தமிழில் காந்தர்வன், சிங்கம் புலி, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை ஹனி ரோஸ். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடைசியாக அம்மொழ்யில் வெளியான ‘ராணி’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
திரைப்படங்களைத் தாண்டி கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக சென்று கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஒரு நபர் தன் பெயரை தவறாக பயன்படுத்துகிறார் என குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஒரு நபர் இரட்டை அர்த்தத்தால் என்னை பேசி வருகிறார். அந்த நபர் என்னை விழாவிற்கு அழைத்தபோது, நான் போக மறுத்ததற்குப் பழிவாங்கும் விதமாக, அவர் வேண்டுமென்றே என் பெயரை தவறாக பயன்படுத்துகிறார். ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ஹனி ரோஸின் பதிவிற்கு அவரை துஷ்பிரயோகம் செய்யும் அளவிற்கு கமெண்ட் வந்ததாக எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார். அவரின் புகாரின் பேரில் கொச்சியை சேர்ந்த ஷாஜி என்பரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் 30 நபர்கள் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.