சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. சமந்தா நாயகியாக நடித்த இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஷால் பேசியபோது..."இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது".
தொடர்ந்து கையில் சொடக்கு போட்டுக்கொண்டே பேசிய விஷால்....இந்தப் படம் ரீலிசாகக் கூடாது என்று என்னை சுத்தவிட்டார்கள். நண்பர்கள் சிலர் காரை விற்றும் நிலத்தை அடமானம் வைத்தும் பணம் தர முன்வந்தார்கள். தயாரிப்பாளர் சங்கத் தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். தமிழ் திரைப்பட சங்கம் என்றைக்கும் நேர்மையாக நிலைக்கும். நீங்க என்னதான் ஆட்டம் போட்டாலும் அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற வைப்பதுதான் எங்கள் நோக்கம். நான் பார்த்த அந்த 10 மணி நேரம் என் வாழ்க்கையே புரட்டிப்போட்டது. எனக்கு அந்த வாழ்க்கை இன்றைக்கு கத்துகொடுத்துவிட்டது. அப்போதுதான் எனக்கு பணத்தின் அருமை தெரிந்தது. இந்தப் படம் டிஜிட்டல் இந்தியாவை எதிர்க்கிற படம் அல்ல. ஆதார் கார்டில் இருக்கக் கூடிய பிரச்சனையைத்தான் நாங்க மையப்படுத்திக் காட்டி இருக்கோம்.
சமுதாயத்தில் நடப்பதைத்தான் நாங்க படமாக எடுத்திருக்கிறோம். மேலும் இந்த ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது. இப்படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி. 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படம் நல்ல வெற்றிகரமாக ஓடி இருக்குனா அது சந்தோஷமான விஷயம். அதுபோல 'இரும்புத்திரை' படம் வெற்றிகரமாக ஓடி இருக்குனா அதுவும் சந்தோஷமான விஷயம்தான். மக்கள் ஒரே பாணியில் வரும் படத்தை மட்டும் ரசிக்காமல் எல்லா தரப்பையும் ரசிக்கிறார்கள். 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தை சென்சார் போர்டே அனுமதித்து வழங்கியிருக்கிறது. அதில் சொல்லக்கூடிய கருத்து மக்களுக்குத் தவறாக போய் சேர்ந்தது என்றால் அவர்கள் அடுத்த படம் எடுக்கும்போது சென்சார் போர்டு வழியாக கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்" என்றார்.