Skip to main content

உங்களுக்குப் பிடிக்கல; ஆனால் மக்களுக்குப் பிடிச்சிருக்கு... பத்திரிகையாளரை அதிரவைத்த டி.ராஜேந்தர்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

T. Rajendar

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நடிகர் டி.ராஜேந்தர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வாழ்க்கையில் தன்னம்பிக்கை என்பது மிகமுக்கியம். அது இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும். தன்னம்பிக்கையின் சின்னம் என்பதற்குப் பல துறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான மனிதர்களை உதாரணமாகக் கூறலாம். அந்த வகையில், நடிகர் டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கை குறித்து உங்களுக்குக் கூறுகிறேன். 1980ஆம் ஆண்டு முதல்முறையாக டி.ராஜேந்தரை நான் சந்தித்தேன். இப்போது அவரிடம் இருக்கும் தன்னம்பிக்கை, அன்றும் அவரிடம் இருந்தது. அப்போது 'பிலிமாலயா' பத்திரிகையில் இணையாசிரியராக நான் பணியாற்றிவந்தேன். அந்தச் சமயத்தில் என் நண்பர் ஒருவர், 'ஒரு தலை ராகம்' படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதிய டி.ராஜேந்தர் தற்போது ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார், அவரை உங்கள் பத்திரிகைக்காக நேர்காணல் செய்யுங்கள்... நல்ல திறமையான மனிதர் என என்னிடம் கூறினார்.  டி.ராஜேந்தர் இயக்கிய முதல் படமான 'வசந்த அழைப்புகள்' படம் அப்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, 'ரயில் பயணங்கள்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். நானும் அவரை நேர்காணல் செய்யத் தயாரானேன். அவரை நேர்காணல் செய்வதற்கு முந்தைய நாள் அவர் இயக்கிய முதல்படமான 'வசந்த அழைப்புகள்' படத்தை திரையரங்கில் பார்த்தேன். படம் வெளியாகி அன்று 99ஆவது நாள். படம் எனக்குப் பிடிக்கவில்லை. 

 

writer sura

 

மறுநாள், நேர்காணல் செய்வதற்காக 'ரயில் பயணங்களில்' படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். ஸ்ரீநாத் கதாநாயகன், 'புதுக்கவிதை' ஜோதி கதாநாயகி எனப் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் டி.ராஜேந்தர். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மயிலை குருபாதம். படத்திற்கு ஃபைனான்ஸ் வழங்கியவர் கீதாலயா முருகேச கவுண்டர். படப்பிடிப்பு தளத்தில் முருகேச கவுண்டர் சேர் போட்டு அமர்ந்து படப்பிடிப்பை கவனித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அதுபற்றி முருகேச கவுண்டரிடம் டி.ராஜேந்தர் விளக்குவார். அது பார்ப்பதற்கு எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால் ஒரு ஃபைனான்சியரிடம் படத்தின் கதை குறித்தும் எடுக்கப்படும் காட்சிகள் குறித்தும் விளக்க வேண்டிய அவசியமேயில்லை. இன்று டி.ராஜேந்தர் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய ஆரம்பக்கால தன்னடக்கம்தான் காரணம்.

 

படப்பிடிப்பு தளத்தில் நேரங்கிடைத்தபோது எனக்குப் பேட்டியளித்தார். அப்போது, வசந்த அழைப்புகள் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக அவரிடம் கூறினேன். உடனே அவர், நீங்க படம் பார்க்கும்போது எத்தனையாவது நாள்... தியேட்டரில் எத்தனை பேர் படம் பார்த்தார்கள்... 'நீலச் சேலை பறக்கையிலே'னு ஒரு பாட்டு வருதே அதுக்கு தியேட்டர்ல டான்ஸ் ஆடுனாங்களா... என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்க நானும் பதில் கூறிக்கொண்டே வந்தேன். 99ஆவது நாள் படம் பார்த்துருக்கீங்க... பாதி தியேட்டருக்கு ஆட்கள் இருந்திருக்காங்க... பாட்டுக்கு எந்திருச்சு டான்ஸ் எல்லாம் ஆடியிருக்காங்க... இதெல்லாம் படம் நல்லா இல்லாமலா நடந்திருக்கும் என்றார்.

 

உங்களுக்கு பிடிக்கலைன்னா படம் நல்லா இல்லன்னு அர்த்தம் இல்ல சார் எனக் கூறிவிட்டு ஓர் உதாரணத்தையும் கூறினார். இட்லி சாப்பிடுறீங்கனா சாம்பார் ஊத்தி சாப்பிடச் சிலருக்கு பிடிக்கும்... சிலருக்கு சட்னி ஊத்தி சாப்பிடப் பிடிக்கும்... சிலருக்கு ரெண்டும் சேர்த்து ஊத்தி சாப்பிட பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ரசனை இருக்கும் சார் என்றார். உங்களுக்குப் படம் பிடிக்கல... ஆனால் மக்களுக்குப் படம் பிடிச்சிருக்கு எனச் சிரித்துக்கொண்டே கூறினார். அது உண்மைதான். மக்களுக்குப் பிடித்த விஷயங்களை வைத்து படம் எடுத்ததால்தான் அவர் இன்றைக்கு இவ்வளவு பெரிய இடத்தில் உள்ளார்".

 

 

சார்ந்த செய்திகள்