லோக்கல் பையன் சந்தானத்திற்கும், பிராமண குடும்பத்தைச் சேர்ந்த மாடர்ன் பெண் தாரா அலிஷாவிற்கும் கண்டவுடன் காதல் ஏற்படுகிறது. இதை வழக்கம்போல் நாயகியின் அப்பா (வசூல்ராஜா புகழ் சப்ஜக்ட்) யட்டின் கார்யேகர் ஜாதி மதத்தை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, கடுப்பான சந்தானம் அன் பிரண்ட்ஸ் அவரை 'போட்டுத் தள்ளி'விடுகின்றனர். இதையடுத்து சந்தானம் எப்படி இந்த கொலையிலிருந்து தப்பித்து காதலி கரம் பிடித்தார் என்பதே A 1 படத்தின் கதை.
அரதப்பழசான கதையை சென்னையின் லோக்கல் நேட்டிவிட்டியுடன் கலந்து, ஆங்காங்கே ஏற்ற இறக்கங்களோடு கலகலப்பாக நகர்கிறது A 1 படம். சந்தானத்தின் வழக்கமான ஒன் லைன் பன்ச் காமெடிகள், அதற்கு ஈடுகொடுத்து கவுண்டர் கொடுக்கும் லொள்ளு சபா நண்பர்கள் மூலம் ரசிக்கவைக்கும் இப்படம் கதைத்தேர்வு, லாஜிக் மீறல்கள் போன்ற விஷயங்களில் சற்று அயர்ச்சி ஏற்படுத்தினாலும் படத்தின் கலகலப்பான காட்சிகள், கிரிஸ்பான நீளம் ஆகியவை அதை சரி செய்துவிடுகின்றன. குறிப்பாக சென்னைக்கே உரித்தான லோக்கல் ஸ்லாங்கில் இருக்கும் வசனங்கள் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளன. இயக்குனர் ஜான்சன் சந்தானத்தின் பலம் அறிந்து கதையை தேர்வு செய்துள்ளது படத்திற்கு இன்னொரு ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது.
சந்தானம் தன் வழக்கமான நடிப்பையே இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த முறை இடையில் போட்ட அதிரடி ஹீரோ வேஷத்தை களைந்துவிட்டு வந்திருக்கிறார். தனக்கான சக்ஸஸ் ரூட் இதுதான் என்பதை உணர்ந்தது போல இருக்கிறது படத்தில் அவரது பெர்ஃபார்மன்ஸ். அவர் அடிக்கும் ஒன் லைன் பன்ச் காமெடிகள் ஆங்காங்கே சிரிப்பை வரவைக்கின்றன. இருந்தும் சந்தானத்தை காட்டிலும் அவரின் நண்பர்களாக வரும் லொள்ளு சபா நடிகர்கள் நன்றாக கிச்சிக்கிச்சி மூட்டியுள்ளனர். இவர்கள் கூடவே மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். நாயகி தாரா அலிஷா சம்பிரதாய நாயகியாக வலம் வந்துள்ளார். ஸ்ட்ரிக்ட் போலீசாக வரும் சாய்குமார் சிறிது நேரம் வந்து மிரட்டிவிட்டு செல்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் 'மாலை நேர மல்லிப்பூ' பாடல் மட்டும் கேட்கும் ரகம். எடிட்டர் லியோ ஜான் பால் கத்திரியை நன்றாகப் பயன்படுத்தி படத்தை காப்பாற்றியுள்ளார். கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் வெறும் காமெடியை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார் இயக்குனர் ஜான்சன். ஒரு முழுநீள படத்தில் தீவிரமான எந்த உணர்வுமே இல்லாமல் வெறும் காமெடி மட்டும் போதுமா? சீரியஸான, முக்கியமான ஓரிரு காட்சிகளுக்குள்ளும் காமெடியை சேர்த்திருக்கிறார்கள்.
A1 - எதுவும் வேண்டாம், இருபது முறை சிரித்தால் போதும் என்றால் பார்க்கலாம்.