்குப் பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் கூடி விடுகிறது. அந்த வகையில் இந்தாண்டு இரண்டு ஜங்சனில் இந்த ரயிலைக் காண கூட்டம் அலைமோதியது. முதலாவதாக திருச்சி. அஜித்திற்கு நடிப்பை தாண்டி பைக், கார், ஹெலிகாப்டர், போட்டோகிராபி உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும், துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் திருச்சியில் நடந்த நிலையில், அதில் போட்டியாளராக அஜித்தும் கலந்துகொண்டார். அஜித் திருச்சியில் இருக்கும் தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் ரைபிள் கிளப் முன்பு திரண்டு விட்டனர். திரையில் மட்டும் பார்த்த அஜித்தை நேரில் பார்த்தவுடன், அந்த இடத்தில் சிட்டிசன் பட க்ளைமாக்ஸ் காட்சி ரீசூட் எடுத்தது போல அமைந்திருந்தது. படத்தில் வரும் காட்சியைப் போல் ரசிகர்களைப் பார்த்து அஜித் கையசைக்க, அந்த வீடியோ சோசியல் மீடியாக்களில் வெளியாகி வைரலானது.
இரண்டாவதாக லடாக் பைக் பயணம். அவ்வப்போது பைக்கில் பயணம் மேற்கொள்ளும் அஜித் இந்த ஆண்டு லடாக்கைச் சுற்றி வந்தார். 'துணிவு' படப்பிடிப்பின் இடைவெளியின் போது பயணம் மேற்கொண்ட அஜித் குழுவுடன் நடிகை மஞ்சு வாரியரும் இணைந்து கொண்டார். அஜித், மஞ்சு வாரியர் அண்ட் கோ-வுடன் அந்தக் குழுவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வழக்கம்போல் ட்ரெண்டிங் ஆனது. மேலும், அந்த ட்ரிப்பில் அஜித்தைக் காண ஒரு ரசிகர் மூன்று நாட்கள் தேடி அஜித்தைப் பார்த்தவுடன் அதைக் கூற, "தேடிக்கிட்டு இருந்தீங்களா... நான் என்ன கொலைகாரனா.. இல்ல கொள்ளைக்காரனா..." என ஜாலியாக ரிப்ளை கொடுத்தார் அஜித். அந்த வீடியோவும் ட்ரெண்டானது. இந்த அஜித் ரயில் அடுத்ததாக உலகம் சுற்றப்போவதாகச் சொல்லி இருக்கிறது. அதை 2023 இல் எங்கெல்லாம் சுத்தி வருகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் என்னும் விரைவு வண்டி
எல்லா பண்டிகைக் காலங்களிலும் புக் பண்ணப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் இது. தீபாவளி பொங்கல் எல்லாம் முந்தைய காலத்தில் ஓடி ஓடி விளையாடிய சிறப்பு ரயில் இது. விஜய் என்னும் விரைவு வண்டி அது. இவரது நடிப்பில் இந்த ஆண்டு பீஸ்ட் படம் வெளியானது. 'கோலமாவு கோகிலா', டாக்டர்' என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் திலீப்குமாருடனும், 'சர்க்கார்' படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும் விஜய் இணைந்திருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அப்படியான எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும், இப்படத்திலிருந்து முதல் பாடலாக வெளியான 'அரபிக்குத்து' பாடலின் லிரிக் வீடியோ பலத்த வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் பிளே லிஸ்ட் முதல் யூடியூப் ட்ரெண்டிங் லிஸ்ட் வரை 'மலம பித்தா பித்தாதே' தான். தமிழ் ரசிகர்களைத் தாண்டி மற்ற மொழி ரசிகர்களும் அரபிக்குத்துக்கு வைப் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இப்பாடல் 495 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து, 500 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கவுள்ளது.
'என் நெஞ்சில் குடியிருக்கும்...' என ரசிகர்கள் மீது தான் வைத்துள்ள அன்பை எல்லா நிகழ்ச்சிகளிலும் பேசி வரும் விஜய், அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஆனால், கடந்த 5 வருடங்களாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு மேற்கொள்ளாமல் இருந்த விஜய் இந்த ஆண்டு அதை நடத்தினார். அது பலரது கவனத்தை ஈர்த்தது. வழக்கம் போல விஜய்யை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பரிக்க, அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
வருடக் கடைசியில் ஒரு எக்ஸ்பிரஸ் ஓட்டத்திற்கு முன்னேற்பாடாய் வாரிசுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒரு பிரமாண்டத்தைக் காட்டி இந்த ரயிலுக்கு போட்டி வேறு எந்த ரயிலும் இல்லை. நானே தான் போட்டி ரயில் என்று தனி டிராக்கில் போய்விட்டார். குட்டிக் கதை சொல்லியும் இந்த ஆண்டை தள்ளிவிட்டார். 2023 இல் எத்தனை குட்டிக் கதை வச்சிருக்காரோ?
சூர்யா என்னும் மெட்ரோ ரயில்
ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு அங்கீகாரமாகப் பார்க்கப்படுவது விருதுதான். அப்படி இந்தியாவின் ஆஸ்கர் விருதாகப் பாக்கப்படும் தேசிய விருது, இந்தாண்டு சூர்யாவுக்குக் கிடைத்தது. தன் சினிமா வாழக்கையில் முதல் முறையாக சூர்யா வாங்கியுள்ளது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் மொமெண்ட்டாக அமைந்தது. சூரரைப்போற்று படத்துக்காக சிறந்த நடிகராக சூர்யா விருது வாங்க, அப்படத்தைத் தயாரித்தற்காக 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவின் மனைவி ஜோதிகா சிறந்த படத்திற்கான தேசிய விருதை வாங்கினார்.
எல்லா இஞ்ஜினிலும் இணைந்து ஓடும் இந்த ரயில் என்பதைப் போல, கமல் என்னும் நீண்ட பெட்டியோடு கடைசிப் பெட்டியாக இணைந்து கொண்டது. விக்ரமில் ரோலக்ஸாக வந்து சிறப்பு கவனத்தையும் பரிசும் பெற்று சென்றார். இவை இரண்டுமே கோலிவுட் ஜங்ஷனில் பரவலாக பேசப்பட்டது.
காட்சிக்கு வந்த கனவு இரயில்: பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமா வரலாற்றில் 'பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தனர். கடைசியில் ஒரு வழியாக மணிரத்னம் அதை கையில் எடுத்து சக்ஸஸ்ஃபுல்லாக மாற்றினார். எந்தத் தடையும் இல்லாமல் ரிலீஸ் செய்தார். இதற்கு பெரும் துணையாக அவரோடு இருந்தது லைக்கா நிறுவனம். 500 கோடி பட்ஜெட்டுக்கு மேலாக எடுக்கப்பட்ட இப்படம் முதன்முதலில் ஐமேக்ஸ் வெர்சனுக்கு அப்டேட் செய்யப்பட்டு திரையிடப்பட்ட கூடுதல் சிறப்போடு ரிலீசானது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்பட்ட இப்படம், இந்தக் காலகட்டத்தில் நீண்ட நாட்களாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கொண்ட சிறப்பைப் பெற்றது. கலெக்ஷனிலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து வாயடைக்கச் செய்தது. வரலாற்று புனைவு வைரலாக, இப்படத்தின் வெற்றியின் தாக்கத்தால் வேள்பாரி நாவலைப் படமாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை 1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் எடுக்கவுள்ளதாகவும், அதில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா ரயில்
கடந்த வருடம் 'ஊ...சொல்றியா மாமா' என்று கிளம்பி தன் நடனத்தால் ரசிகர்களைக் குஷிப்படுத்திய சமந்தா இரயில், இந்தாண்டு தன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் போய்க் கொண்டிருந்த இந்த ரயில், திடீரென தான் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை வருத்தில் நிற்க வைத்தது. இருப்பினும், ‘இது ஒரு போராட்டக்களம் தான்; கண்டிப்பாக மீண்டு வருவேன்’ என ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தார் சமந்தா.
தற்போது சிகிச்சை பெற்று வருவதால் சினிமாவில் இருந்து ஒரு நீண்ட பிரேக் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் குணமடைந்து மீண்டும் இந்த ரயில் சீறி ஓடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். சமந்தாவை பற்றி எந்த செய்தி வெளியானாலும் அதனை வைரலாக்கும் அவரது ரசிகர்கள், சமந்தா அப்செட்டில் இருப்பதை வைரல் செய்யாமலா இருந்திருப்பார்கள். சமந்தா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கிவிட்டனர்.
திருமணம் எக்ஸ்பிரஸ்
இந்தாண்டு கோலிவுட் ஜங்ஷனில் பல காதல் திருமணங்கள் நடந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரயில்கள் வாழ்க்கை தண்டவாளத்தில் இணைந்தது. இந்த இரயில் ஓட ஆரம்பித்த ஆறு மாதத்தில் தங்கள் ரயிலில் இரண்டு புதிய பெட்டி சேர்ந்துவிட்டதாக அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் வைரல் ஃபீவரையும் கொண்டுவந்தது.
முதல் மனைவியைப் பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான், கடந்த மே மாதம் அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 'நீ கவிதைகளா...' பாடலை கேட்டு ஆதி - நிக்கி கல்ராணி பிரிவில் வருந்திய ரசிகர்களை தங்கள் நிஜ திருமணம் மூலம் மகிழ வைத்தனர். பரத்தின் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, கொடிவீரன் படத்தில் கொடிய வில்லியாக மிரட்டியவர் நடிகை பூர்ணா. இவர் தனது காதலன் ஆசிப் அலியை திருமணம் செய்துகொண்டு ஜங்கஷனில் நின்றிருக்கிறார். இது தற்காலிக நிறுத்தமா அல்லது நிரந்தர நிறுத்தமா என்பது தெரியவில்லை.
அக்டோபரில் ஹரிஷ் கல்யாண் - நர்மதா உதயகுமார் இரயில், நவம்பரில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன், டிசம்பரில் ஹன்சிகா - சோஹெல் கதூரியா ஆகிய ரயில்கள் தங்கள் வாழ்க்கை தண்டவாளத்தில் இணைந்து பயணிக்கத் துவங்கியுள்ளன.
வெளியூர் ரயில்கள்
‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்ற வாசகத்தைப் போல வந்தாரை வாழ வைக்கும் கோலிவுட் எனப் புதிதாகச் சேர்த்துக் கொள்ளலாம் போல. அந்த அளவுக்கு மற்ற மொழிப் படங்கள் இந்தாண்டு தமிழ்நாட்டில் நல்ல சொகுசாக வாழ்ந்துள்ளன. பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் எதிர்பார்த்ததைப் போலவே கோலிவுட் ஜங்ஷனில் அதிவிரைவு இரயிலாக ஓடியது. அதை ஃபாலோவ் செய்து வந்த கே.ஜி.எஃப்-ன் ராக்கி பாயின் தாதர் எக்ஸ்பிரஸ், கோலிவுட் நிறுத்தத்தில் சூப்பர் தாதராக ஓடியது. இதையடுத்து கோலிவுட்டில் ஓடிய மைசூர் எக்ஸ்பிரஸ் 'காந்தாரா'வை ஜி.டி. எக்ஸ்பிரஸின் நாயகர்களான ரஜினி, தனுஷ் உள்ளிட்ட பலரும் பாராட்டினார்கள். வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்படி மற்ற மொழிப் படங்கள் கோலிவுட்டில் அதிரி புதிரி ஹிட்டடித்தது வைரலாக பேசப்பட்டது.
2022 இல் ஓடிய பல எக்ஸ்பிரஸ்களில் சிலவற்றில் டிராவல் பண்ணிட்டோம். 2023 இல் கோலிவுட் ஜங்ஷனுக்கு வர இருக்கும் எக்ஸ்பிரஸ்களிலும், இங்கிருந்து கிளம்பப் போகிற எக்ஸ்பிரஸ்களிலும் பணிக்க வெய்ட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் கோலிவுட் பயணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.