![writer sura](http://image.nakkheeran.in/cdn/farfuture/530apTw73bKge1EW8d4HeZasovhYtJEqjbitdlEwzCk/1635426945/sites/default/files/inline-images/74_14.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், '16 வயதினிலே' படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நடிகர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் திறமையையும் தாண்டி அதிர்ஷ்டமும் சேர வேண்டும். இயக்குநர் பாரதிராஜா வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு உதாரணமாகக் கூறுகிறேன். '16 வயதினிலே' திரைப்படம் மூலம் ஒரே இரவில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர் இயக்குநர் பாரதிராஜா. முதல் படமே 175 நாட்கள் ஓடியது. படம் வெளியானபோது எல்லா பத்திரிகைகளிலும் பாரதிராஜா பற்றி கட்டுரைகள் எழுதின. ரா.சங்கரன், ஏ.ஜெகன்நாதன், அவிநாசி மணி, ஏ.எஸ்.பிரகாசம் உட்பட பல இயக்குநர்களிடம் நீண்ட காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, நிறைந்த அனுபவத்தைப் பெற்றவர் பாரதி ராஜா. இவ்வளவு அனுபவங்கள் இருந்தாலும் முதலில் கதாசிரியராக வேண்டும் என்றுதான் பாரதிராஜா விரும்பினார்.
ஒரு கட்டத்தில் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளரான எஸ்.ஏ.ராஜ்கண்ணு படம் தயாரிப்பில் இறங்க முடிவெடுக்கிறார். அதற்காக நல்ல கதையை அவர் தேடிக்கொண்டு இருந்தார். இந்த விஷயம் தெரிந்து நேரில் சென்று எஸ்.ஏ.ராஜ்கண்ணுவை சந்தித்த பாரதிராஜா தன்னிடம் இருந்த மூன்று கதையை அவரிடம் கூறுகிறார். அதில், மயிலு என்று பாரதிராஜா பெயர் வைத்திருந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அந்தக் கதையை தேர்வு செய்கிறார். கதையை அவர் தேர்வு செய்தவுடன் மயிலு என்ற நம்முடைய கதையை எஸ்.பி.முத்துராமன் அல்லது தேவராஜ் - மோகன் இயக்குவார்கள் என பாரதிராஜா மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பாரதிராஜாவே எதிர்பார்க்காத வகையில் ஒரு இன்ப அதிர்ச்சியை எஸ்.ஏ.ராஜ்கண்ணு கொடுத்தார்.
தன்னுடைய பையில் இருந்து ஐந்து ரூபாயை எடுத்து பாரதிராஜாவிடம் கொடுத்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இந்தப் படத்திற்கு நீதான் இயக்குநர்... இது உனக்கான அட்வான்ஸ் எனக் கூறியுள்ளார். கதாசிரியராக சென்ற பாரதிராஜாவின் கதை கூறும் விதத்தைக் கண்டு எஸ்.ஏ.ராஜ்கண்ணு இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார். உடனே அலுவலகம் போட்டு படத்தின் வேலையைத் தொடங்கினார்கள். அந்தப் படம்தான் '16 வயதினிலே' என்ற பெயரில் உருவானது. படம் வெளியானபோது தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு வெளியேயும் பெரிய அளவில் பேசப்பட்டது.
'16 வயதினிலே' படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தைக் கூறுகிறேன். அந்தக் காலத்தில் ஃபிலிமில்தான் படம் எடுப்பார்கள். ஆயிரம் அடி ரீல் நானூறு ரூபாய். ஈஸ்ட்மேன் ஃபிலிம் என்றால் விலை இதைவிடக் கூடுதலாக இருக்கும். 16 வயதினிலே திரைப்படம் விலை குறைவான ஃபிலிமில்தான் எடுக்கப்பட்டது. ஒருநாள், கமல்ஹாசன் நடித்த காட்சியை படமாக்கி கொண்டிருக்கையில் ஃபிலிம் தீர்ந்துவிடுகிறது. ஷூட்டிங்கை ஃபிலிம் இல்லாமல் நிறுத்தினால் தயாரிப்பு நிறுவனம் பற்றி தவறாக நினைப்பார்கள் என்று நினைத்து ஃபிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓடவிட்டுள்ளனர். இந்த விஷயம் பாரதிராஜாவிற்கும் ஒளிப்பதிவாளர் பி.எஸ். நிவாஸிற்கு மட்டும்தான் தெரியும். சிறிது நேரம் கழித்து பாரதிராஜாவை நோக்கி வந்த கமல்ஹாசன், ஃபிலிம் இல்லாமல் என்ன ஷூட்டிங் பண்றீங்கனு சிரித்துக்கொண்டே கேட்டுள்ளார். ஃபிலிம் இல்லை என்பதை நீ எப்படி கண்டுபிடிச்ச என பாரதிராஜா கேட்க, ஃபிலிம் ரோல் ஆகுற சத்தமே வரலையே எனக் கமல்ஹாசன் கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் பாரதிராஜா ஷூட்டிங் பண்ணிக்கொண்டு இருக்கும்போது என்ன தேனிக்காரரே ஃபிலிம் இருக்கா இல்லையா என கமல்ஹாசன் கிண்டலாகக் கேட்பாராம்.