Skip to main content

பரத்திற்கு 'கம் பேக்' கொடுத்ததா காளிதாஸ்? காளிதாஸ் - விமர்சனம்

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து சில பெண்கள் மாடியிலிருந்து விழுந்து மரணமடைகின்றனர். இதனை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக பரத். இவர் தன் குடும்பத்தை சிறிதும் கவனிக்காமல் பணியிலேயே முழு நேரத்தையும் செலவழிக்கிறார். அதுவும் இந்த தொடர் மரணங்களை விசாரிக்கத் தொடங்கிய பின்னர் தன் காதல் மனைவிக்கு சற்றும் நேரம் ஒதுக்காமல் இரவு பகலாக பணியில் ஈடுபடுகிறார். பரத் தன்னை சரியாகக் கவனிக்காததால் கடும் கோபம், ஏமாற்றம், ஏக்கம் கொண்டிருக்கும் இவரது மனைவி ஆன் ஷீட்டல் தன் வீட்டு மாடியில் புதிதாகக் குடிவரும் ஆதவ் கண்ணதாசனுடன் நட்பு கொள்கிறார். இருவரும் பரத் இல்லாத சமயத்தில் நெருக்கமாகின்றனர். இன்னொருபுறம், கொலைகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் தொடர்வதால் பரத்துடன் சேர்ந்து விசாரணை நடத்த உயர் அதிகாரி சுரேஷ் மேனன் அப்பாயின்ட் செய்யப்படுகிறார். இருவரும் சேர்ந்து பெண்கள் இறப்பிற்கு பின்னால் இருக்கும் மர்மங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். பெண்களின் தொடர் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன, நாயகி ஆன் ஷீட்டல் - ஆதவ் கண்ணதாசன் காதல் என்னவானது என்பதை சஸ்பென்ஸ் - இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக சின்னச் சின்ன அதிர்வுகள், ஆச்சரியங்கள் நிறைத்து சொல்கிறது இயக்குனர் ஸ்ரீசெந்திலின் 'காளிதாஸ்'.

 

bharath kalidass



பரத்தின் சமீபத்திய சில படங்களினால், அதிக எதிர்பார்ப்பில்லாமல் செல்வோருக்கு ஆச்சரியத்தை கொடுப்பது பரத் மட்டுமல்ல படமும்தான். நாயகன் காவல்துறை அதிகாரியாக இருந்தால் கொடுக்கப்படும் வழக்கமான பில்ட்-அப்புகள் எதுவுமில்லாமல் மிக அமைதியாக, தெளிவாக, பக்குவமாக இருக்கின்றன நாயகன் பாத்திரமும், திரைக்கதையும். படத்தின் முதல் காட்சியே ஒரு மரணத்துடன் தொடங்குவது, ஆர்வத்தை உண்டாக்கி தொடரும் விசாரணை அந்த புதிரை தக்கவைக்கிறது. சுரேஷ் மேனன் - பரத் டீம் மிக இயல்பான, அதே நேரம் நாம் அதிகம் பார்த்திராத ஒரு காவல்துறை டீமாக இருப்பது ஃப்ரெஷ்ஷான உணர்வை அளிக்கிறது. சீரியஸான விசாரணைக்கிடையே நடக்கும் பெர்சனல் உரையாடல்கள், கான்ஸ்டபிள் பேசும் காமெடிகள் என சின்னச் சின்ன சுவாரசியங்கள் படத்தை நகர்த்துகின்றன. இது போன்ற சஸ்பென்ஸ் படங்களின் வெற்றி, இரண்டு மிக முக்கியமான அம்சங்களை சார்ந்திருக்கிறது. ஒன்று, அந்த சஸ்பென்ஸ் புதிர், இறுதிவரை உயிர்ப்புடன் தொடர்வது. இன்னொன்று, புதிர் விலகி விடை தெரியும்போது அது நமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பத்தகுந்ததாகவும் இருப்பது. இந்த இரண்டும் சிறப்பாக அமையப்பெற்ற சஸ்பென்ஸ் படங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வெற்றி பெறும். அந்த வகையில் முதல் அம்சத்தில் முழுவதுமாக வெற்றி பெற்றுள்ள காளிதாஸ், இரண்டாம் அம்சத்தில் சற்றே தவறவிட்டுள்ளது.

 

 

ann



பரத், தனது இரண்டாவது இன்னிங்ஸ் முயற்சியில் செய்திருக்கும் நல்ல தேர்வு இது. காவல்துறை ஆய்வாளர் பாத்திரத்துக்கு ஏற்ற மிடுக்கும் அதே நேரம் பக்குவமும் கொண்டவராகப் பொருந்திப் போகிறார். வீட்டில், தன் மீதுள்ள கோபத்தில் மனைவி அவமதிப்பதை எதிர்கொள்கையில் நல்ல முதிர்ச்சியான நடிப்பு. பரத்தின் உயரஅதிகாரியாக வரும் சுரேஷ் மேனன், கெத்தான அமைதியான பேச்சிலும் அணுகுமுறையிலும் ஈர்க்கிறார். அவரது உயரம் கம்பீரத்தை கூட்டுகிறது. ஆன் ஷீட்டல், ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆதவ் கண்ணதாசன், தன் பாத்திரத்துக்குத் தேவையான அளவு நடித்துள்ளார்.

 

suresh menon



தமிழ் சினிமாவிற்கு 'நாளைய இயக்குனர்' தந்த நல்ல இயக்குனர்களில் ஒருவராகும் வாய்ப்பு ஸ்ரீசெந்திலுக்கு இருக்கிறது. எளிமையான, சின்ன வட்டத்திற்குள் நடக்கும் கதையை இயன்ற அளவு சுவாரஸியத்தோடும் அழகியலோடும் சொல்லியிருக்கிறார். விஷால் சந்திரசேகர், பின்னணி இசையில் இரண்டு பேட்டர்ன்களை கையாண்டுள்ளார். மரணம் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகளில் ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் இசையும், நாயகியின் தனிமை மற்றும் நாயகன் - நாயகி காட்சிகளில் ஒரு மென்மையான பாடல் போன்ற இசைக்கோர்வையை பயன்படுத்தியுள்ளார். படத்திற்கு பலமாக அமைந்துள்ளது இந்த முயற்சி. ஆனால், மீண்டும் மீண்டும் ஒலிக்கும் அந்த 'ஆடவன்...' என்ற பாடல் சற்று ஓவர்டோஸாகி அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு இருளையும் ஒளியையும், நிழலையும் கூட சரியாகப் பயன்படுத்தி த்ரில்லிங் உணர்வை தருகிறது. அவ்வப்போது இடம்பெறும் ட்ரோன் ஷாட்கள் சிறப்பு. படத்தை ஸ்லீக்காகத் தொகுத்திருக்கிறார் புவன் ஸ்ரீனிவாசன். பரத்தின் வீடு மிக அழகாக வடிவமைக்கப்பட்டு நம்மை கவர்கிறது. கென்னடியின் கலைவடிவம் சிறப்பு.

காதல் பருவத்தின் போது பகிர்ந்து கொள்ளும் நேரமும் மகிழ்ச்சியும் காதலும் திருமணத்திற்குப் பின் குறைவது எந்த எல்லைக்குக் கொண்டு போகும் என்ற படத்தில் மறைந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை தருகிறது. அதே நேரம், இல்லாத ஒன்றை கற்பனை செய்துகொள்ளும் நோய் எந்த எல்லைக்கு செல்லும் என்று படத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படும் செய்தி, சற்று நம்பத்தகாததாக இருக்கிறது. அதை மட்டும் பொறுத்துக்கொண்டால், காளிதாஸ் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் அனுபவமே. பரத்திற்கு ஒரு இடைவெளிக்குப் பிறகு 'கம்-பேக்' கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.   

 

 

 

சார்ந்த செய்திகள்