ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான படம் 'மாநகரம்'. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அந்தஸ்த்திற்கு உயர்ந்துள்ளார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 'மும்பைகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி எந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்பது குறித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஏற்ப படத்தின் திரைக்கதையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.