![nasser](http://image.nakkheeran.in/cdn/farfuture/OmsVD_Yr58QkneuqitFq0s70zobOfNDXoxpJw4EPo74/1635841243/sites/default/files/inline-images/85_23.jpg)
எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் நாசர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
'ஆகாயத்தாமரைகள்' என்ற படத்தின் படப்பிடிப்பு ஒட்டன்சத்திரத்தில் நடந்தது. அந்தப் படத்தில் கதாநாயகனாக சுரேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்தார். சத்யராஜ் ரேவதிக்கு அண்ணனாக நடித்திருந்தார். என்னுடைய நண்பர் வி. அழகப்பன்தான் அந்தப் படத்தை இயக்கினார். நான் அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் என்பதால் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் செல்வேன். ஆர்.என்.கே. பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். அவருடன் இணைந்து கவியரசர் கண்ணதாசனின் மகனான கோபி கண்ணதாசன் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கண்ணதாசன் மீது எனக்கு இருந்த மரியாதை காரணமாக அவர் மகன் மீது எனக்கு தனிப்பிரியம் உண்டானது. கோபி கண்ணதாசன், அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.
ஒருநாள் அவருடன் பேசிக்கொண்டிருக்கையில், எனக்கு நாசர் என்றொரு நண்பர் இருக்கிறார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு பாலசந்தரின் 'கல்யாண அகதிகள்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்றார். அருமையான ஆர்ட்டிஸ்ட், மிகச்சிறந்த திறமைசாலி எனக் கூறிவிட்டு, இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகச்சிறந்த ஒரு நடிகர் கிடைப்பார் என உறுதியாகக் கூறினார். 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. அவர் கூறும்போதே நாசர் என்ற பெயர் என் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின், 'ஆகாயத்தாமரைகள்' படப்பிடிப்பை முடித்துவிட்டு நாங்கள் சென்னை திரும்பிவிட்டோம்.
சில வாரங்கள் கழித்து, புலவர் சிதம்பரநாதனை தி.நகர் பேருந்து நிலையம் அருகே பார்த்தேன். அவர் செங்கல்பட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு சினிமாவிற்கும் பாட்டெழுதிக்கொண்டிருந்தார். நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கும்கூட பாடல்கள் எழுதியுள்ளார். அந்த சந்திப்பில் புலவர் சிதம்பரநாதன், "இவன் பெயர் நாசர். என்னுடைய மாணவன்தான். அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்துவிட்டு பாலசந்தர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்" எனக் கூறி ஓர் இளைஞனை அறிமுகம் செய்துவைத்தார். தி.நகரில் 11ஏ பேருந்தில்தான் நாசரை முதன்முதலாக சந்தித்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்தில் நாசர் பற்றி கோபி கண்ணதாசன் கூறிய விஷயத்தை அவரிடம் கூறினேன். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த சில நாட்களிலேயே 'கல்யாண அகதிகள்' திரைப்படம் வெளியாகிவிட்டது. மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு திரையரங்கில்தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். நாசரின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய்விட்டேன். முதல் படத்திலேயே அவருடைய நடிப்புக்கு நான் ரசிகராகிவிட்டேன். குடித்துவிட்டு வந்து மனைவியைக் கொடுமைப்படுத்தும் வக்கிர புத்தியுள்ள கணவன் கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். வேறு எந்த வில்லன் நடிகரும் வெளிப்படுத்தாத ஒரு நடிப்பை நாசர் 'ஆகாயத்தாமரைகள்' படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். படத்தைப் பார்த்த பிறகு, நாசரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் மக்களை ரசிக்க வைக்கக்கூடியவராக நாசர் இருக்கிறார். நாசரின் வளர்ச்சியை அருகே இருந்து பார்த்தவன் நான். கடந்த 35 ஆண்டுகளில் நான்கு தலைமுறை உருவாகிவிட்டது. நான்கு தலைமுறைகளைக் கடந்தும் நடிகர் நாசர் ரசிகர்கள் மனதில் தொடர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருடைய திறமையும் அனைவரிடமும் எளிதாகப் பழகும் குணமும்தான்.