![writer sura](http://image.nakkheeran.in/cdn/farfuture/j3zH_eK64mI8x_YNvCQK8f0CAJznhVFDPfSyhjblSAs/1636204719/sites/default/files/inline-images/78_33.jpg)
எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரகுவரன் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
கதாபாத்திரமாகவே வாழ்கிறார் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கூறுவார்கள். சிவாஜி கணேசன் போல பல நடிகர்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்து, அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். நடிகர் ரகுவரன் பற்றி உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். நடிகர் ரகுவரன் என்னுடைய நெருங்கிய நண்பர். ரகுவரனின் நடிப்பை நான் பக்கத்திலிருந்து பார்த்து ரசிப்பேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவரது அலுவலகத்தில் நானும் அவரும் அமர்ந்து இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருப்போம். பார்த்து ரசித்த படங்கள், படித்த கதைகள், நான் மொழிபெயர்த்த படைப்புகள் எனப் பல விஷயங்கள் பற்றி பேசுவோம். நான் சொல்வதை நடிகர் ரகுவரன் ஆர்வமாக கேட்பார்.
'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக நடிக்க ரகுவரன் ஒப்பந்தம் ஆனார். மலையாள நவீன இலக்கியத்தின் மாமன்னரான எம்.முகுந்தன் எழுதிய 'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. மறைந்த இயக்குநர் லெனின் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கினார். இந்திய மண்ணில் பிறந்த ஒருவனும் பிரான்சில் பிறந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் தன்னுடைய தாய் நாடான பிரான்ஸ் செல்ல வேண்டும் என முடிவெடுத்து, தன்னுடைய கணவரை அழைக்கிறாள். ஆனால், கணவன் தான் பிறந்த மண்ணான இந்தியாவை விட்டுச்செல்ல மனமில்லாமல் மனைவியையும் குழந்தையையும் மட்டும் அனுப்பி வைப்பான். இதுதான் 'தெய்வத்திண்டே விக்ரிதிகள்' படத்தின் கதை. இப்படத்தில் நடிகர் ரகுவரன் கிறிஸ்தவராக நடித்திருப்பார். கறுப்பு பேண்ட், கறுப்பு கோர்ட், அதனுள்ளே ஒரு வெள்ளை சட்டை அணிந்திருப்பார். கழுத்தில் பாதிரியார்போல ஒரு பெரிய சிலுவையும் அணிந்திருப்பார். இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே இந்த தோற்றத்திற்கு ரகுவரன் மாறிவிட்டார். அவர் வீட்டிற்கு எப்போது சென்றாலும் அதே உடையணிந்திருப்பார். படத்தில் அந்தக் கதாபாத்திரம் அடிக்கடி மவுத் ஆர்கான் வாசிக்கும் என்பதால் கையில் ஒரு மவுத் ஆர்கானும் வைத்திருப்பார்.
அந்த சமயத்தில் நான் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஷூட்டிங் தொடங்குவதற்குத்தான் இன்னும் பல நாட்கள் இருக்கின்றனவே... ஏன் இந்த கெட்டப்பிலேயே இருக்கிறீங்க என்றேன். அதற்கு ரகுவரன், இந்தப்படம் முடியுறவரை நான் ரகுவரன் கிடையாது. படம் முடிந்த பிறகுதான் இந்த சட்டை, சிலுவையை கழட்டுவேன் என்றார். ரகுவரனின் இந்தச் செயல் வினோதமாக இருந்தது. பின், கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. என்னை ரயில்வே ஸ்டேஷன்வரை உடன்வரும்படி அழைத்தார். நாங்கள் இருவரும் ரயில் ஏறுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தோம். மவுண்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சித்தும் காரை இயக்கமுடியவில்லை. வேறு வழியில்லாமல் ஆட்டோவில் செல்லலாம் என முடிவெடுத்து காரை விட்டு கீழே இறங்கினோம். அப்போது மாலை 5 மணி இருக்கும். அந்த ரோடு அவ்வளவு போக்குவரத்து நெரிசலாக இருந்தது. அங்கிருந்தவர்கள் ரகுவரனை எளிதில் அடையாளம் கண்டுவிட்டார்கள். கழுத்தில் சிலுவையுடன் இருப்பதை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டே சென்றனர். பின்னர், ரயில்வே ஸ்டேஷனுக்குள் அவர் நுழையும்போதும் அங்கிருந்தவர்கள் விநோதமாகப் பார்த்தார்கள்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம். இன்றைக்கு ரகுவரன் உயிருடன் இல்லை. என் நண்பன் ரகுவரனிடம் நான் பார்த்த அந்த வித்தியாசமான குணத்தை நினைத்து பார்க்கும்போது ரகுவரன் மீது இனம் புரியாத மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது.