லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன், இளைஞர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அண்மையில் பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “ஊழியர்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை வாங்க முடியாததற்கு வருத்தம் அடைகிறேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை பார்க்க வைத்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். வீட்டில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்? எவ்வளவு நேரம்தான் வீட்டில் மனைவியின் முகத்தை உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வதாகவும், அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் வேலை செய்வதாகவும் எனது சீன நண்பர் ஒருவர் கூறினார். அதனால் சீனா அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி விரைவில் முன்னேறும் என்றும் கூறினார். ஆகையால் நாமும் உலகின் முன்னணி நாடாக வளர வேண்டும் என்றால் வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்றார். முன்னதாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என கூறியதை அடுத்து எஸ்.என்.சுப்பிரமணியன் இப்படி கூறியுள்ளார்.
ஏற்கனவே நாராயண மூர்த்தி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது சுப்பிரமணியன் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது. இருவர் பேசியதற்கும் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பால் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் திரைத்துறையிலும் தற்போது எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சுப்பிரமணியன் பேசியதற்கு, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதைப் பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு மனநலம் முக்கியம் என்றும் ஆங்கிலத்தில்(#mentalhealthmatters) என்ற ஹேஷ் டேக் ஒன்றையும் இணைத்துள்ளார்.