ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர், படக்குழுவினரை வாழ்த்தினார். அதில் ஷங்கர் குறித்து பேசுகையில், “நான் திரையரங்கில் அதிக திரைப்படங்களை பார்க்க மாட்டேன். ஆனால் நான் சென்னையில் இருந்த போது ஷங்கர் இயக்கிய ஜென்டில் மேன் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். காதலன் திரைப்படத்தை என் பாட்டியுடன் சென்று பார்த்தேன்” என ஜாலியாக பேசினார்.