Skip to main content

தன்னை கடவுளாகப் பார்த்தவருக்கு தக்க நேரத்தில் ஒரு லட்சம் கொடுத்து உதவிய இளையராஜா!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், ‘என்னருகே நீயிருந்தால்’ பட வெளியீட்டிற்கு தக்க நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து இளையராஜா உதவியது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

“ஒரு மனிதருடைய நற்செயல்கள்தான் அவர் மீது இனம் புரியாத அன்பையும் மிகுந்த மரியாதையையும் நமக்கு ஏற்படுத்தும். அந்த வகையில், நான் தற்போது கூறும் விஷயம் இளையராஜா மீது உங்களுக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தும். எனக்கு இந்திரகுமார் என்றொரு நண்பர் இருந்தார். இலங்கைத் தமிழரான அவர் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். தீவிர ரசிகர் என்பதைவிட தீவிர பக்தர் எனக் கூறலாம். இளையராஜாவைக் கடவுள்போல பார்க்கும் உலகத் தமிழர்களில் அவரும் ஒருவர். லண்டனில் வசித்துவந்த அவர், 1991ஆம் ஆண்டு திரைப்படம் தயாரிக்கும் எண்ணத்தோடு தமிழகம் வருகிறார். அப்படி அவர் தயாரித்த படம் 'என்னருகே நீயிருந்தால்'. காதல் படமான இப்படத்தை சுந்தர் கே. விஜயன் இயக்கினார். அவரும் எனக்கு மிக நெருங்கிய நண்பர். இந்தப் படத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் நான் பணியாற்றினேன். இளையராஜாதான் படத்திற்கு இசையமைத்தார். இந்திரகுமார் படமெடுக்க வந்ததே தன்னுடைய தயாரிப்பில் இளையராஜாவை இசையமைக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒ உன்னாலே நான் பெண்ணானேன்..' பாடல் இன்றைக்கும் பிரபலமாக உள்ளது. அந்தப் பாடல் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும்போது வேறொரு உலகத்திற்கே நாம் சென்றுவிடுவோம். 

 

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இறுதியில், போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் எல்லாம் நிறைவடைந்து படம் ரிலீசிற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. படத்தில் கதை ஆழமாக இல்லை என்று கூறி அவர்கள் வாங்க தயக்கம் காட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் இந்திரகுமாரே சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் இந்திரகுமாருக்கு பெரிய அளவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது. பிரிண்ட் எடுப்பதற்குக் கொடுக்க அவரிடம் பணம் இல்லை. அவர் லண்டனில் இருந்து அப்போதுதான் இங்கு வந்திருப்பதால் வேறு யாருடனும் அவ்வளவு பழக்கம் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் அவரை நம்பி யாரும் பைனான்ஸும் தர மாட்டார்கள். உடனே, இந்திரகுமார் எடுத்த முடிவுதான் அனைவருக்கும் ஆச்சரியம்.

 

இந்திரகுமார் நேராக இளையராஜா வீட்டிற்குச் சென்றார். அவரிடம் பணம் இல்லாததால் படத்தைப் பிரிண்ட் எடுக்க முடியவில்லை என்றும் தனக்கு இங்கு யாரையும் தெரியாததால் யாரிடமும் கடன் வாங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதனால் உங்களிடம் பணம் கேட்கலாம் என நினைத்து வந்தேன் என இந்திரகுமார் கூறியதும் எவ்வளவு பணம் தேவை என்று இளையராஜா கேட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்வரை தேவைப்படுகிறது என அவர் கூற, அந்தப் பையை எடுத்துக்கொள்ளுங்கள் என ஒரு பையைக் காண்பித்துள்ளார் இளையராஜா. சிறிது நேரத்திற்கு முன்புதான் தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிட்டு அதற்கான அட்வான்ஸ் பணமாக ஒரு லட்ச ரூபாயை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். அந்தப் பணத்தை அப்படியே எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார் இளையராஜா. இது எவ்வளவு பெரிய விஷயம் என்று பாருங்கள். இளையராஜா அந்தப் பணத்தைக் கொடுத்தது தான் இசையமைத்த படம் என்பதற்காக அல்ல. தன்னைக் கடவுளாகப் பார்க்கும் ரசிகர் ஒருவர் தயாரித்த படம் என்பதற்காகத்தான். வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்தப் பணத்தை இளையராஜா கொடுத்தார். 1991இல் ஒரு லட்சம் என்றால் எவ்வளவு பெரிய தொகை என்று யோசித்துப் பாருங்கள். இந்த விஷயத்தை இந்திரகுமார் என்னிடம் கூறியதும் எனக்குப் பெரிய ஆச்சரியம். சினிமாக்காரர்கள் என்றால் வாங்கித்தான் பழக்கம்; கொடுத்துப் பழக்கம் இல்லை என்பார்கள். இது கொஞ்சம் உண்மையும்கூட. ஆனால், தன்னுடைய ரசிகருக்காக இளையராஜா செய்த இந்த மாபெரும் உதவி சாதாரணதல்ல. பின்பு அந்தப் பணத்தை வைத்துதான் ‘என்னருகே நீயிருந்தால்’ படத்தை இந்திரகுமார் வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்