மன்னராட்சி காலத்துக் கதை சொல்லும் படங்கள் என்றாலே வழக்கமான ஸ்டுடியோக்கள், அரண்மனை செட்டுகள், சாமரம் வீசும் பெண்கள், அரியணை, ஏகப்பட்ட ஆபரணங்கள் என இருந்தது அந்தக் காலம். இப்போதோ கோடிகளில் செலவு செய்து கிராஃபிக்ஸ், பிரம்மாண்டமான செட்டுகள், இந்தியா முழுவதுமான மார்க்கெட்டை கவரத்தக்க நடிகர்கள் என வேறு வடிவம் எடுத்துள்ளன இத்தகைய படங்கள். இவை இல்லாமல் கொஞ்சம் சறுக்கினாலும் அப்படங்கள் நகைச்சுவையாகவே தெரிந்தன. இந்த இரண்டு வகைகளிலும் இல்லாமல் வந்து நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது இயக்குநர் தரணி ராசேந்திரனின் 'யாத்திசை' (தென் திசையிலுள்ள நிலப்பகுதி). இத்தகைய ஒரு படத்தைக் கருவாக, கனவாகச் சுமந்ததற்கும் அதை முயற்சி மேற்கொண்டு நேர்த்தியாக உருவாக்கியதற்கு இயக்குநருக்கும் அவருக்கு உறுதுணையாக இருந்த குழு மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் வாழ்த்துகள்.
7ஆம் நூற்றாண்டில் இரணதீர பாண்டியன் தலைமையிலான படை சேர - சோழ கூட்டுப்படையை வென்று வெளியேற்றிவிட்டு சோழ அரண்மனையில் மீன் கொடி நாட்டி ஆண்டு வருகிறது. சோழர்களுக்கு ஆதரவாகப் போரிட்ட எயினர்களும் தங்களது நிலத்தை இழந்து பாலை நிலத்தில் வேட்டையாடு பிழைப்பு நடத்தி வருகின்றனர். எயினர் கூட்டத்தின் தலைவனான கொதி பாண்டியர்களுடன் போரிட்டு தாங்கள் இழந்த வாழ்க்கையை மீட்க வேண்டுமென்று விரும்புகிறான். பிறக்கவிருக்கும் தனது மகன் இளவரசனாகப் பிறப்பானென சபதமெடுக்கிறான்.
பெரும் படை கொண்ட சிறந்த வீரனான இரணதீர பாண்டியனை எதிர்க்கத் துணியும் கொதியின் முயற்சி வெற்றி பெற்றதா என்பது யாத்திசை நேரடியாக நமக்கு சொல்லும் கதை. இதைத் தவிர பல விசயங்களை ஆங்காங்கே பேசுகிறது. யாத்திசையின் மிகப்பெரிய நேர்மறை அம்சம், சாதனை என்பது அது செயல்படுத்தப்பட்டு (execution) உருவாக்கப்பட்டுள்ள விதம். இயக்குநர் தரணி ராசேந்திரன் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு 7ஆம் நூற்றாண்டு வாழ்க்கையை, அது நடந்திருக்கக்கூடிய இடங்களை, பேசப்பட்டிருக்கும் மொழியை, உணவு, சடங்குகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கற்பனை சேர்த்து குறைந்த பொருட்செலவில் நம்பும்படி, ரசிக்கும்படி தரமாக உருவாக்கியுள்ளார். இது பல கதவுகளைத் திறந்து தடைகளை உடைக்கக்கூடிய செயல்பாடு.
பாலை நிலம், காடு-மலை-கரடுகள் தாண்டிய கொதியின் பயணம், போருக்கு முன்னான சடங்கு விரிவாகவும் வெளிப்படையாகவும் காட்டுவதின் மூலம் புறத்தையும், அரசர்களின் அதிகார வேட்கை, அத்தகைய வன்முறையும் அரசியலும் நிறைந்த வாழ்வில் பெண்களுக்கான இடம், தேவரடியார்களின் மனநிலை என அகத்தையும் பேசுகிறது யாத்திசை. இதில் புற விசயங்கள் அத்தனையுமே சுவாரசியமாக, புதியதாக அமைந்து பல இடங்களில் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அக விசயங்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பேசப்பட்டிருக்கலாமோ என்று எண்ண வைக்கின்றன.
அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவு - மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு - சக்ரவர்த்தியின் இசை - ரஞ்சித் குமாரின் கலை - ஓம் சிவப்ரகாஷின் சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட அத்தனை துறைகளும் இயக்குநரின் கனவைச் செயல்படுத்தப் பேருதவி புரிந்திருக்கின்றன. தங்கள் உடலைத் தயார்ப்படுத்தி உழைத்துள்ள நடிகர்களின் பங்கும் முக்கியம். ஓரிரு இடங்களில் காட்சிப் பொலிவு குறைவாகத் தெரியும் VFX வேலை, பல காட்சிகளில் எயினர்கள் மொழிக்காக சப்-டைட்டில் கவனிக்க வேண்டிய சங்கடம், புதிய நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட சில குறைகள் மட்டுமே. இத்தகைய முயற்சியில் படம் நமக்குக் கொடுக்கும் அனுபவத்தில் அவை மறந்துவிடுகின்றன.
யாத்திசை - தமிழ் சினிமாவில் திறக்கப்பட்டுள்ள புதிய திசை!