![writer sura](http://image.nakkheeran.in/cdn/farfuture/4ptxJ5yG1IMko06M6jPjIr59G15mR2QwM27dZM2fW0M/1629290714/sites/default/files/inline-images/52_25.jpg)
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் அஜித் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகர்கள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும்போது நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுவோம். சிறந்த நடிகர்களாக இருப்பவர்களில் எத்தனை பேர் நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள்? வெகுசிலர் மட்டுமே நல்ல மனிதர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வெகுசிலரில் நடிகர் அஜித்குமாரும் ஒருவர். நடிகை ரேவதியின் கணவர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர்கள் திரைப்படத்தில் அரவிந்த் சாமி நாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் அஜித் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நான் அந்தப்படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால் அஜித்துடன் அப்போது எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அதன் பிறகு, சில படங்களுக்காக அவர் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். பின், அஜித் படிப்படியாக வளர்ந்து மிகப்பெரிய நடிகர் அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் பற்றி ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டேன்.
நடிகர் அஜித்திடம் அம்பாஸிடர் கார் ஒன்று இருந்தது. அது நடிகர் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான கார். அம்பாஸிடர் காருக்கென்று தனி மவுசு இருந்த காலகட்டம் அது. அந்தக் காருக்கு டிரைவராக ஒருவர் அஜித்திடம் பணியாற்றினார். ஒருநாள், அந்த டிரைவர் தன்னுடைய திருமண அழைப்பிதழுடன் சென்று, தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும் நீங்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். நிச்சயம் வந்து வாழ்த்துவதாகக் கூறிய அஜித், அவரிடம் திருமண அழைப்பிதழை வாங்கிக்கொண்டார். அவருக்குத் திருமணப் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்த அஜித், உங்களுடைய தொழில் டிரைவிங். மாச சம்பளம் வாங்கிக்கொண்டு அப்படியே இருந்துவிட்டால் போதுமா? திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கப்போகிறீர்கள்... வீட்டு வாடகை, குடும்பச் செலவு, குழந்தைகள் பிறந்தால் குழந்தைகளுக்கான செலவு என நிறைய நெருக்கடிகள் உள்ளன.
அதனால் திருமணப் பரிசு என்ற முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான இந்த அப்பாஸிடர் காரை உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன். இந்தக் காரை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இந்தக் கார் இனி என்னுடைய கார் அல்ல. உங்களுடையது எனக் கூறியுள்ளார். தனக்கு மிகவும் பிடித்தமான காரை தன்னுடைய டிரைவருக்கு பரிசாக கொடுத்து, அதை உங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் எனக் கூறுவது எவ்வளவு பெரிய உயர்ந்த குணம் என்று யோசித்துப்பாருங்கள். இந்தத் தகவலை கேள்விப்பட்டதும் எனக்கு ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.