இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படம் தமிழ் நாட்டில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 3 படம் உருவாகி வரும் நிலையில், லைகா நிறுவனம் ஷங்கர் அப்படத்தை முடித்துக் கொடுக்காமல் கேம் சேஞ்சர் படத்தை வெளியிடக்கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த புகாரில், இந்தியன் 3 படத்தை முடிக்க ஷங்கர் மேலும் ரூ. 65 கோடி கேட்பதாகவும், இந்தியன் 2-வில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால், அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என லைகா சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்திற்கு இன்னும் திரையரங்கு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.